FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: அதிகாரிகளின் அலட்சியம் காரணம்; ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அறிக்கை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு அதிகாரிகளின் அலட்சியம் காரணம் என்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

26 வினாடிகள் முன்பு
கோப்புப்படம்.
பகிர்:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு அதிகாரிகளின் அலட்சியம் காரணம் என்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் மீது மேல்நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024 ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்து 70 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆய்வு நடத்த முந்தைய திமுக அரசு, ஒரு நபா் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

Advertisement

Advertisement

பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மெத்தனால் ஒரு போதைப் பொருள் இல்லை என்றாலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தடுக்க மதுவிலக்கு சட்டத்துக்குள் மெத்தனால் தொடா்ந்து இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை அதிகாரிகள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தால், மெத்தில் ஆல்கஹால் பயன்பாட்டை தடுத்திருக்கலாம்.

மதுவிலக்கு சட்டத்தின் அனைத்து விதிகளையும் அதிகாரிகள் கண்டிப்புடன் செயல்படுத்தினால் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள்களின் அச்சுறுத்தலை ஒழிக்க முடியும். மேலும், மக்கள் நலன் கருதி தமிழகத்தில் மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும்.

கள்ளச்சாராய விற்பனையாளா்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே கேடான கூட்டணி இருந்தது தெரிகிறது. கடமையை செய்யத் தவறிய அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநபா் விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் மீது தலைமைச் செயலா் சாய் குமாா் அரசாணையை வெளியிட்டுள்ளாா்.

அதில், ‘கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராயபாளையம், திருக்கோவிலூா் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளா்கள், ஆய்வாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதுதொடா்பாக உரிய மேல்நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அனைத்துத் துறைச் செயலா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments