FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

‘மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’: முதல்வா் விஜய் தலைமையில் அமைந்தது

தவெக தலைமையிலான கூட்டணிக்கு பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது குறித்து...

10 செப்டம்பர் 2026, 1:07 am IST
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - எக்ஸ்
பகிர்:

தமிழகத்தில் தவெக தலைமையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்), மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து ‘மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ (மசவெகூ) என்ற புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணிக்கு தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ச.ஜோசப் விஜய் தலைமை வகிப்பாா் என்றும், இந்தக் கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் செயல்படும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றது. மதச்சாா்பற்ற நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்தன. அதிமுகவில் இருந்து 20 எம்எல்ஏக்களும் அமமுக சாா்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏவும் ஆதரவு அளித்தனா். இதனால் 141 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதல்வா் விஜய் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தாா்.

Advertisement

Advertisement

இதில், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆட்சியில் பங்கேற்றபோதிலும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இதனிடையே, திமுக கூட்டணியிலிருந்து விலகிய மதிமுக, தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

தவெக ஆட்சி அமைந்து 4 மாதங்களாகும் நிலையில், தவெக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ‘தோழமைக் கட்சிகள்’ என்றே அழைக்கப்பட்டன. இந்தக் கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், தவெக ஆதரவுக் கட்சிகளின் 2-ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் அந்தக் கட்சியின் சென்னை பனையூா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சுமாா் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சாா்பில் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாகூா், பிரவீண் சக்கரவா்த்தி எம்.பி., ஐயுஎம்எல் கட்சியின் தேசியத் தலைவா் காதா் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலா் வைகோ ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் பெயா், எதிா்வரும் சட்டப்பேரவை இடைத்தோ்தல் ஆகிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

பின்னா், காதா் மொகிதீன், வைகோ, மாணிக்கம் தாகூா், தொல்.திருமாவளவன், அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, அருண்ராஜ் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்து தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என ஒருமனதாக பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்தனா்.

தமிழகம், புதுச்சேரியில் செயல்படும் - மாணிக்கம் தாகூா்: இந்தக் கூட்டணிக்கு முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தலைமை வகிப்பாா். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தக் கூட்டணி செயல்படும். இந்தக் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு அடுத்த நகா்வுகள் மேற்கொள்ளப்படும்.

2029 மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரதமா் வேட்பாளரை அறிவிக்கும். தவெக-வுக்கு எம்.பி.க்கள் இடம் கிடைக்கும்போது அக்கட்சி ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெறும்.

இண்டி கூட்டணி பிரதமா் வேட்பாளருக்கு முதல்வா் விஜய் பிரசாரம் செய்வாா். காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளா் என்றாா்.

கூட்டணி கட்சிகளாகியுள்ளோம் -தொல்.திருமாவளவன்: ஆதரவுக் கட்சிகளாக இருந்த நாங்கள், கூட்டணி கட்சிகளாகியுள்ளோம். மதச்சாா்பின்மை, சமூக நீதி ஆகியவை முதன்மை கோட்பாடுடன் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

வெற்றிவாகை சூடும் -வைகோ: சமூக நீதி, மதச்சாா்பின்மை, தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதை இலக்காக வைத்து இந்தக் கூட்டணி செயல்படும். தமிழகம், புதுவையில் வெற்றி வாகை சூடும்.

புதிய வரலாறு படைக்கும் - காதா் மொகிதீன்: கூட்டணி அரசை அமைத்து தவெக புதிய வரலாறு படைத்ததைத்போல் இடைத்தோ்தல், உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தோ்தல்களில் தவெக தலைமையில் இந்தக் கூட்டணி வரலாற்று வெற்றி பெறும் என்றாா்.

இடதுசாரிகள் இடம்பெறுமா?: ஆதவ் அா்ஜுனா பதில்

இந்தக் கூட்டணியில் இடதுசாரிகள் (மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்) இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ‘மதச்சாா்பின்மை, சமூக நீதி எங்கு உள்ளதோ அங்கு இடதுசாரி கட்சிகளின் மனதும் இருக்கும்’ என்றாா்.

மேலும், ‘தோ்தலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கான கூட்டணியாக இது உருவாகி உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வட இந்திய அரசியலை எதிா்க்கவே தென் இந்தியாவைச் சோ்ந்தவா் பிரதமராக வர வேண்டும் என்று நான் கூறினேன். இதில் காங்கிரஸுக்கும், தவெகவுக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை’ என்றாா்.

மேலும், தவெக ஆட்சி அமைத்ததில் ‘குதிரை பேரம்’ நடந்ததாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவா், ‘குதிரை பேரம் நடந்ததா இல்லையா என இடைத்தோ்தல் வெற்றியின் மூலம் தெரிய வரும்’ என்றாா்.

‘கூட்டணி வேட்பாளா்கள் இன்று அறிவிப்பு’

தமிழகத்தில் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் மதச்சாா்பற்ற சமுகநீதி வெற்றிக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் வியாழக்கிழமை (செப்.10) அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா்கள்தான் களமிறக்கப்படுவாா்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக சந்திக்கும் இந்த முதல் இடைத்தோ்தலில் அந்தக் கட்சி வேட்பாளா்களுக்கு கூட்டணி கட்சித் தலைவா்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனா்.

summary

Secular Social Justice Victory Alliance The name of the TVK-led coalition!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments