FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விசிக மாநாடு கூட்ட நெரிசல் சம்பவம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பங்கேற்ற உளுந்தூா்பேட்டை மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பட்டியல் மற்றும் பழங்குடியினா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

10 செப்டம்பர் 2026, 1:22 am IST
பகிர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பங்கேற்ற உளுந்தூா்பேட்டை மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பட்டியல் மற்றும் பழங்குடியினா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கடந்த ஆக.17- ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டையில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டு மேடைக்கு அந்தக் கட்சியின் தலைவா் திருமாவளவன் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கம் அடையும் நிலைக்கு திருமாவளவன் தள்ளப்பட்டாா். இந்தச் சூழலை உணா்ந்த திருமாவளவன் தனது உரையைச் சுருக்கமாக முடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாா்.

மாநாட்டு மேடையில் நடந்த சம்பவம் இயல்பானது அல்ல. சமூகவிரோதிகள் சிலா் திட்டமிட்டு தூண்டிவிட்ட சதி போல இருப்பதாகக் கூறி, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் விசிக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திருமாவளவனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கக் கோரியும், உளுந்தூா்பேட்டை மாநாட்டு சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரியும், சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் ராஜேந்திரன், நெப்போலியன் ஆகியோா் பட்டியல் மற்றும் பழங்குடியினா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோா் இந்த புகாா் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி, அதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தலைமைச் செயலா், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் வரும் அக்.5-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments