தமிழ்நாட்டில் ரூ. 10,000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் விதிமீறல்கள்! சிஏஜி அறிக்கை
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை...
தமிழ்நாட்டில் ரூ. 10,000 கோடியில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் மிகப்பெரிய அளவிலான விதிமீறல்கள் நடந்திருப்பதாக தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் ரூ. 10,000 கோடி நிதியில் மேற்கொள்ளப்பட்ட 11 ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரங்கள்) திட்டங்கள் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2015 முதல் 2023 ஆம் காலகட்டத்தில், சென்னை உள்பட தமிழ்நாட்டில் 11 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து நடத்தப்பட்ட தணிக்கையில், அவசர சூழல்களில் மட்டுமே திட்டங்களை நீக்க வேண்டும் என்ற ’மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின்’ வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, ரூ. 1,602.20 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், ரூ. 623.86 கோடி மதிப்பிலான 44 திட்டங்கள் புதிதாக மேற்கொள்ளப்பட்டன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மாநகராட்சிகள் நிதியின் கீழ் செயல்படுத்தியிருக்க வேண்டிய ரூ. 21.42 கோடி மதிப்பிலான 5 திட்டங்களை ஸ்மார்ட் சிட்டி நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக திருநெல்வேலியில் ரூ. 314.62 கோடி மதிப்பிலான 15 திட்டமிடாத திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அப்பகுதிக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 25.84 சதவிகிதமாகும்.
இதேபோல், சென்னை மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்ட பசுமை கட்டடம், கோயம்புத்தூர் நேரு விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட 'ஃப்ளட்லைட்' (floodlighting) வசதி, திருநெல்வேலியில் உள்ள விருந்தினர் இல்லம் மற்றும் மதுரையில் உள்ள கருத்தரங்கு மையம் ஆகிய திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி நிதியின் கீழ் அனுமதி பெறாத திட்டங்களாகும்.
சென்னையில் மாநில அரசின் விளம்பரங்களுக்காக ரூ. 66.58 லட்சமும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இல்லாத பணிகளுக்கான ஆலோசகர்களுக்கு ரூ. 18.44 லட்சம் சம்பளமும், மக்களை மறுகுடியமர்த்தும் பணிகளுக்கு ரூ. 15.33 கோடியும் செலவிடப்பட்டன.
திருப்பூர் மாநகராட்சியில் கருத்தரங்க அறையைப் புதுப்பிக்கவும், 110 அங்குல எல்இடி (LED) தொலைக்காட்சி, கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் தளபாடங்களை வாங்கவும் ஸ்மார்ட் சிட்டி நிதி செலவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் நிலத்தடி கழிவுநீர் அகற்றும் பிரிவு ஊழியர்களின் ஊதியத்தை வழங்க நிர்வாக மற்றும் அலுவலகச் செலவுகள் என்ற தலைப்பின் கீழ் ரூ. 2.59 கோடி, சேலம் மாநகராட்சியும் அதே தலைப்பின் கீழ் ரூ. 2.95 கோடி, மதுரை மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்குக் கட்டணம் செலுத்த ரூ. 48.36 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி நிதியை விதிகளை மீறி, 2021 ஆம் ஆண்டு ஜூலை - அக்டோபர் இடைப்பட்ட காலத்தில் எட்டு முறை ரூ. 1,127 கோடியை மாநிலத் துறைகளின் தனிப்பட்ட வைப்பு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னையைத் தவிர, மற்ற நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான முழுநேர தலைமைச் செயல் அதிகாரிகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மாநகராட்சி ஆணையர்களே கூடுதல் பொறுப்புகளை வகித்தது தெரியவந்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிதியை விதிகளை மீறி, அரசு அலுவலகங்களில் தொலைக்காட்சி, அதிகாரிகளுக்கு சொகுசு கார் போன்றவற்றை வாங்கவும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தலைமை கணக்கு தணிக்கையாளா் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Violations in Rs 10,000-crore Smart City projects in Tamil Nadu! CAG report
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.