மீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! தமிழகத்தில் புதிய சாலை, குடிநீர் திட்டங்கள்! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!
தமிழகத்தில் புதிய சாலை, குடிநீர் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பற்றி...
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புதிய சாலைகள், குடிநீர்த் திட்டங்களை முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் குடிநீர், பாதாள சாக்கடை, பூங்காக்கள், திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் உள்ளிட்டவையை மேம்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜோசப் விஜய், 110 விதியின் கீழ் இன்று அறிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
”நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வேகமாக அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக நகரங்களில் அடிப்படை தேவைகள் அதிகரித்துள்ளன.
பாதுகாப்பான மற்றும் தடையின்றி குடிநீரை மக்களுக்கு வழங்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டம் ரூ. 4,800 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேர குடிநீர் வசதியை வழங்க ரூ. 500 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாயும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.
சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ. 410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ. 2,400 மதிப்பீட்டில் நடப்பாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ. 960 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், சேலம் மாநகராட்சியில் ரூ. 291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், 'திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள்' (Waste to Energy Projects) செயல்படுத்தப்படும்.
சாலைகளைச் சீரமைக்க, புதிய சாலைகள் அமைக்க, சென்னை உட்பட அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூ. 1,850 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பள்ளிகளைச் சுற்றி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் (Safe Access to Schools) மற்றும் 105 சாலை (Improvement of Traffic Islands) ரூ. 110 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற மேம்பாட்டுப் பணிகள் ரூ. 165 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் ரூ. 130 கோடி செலவிலும், மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ. 175 கோடி செலவிலும், மொத்தம் ரூ. 305 கோடி செலவில் அமைக்கப்படும்.
புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் ரூ. 335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்த கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளைத் தரைக்கு அடியில் கொண்டு சென்று, வீதிகளை நவீன முறையில் சீரமைக்க ரூ. 36 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடலூரில் புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை ரூ.8 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை (Heritage Walk) அமைக்கப்படும்
கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ. 50 கோடி செலவிடப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிடப்படும்” எனத் தெரிவித்தார்.
Seawater desalination plant in Minjur! New road and drinking water projects in Tamil Nadu! Chief Minister announcements!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.