தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட், சிபிஐ(எம்) இரங்கல்
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருப்பது பற்றி...
சென்னை: மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். தனது தமிழ்ப் புலமையாலும், நகைச்சுவையினாலும் தமிழ்ப் பட்டிமன்றத்தை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்தவர். இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர். பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியவர். தமிழ் இலக்கியத்திற்கும், கலைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு பத்மஸ்ரீ, கலைமாமணி ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
Advertisement
Advertisement
தனது இளம் வயதில் இளமாறன் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் பேசியவர். 2025 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டின் போது நடைபெற்ற கலைவிழாவில் பங்கேற்று பேசியவர். ஆசிரியர் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், முற்போக்கு சிந்தனையாளர். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்ற கலைக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், பட்டிமன்ற ரசிகர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
சிறந்த தமிழறிஞரும், தமிழ்நாடு நன்கறிந்த பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (90) வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (செப். 11) காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தையும், வருத்தத்தையும் தருகிறது.
சாலமன் பாப்பையா, பிப்ரவரி 22, 1936 இல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள சாத்தான்குடியில் பிறந்தார். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.
தனது நகைச்சுவை ததும்பும் எளிய சொற்பொழிவால், வாதத் திறமையால், இனிய குரல் வளத்தால் தலைமுறைகளைத் தாண்டி அனைத்து பிரிவு மக்களையும் கவர்ந்தவர்.
திருக்குறள் மற்றும் பல பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளார். முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’,‘பத்ம ஸ்ரீ’ உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நினைவில் வாழும் மூத்த தலைவர்களான இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோருடன் மிகுந்த நட்பு பாராட்டியவர். தா.பாண்டியன், சாலமன் பாப்பையாவுடன் பல பட்டிமன்றங்களிலும் பங்கேற்று உரையாற்றி உள்ளார்.
சாலமன் பாப்பையா சிறந்த முற்போக்கு சிந்தனையாளர் ஆவார். அவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல்களின் இலக்கியச் செழுமையை அவர் தனது நூல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Condolence for the Death of Tamil Scholar Thiru Solomon Pappaiya
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.