முதல்வரின் ஆவேசப் பேச்சுக்கிடையே சப்தமில்லாமல் நிறைவேறிய தனியார் பல்கலை. மசோதா! எழும் கேள்விகள்!
முதல்வரின் ஆவேசப் பேச்சுக்கிடையே சப்தமில்லாமல் நிறைவேறிய தனியார் பல்கலை. மசோதா குறித்து எழும் கேள்விகள்
தனியாா் பல்கலை. நிலம் குறைப்பு திருத்த மசோதா, சட்டப்பேரவையின் இறுதி நாளில் பெரிய விவாதங்கள் இன்றி, பாமக, கம்யூ. கட்சி உறுப்பினர்களின் வலுவான எதிா்ப்புக்கு இடையே தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செப். 7ஆம் தேதி, சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில், அதுவும் திங்கள்கிழமை காலையில் முதல்வரின் ஆவேசமான பேச்சு தவெகவினரால் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாக்கப்பட்ட அதே நாளில்தான், சப்தமே இல்லாமல் தனியார் பல்கலை மசோதாவை தவெக அரசு நிறைவேற்றியிருக்கிறது.
திரைப்படத்தில் விஜயகாந்த், ஒரு வாழைப்பழத் தோலை அங்கே தூக்கி எறிவது போல பாசாங்குக் காட்டிவிட்டு, வேறொரு இடத்தில் எறிவார். அதுபோலவே, ஆவேசப் பேச்சால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிசா, சர்க்காரியா, தாடை உடைப்பு என நேர் - எதிர் கருத்துகளை அள்ளி வீசிக் கொண்டிருந்த நேரத்தில், பேரவையில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
அதில் ஒன்றுதான் தனியார் பல்கலை திருத்த மசோதா. இந்த மசோதா ஒன்றும் புதியது இல்லையாம். முந்தைய திமுக அரசும் இந்த மசோதாவைக் கொண்டு வந்து எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றாமல் கைவிட்டிருக்கிறது.
தமிழக அரசின் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியாா் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்தத்துக்கு வலுக்கும் எதிர்ப்பின் பின்னணி என்ன?
தனியாா் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு 100 ஏக்கருக்கும் குறையாத நிலம் தேவை, தனியாா் பல்கலைக்கழகம் கலைக்கப்படும் செலவுகளைச் சமாளிக்க, பல்கலையை நிறுவும் அமைப்பு ரூ.50 கோடி அறக்கட்டளை நிதியத்தை நிறுவ வேண்டும் என்று 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியாா் பல்கலைக்கழக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை முறைகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என அரசு நியமித்த பணிக்குழு பரிந்துரைத்தபடி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நிலப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தனியாா் பல்கலை அமைக்க 12 ஏக்கா் நிலம் தேவை, பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கா் நிலமும், கிராமங்களில் 25 ஏக்கா் நிலம் தேவை என்று அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், தனியாா் பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தேவையான நிலையான அறக்கட்டளை நிதியையும் குறைத்துள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் உயர் கல்வி தனியாா் மயமாக்குவதையும், வணிக மயமாக்குவதையும் ஊக்குவிக்கும் என பாமக உறுப்பினா் கணேஷ் குமாா் தெரிவித்தாா்.
இந்த சட்டத்திருத்தத்துக்கு கல்வியாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
பாமக உறுப்பினர் சொன்னது போல, உயர் கல்வி ஏற்கனவே நாடு முழுவதும் வணிகமயமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பெரிய அளவில் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன. சென்னையில் மாநகரப் போக்குவரத்துப் பேருந்துகளுக்கு இணையாக பள்ளி, கல்லூரிகளின் பேருந்துகள் ஓடுகின்றன. எனவே, வெறும் 12 ஏக்கர் என்பதால் சென்னைக்குள் பல்கலை.கள் வர வாய்ப்புள்ளது. இது நிச்சயம் தற்போதைய நெரிசலான சென்னைக்கு நல்லதேயில்லை.
எனவே, நிலப்பரப்பை மட்டும் அளவிட்டு பல்கலைக்கு ஒப்புதல் கொடுக்கக் கூடாது, எங்கு அமையலாம் என்பதற்கும் ஒரு வழிகாட்டுதல் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் 100 ஏக்கர் நிலம் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தால், அதில் பாதியைத்தானே நிர்ணயிக்க வேண்டும். மாறாக பத்தில் ஒரு மடங்காக எப்படி மாற்றுவது. சரி, ஏற்கனவே 12 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கும் கல்லூரிகள், இனி பல்கலைக்கழகங்களாக மாற்ற முனைய மாட்டார்களா? அரசு பல்கலையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள், தனியார் பல்கலையாக மாறினால் பாதிக்கப்படப்போவது மாணவர்களும் பெற்றோர்களும்தான்.
இப்படி ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான நிலப்பரப்பும், அறக்கட்டளை வைப்பும் எளிமையாக்கப்படும்போது, எவர் வேண்டுமானாலும், கல்வியை நோக்கமாகக் கொண்டிராத வெறும் லாபத்துக்காக செயல்படும் மற்றும் தரமற்ற தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாவதற்கு வழி வகுக்காதா?
முக்கிய சந்தைப் பகுதிகளுக்கு தலா ஒரு கடையை பிரமாண்டமாகத் திறப்பதுபோல, இனி தனியார் பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும். கிராமப் பகுதிகளிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டால், மாணவர்கள் நகரங்களுக்கு வரும் சிரமம் குறையும் என்று சொல்லித் தப்பிக்கவும் முடியாது. தனியார் பல்கலைக்கழகங்கள் நிச்சயம் கிராமப்புற மாணவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க மாட்டார்கள். மிகக் குறைந்த ஆசிரியர்களுடன் இயங்கும் தனியார் பள்ளிகளே சாலைக்கு ஒன்று என காளான் போல முளைத்து, கல்விக் கட்டணத்தை எட்டாக்கனியாக்கியிருக்கும்போது, இனி அவற்றுக்கு போட்டியாக தனியார் பல்கலைக்கழகங்களும் முளைக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஒரு பல்கலை என்றால், வகுப்பறைகளைக் கொண்ட கட்டடம், மாணவர் விடுதிகள், விளையாட்டு வளாகங்கள், ஆய்வுக் கூடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், திறந்தவெளி, விளையாட்டு பயிற்சிக் கூடங்கள், உணவகம், எதிர்காலத்தில் விரிவுபடுத்தத் தேவையான இடம், கலை அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்றவற்றை அமைக்கத் தேவையான அளவை கணக்கிட்டே 12 ஏக்கர் என்று நிர்ணயித்திருப்பதாக அரசு அதிகாரிகள் கூறினாலும், கிராமப் பகுதிகளிலும் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டிருக்கிறதே தவிர, தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்காக இல்லை என்று கூறினாலும்கூட, இத்தனை அவசரமாக, எந்த தகவலும் இல்லாமல், கடைசி நாளில் சப்தமே இல்லாமல் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலை. சட்டத்திருத்தம் பெரிய பெரிய நிறுவனங்கள் கல்வித் துறைக்குள் நுழைவதற்கான வாயிலாகவே இருக்கும். மாணவ, மாணவிகளுக்கு குறிப்பாக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பயனளிப்பதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருப்பதாக கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Private University Bill passed quietly amidst the Chief Minister's fiery speech! Questions arise!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.