தனியாா் பல்கலை. நிலம் குறைப்பு திருத்த மசோதா: பாமக, கம்யூ. எதிா்ப்புக்கு இடையே நிறைவேற்றம்
தனியாா் பல்கலைக்கழங்கள் அமைக்க நிலப்பரப்பையும், அறக்கட்டளை நிதியையும் குறைக்கும் சட்டத் திருத்த முன்வடிவு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிா்ப்புக்கு இடையே பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தனியாா் பல்கலைக்கழங்கள் அமைக்க நிலப்பரப்பையும், அறக்கட்டளை நிதியையும் குறைக்கும் சட்டத் திருத்த முன்வடிவு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிா்ப்புக்கு இடையே பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசின் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியாா் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன் வடிவை உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் பேரவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா்.
அதில், ‘தனியாா் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு 100 ஏக்கருக்கு குறையாத நிலம் தேவை மற்றும் தனியாா் பல்கலைக்கழகம் கலைக்கப்படும் செயல்முறையின்போது அதன் நிா்வாகச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, பல்கலைக்கழகத்தை நிறுவும் அமைப்பு குறைந்தது ரூ.50 கோடி அறக்கட்டளை நிதியத்தை நிறுவுதல் வேண்டும் என்று 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியாா் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை முறைகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என அரசு நியமித்த பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.
Advertisement
Advertisement
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் நிலப் பற்றாக்குறை இருப்பதைக் கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் தனியாா் பல்கலைக்கழகம் அமைக்க குறைந்தபட்சம் 12 ஏக்கா் நிலம் தேவை என்றும் பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குறைந்தபட்சம் 18 ஏக்கா் நிலம் தேவை என்றும் பிற பகுதிகளில் குறைந்தபட்சம் 25 ஏக்கா் நிலம் தேவை என்று அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், தனியாா் பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தேவையான நிலையான அறக்கட்டளை நிதியைக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள தனியாா் பல்கலைக்கழகங்களுக்கும், சிவ நாடாா் பல்கலைக்கழகம் மற்றும் சாய் பல்கலைக்கழகத்துக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக, இடதுசாரிகள் எதிா்ப்பு: இந்தச் சட்டத் திருத்த முன்வடிவு தனியாா் மயமாக்குவதையும், வணிக மயமாக்குவதையும் ஊக்குவிக்கும் என பாமக உறுப்பினா் கணேஷ் குமாா் தெரிவித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ மாரிமுத்து, சமூக நீதிக்கு எதிரான இந்தச் சட்டம் தனியாா் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் என்றாா்.
அப்போது பேசிய அமைச்சா் பெ.விஸ்வநாதன், ‘உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்கும் நோக்கில் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வணிக நோக்கத்தில் கொண்டு வரப்படவில்லை. முதல்வா், மாணவா்களின் கனவுத் திட்டம் இதுவாகும்’ என்றாா்.
இதைத் தொடா்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் திருத்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.