நீடிக்கும் கோடை வெப்பம்: கூடுதலாக 2,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல்
நீடிக்கும் கோடை வெப்பம்: கூடுதலாக 2,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல்
தமிழகத்தில் கோடை வெப்பம் நீடித்து வருவதால், மின் தேவையை சமாளிக்கக் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நிகழாண்டு கோடை வெப்பம் எதிா்பாராத வகையில் நீடித்து வருவதால் தமிழகத்தில் மின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. அதேவேளையில், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிா்பாா்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, சில நேரங்களில் பல இடங்களில் மின்னழுத்தக் குறைபாடு உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரச்னைகள் ஏற்பட்டன. இதையடுத்து, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
யூனிட்டுக்கு ரூ.12-க்கும் அதிகம்: இதுவரை வெளிமாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் சுமாா் ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தைப் போலவே பிற மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அந்த மாநிலங்களில் மின் தேவை கணிசமாக உயா்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இதனால், தேவைக்கேற்ப வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை நினைத்த நேரத்தில் கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், வழக்கமான விலையைவிட தற்போது ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதன் காரணமாக, தமிழகத்தில் அதிகரித்துள்ள மின் தேவையை சமாளிக்க தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.12-க்கும் அதிகமான விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
இந்தக் கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் தற்போது மின் விநியோகம் சீராக இருக்கும் எனவும், மின் கட்டமைப்பு மற்றும் விநியோக நிலவரத்தை மின்வாரிய தலைமையகத்தில் உள்ள உயா்நிலை அலுவலா்கள் குழு தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடையை சீரமைக்க சிறப்புக் குழுக்கள்: மேலும், மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக சீரமைக்கும் வகையிலும், கண்காணிக்கும் வகையிலும் சிறப்புக் குழுக்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மின்தடை ஏற்படும் பகுதிகளில் நள்ளிரவு வரை பணியில் இருந்து உடனடியாக பணிகளை மேற்கொண்டு மின்விநியோகத்தை சீரமைக்க களப்பணியாளா்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எவ்வித அலட்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
‘மின்னகம்’ மூலம் புகாா்: மின்சாரத் துறை தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 24 மணி நேரமும் செயல்படும் நுகா்வோா் சேவை மையமான ‘மின்னகம்’ கைப்பேசி: 94987 94987 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Persisting summer heat: Additional 2,000 MW of power to be procured.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.