FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்

தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்திருப்பது தொடர்பாக...

34 வினாடிகள் முன்பு
பாமக தலைவர் அன்புமணி - எக்ஸ்
பகிர்:

தெற்கு ரயில்வேயில் தொழில்பழகுநர் நியமனத்தில் வழக்கமான விதிகளை புறந்தள்ளிவிட்டு, தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் வெளியிட்டிருப்பதாவது:

தெற்கு ரயில்வேயின் தமிழக எல்லைக்குபட்பட்ட பணிமனைகளில் தொழில்பழகுநர்கள் பயிற்சிக்காக 6,171 தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான விதிகளை புறந்தள்ளிவிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கையின் முலம் தமிழகத்தில் உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க தெற்கு ரயில்வே முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரஜ் மற்றும் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை, கோவை போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை ஆகிய இடங்களில் 6,171 தொழில்பழகுநர் பயிற்சி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு இம்மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிக்கையில் தான் விதிமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

22.7.2002 தேதியிட்ட ரயில்வே வாரிய சுற்றறிக்கை மற்றும் 5.5.1984- தேதியிட்ட தொழில் பழகுநர் தேர்வு வழிகாட்டி விதிமுறைகளின்படி பணி இடங்களில் இருந்து100 கி.மீ சுற்றளவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால், இந்த விதியை மீறி வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தெற்கு ரயில்வேயில் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என 2019-ஆம் ஆண்டில் விதிகள் மாற்றப்பட்டன.

ஆனால், இந்த விதியும் தற்போது மீறப்பட்டுள்ளது. தொழில்பழகுநர் நியமன அறிவிக்கையில், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தட்சிண கன்னடா பகுதி, ஆந்திரத்தின் நெல்லூர், சித்தூர் பகுதி மற்றும் கேரளத்தில் இருப்பவர்களும், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற பிற மாநிலங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் பழகுநர் பணி பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதிக்க முடியாது.

கால் நூற்றாண்டுக்கும் கூடுதலாகவே தெற்கு தொடர்வண்டித்துறையில் உள்ள பணிகளை பிற மாநிலத்தவர் பறித்துக் கொள்கின்றனர். தொழில் பழகுநர் வாய்ப்புகளும் அதே போல் பறிக்கப்பட்டு வந்த நிலையில் தான், நீண்ட போராட்டத்தின் மூலம் 2019-ஆம் ஆண்டில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை மீட்டெடுக்கப்பட்டது. அந்த உரிமைக்கு தான் இப்போது மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

தமிழக இளைஞர்களின் தொழில்பழகுநர் வாய்ப்புகளை பறிக்கும் நோக்கம் கொண்ட அறிவிக்கையை தெற்கு ரயில்வே உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் இந்தப் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை சேர்த்து புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை தெற்கு ரயில்வே புதிதாக வெளியிட வேண்டும். இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

summary

Southern Railway has issued a notification to select 6,171 apprentices for training at workshops located within the Tamil Nadu jurisdiction of the Southern Railway

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments