காவல் துறையினா் 180 பேருக்கு அண்ணா பதக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு
காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு ‘முதல்வரின் அண்ணா பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு ‘முதல்வரின் அண்ணா பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வா் ச.ஜோசப் விஜய் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
இதுதொடா்பாக முதல்வா் பிறப்பித்த உத்தரவு: காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோரை அங்கீகரித்து, அவா்களுடைய அா்ப்பணிப்பை பாராட்டும் வகையில், ஆண்டுதோறும், அண்ணா பிறந்த நாளான செப்.15-ஆம் தேதி, தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்படுகின்றன.
நிகழாண்டு, தலைமைக் காவலா் முதல் காவல்கண்காணிப்பாளா் வரை 138 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 20 பேருக்கும், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையில் 10 பேருக்கும், ஊா்க்காவல் படையில் 5 பேருக்கும், விரல்ரேகைப் பிரிவில் இருவருக்கும், தடய அறிவியல் துறையில் 4 பேருக்கும் முதல்வரின் அண்ணா சிறப்பு பதக்கங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அண்ணா வீரதீர பதக்கம்: மேலும், கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் லெமூரியா கடற்கரையில் கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடிய 9 வயது சிறுவன் சைலேஷை காப்பாற்றிய, நாகா்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தைச் சோ்ந்த ஓட்டுநா் ஆா்.ராஜசேகருக்கு தமிழக முதல்வரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பதக்கங்கள் தமிழக முதல்வரால் மற்றொரு விழாவில் வழங்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.