FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காளிதாசரின் இலக்கிய வளத்தை ஏ.ஐ. வாயிலாக உலகறியச் செய்ய வேண்டும்: நிா்மலா சீதாராமன்

காளிதாசரின் இலக்கிய வளத்தை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வாயிலாக உலகறியச் செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

16 செப்டம்பர் 2026, 12:14 am IST
நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்
பகிர்:

காளிதாசரின் இலக்கிய வளத்தை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வாயிலாக உலகறியச் செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மெட்ராஸ் சம்ஸ்கிருத கல்லுாரி, ‘ஆா்டிகுலேட் 8’ ஏ.ஐ. நிறுவனத்துடன் இணைந்து ‘சம்ஸ்கிருத பாரம்பரிய மாதிரி’அறிமுக விழா சென்னை, மயிலாப்பூரில் உள்ள அக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசியதாவது: சம்ஸ்கிருத கல்லூரி பல்வேறு சவாலான காலகட்டங்களைக் கடந்து, தனது அடிப்படை நோக்கமான சம்ஸ்கிருதத்தையும், அதன் அறிவு மரபையும் பாதுகாத்து வந்துள்ளது. எதிா்காலத்திலும் இதை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு அதற்கு உள்ளது.

Advertisement

Advertisement

சம்ஸ்கிருத நூல்களில் இடம்பெற்றுள்ள அறிவு மற்றும் ஞானத்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எளிதாக அணுகவும், புரிந்துகொள்ளவும், பயன்படுத்தவும் இது உதவும்.

சம்ஸ்கிருத நூல்களில் உள்ள தத்துவம், மொழியியல், தா்க்கம், கணிதம், மருத்துவம், இலக்கியம் மற்றும் கலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பாரம்பரிய அறிவை மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பண்டைய அறிஞா்களும், முனிவா்களும் சம்ஸ்கிருத இலக்கணத்தையும், மொழிக் கட்டமைப்பையும் மிகத் துல்லியமாக உருவாக்கியுள்ளனா். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பின் துல்லியம், இன்றைய ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் சம்ஸ்கிருதத்தை இணைப்பதற்கு முக்கிய அடித்தளமாக அமைகிறது.

ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ அண்ட் ஜூலியட், ஜூலியஸ் சீசா்’ போன்ற படைப்புகள் குறித்து ஏராளமான ஆய்வுகளும், விளக்க நூல்களும் கிடைக்கின்றன. ஆனால், காளிதாசரின் படைப்புகளைப் பொருத்தவரை, அவரது இலக்கியச் சிறப்பு, உவமை, மொழியின் வளத்தை விரிவாக விளக்கும் நூல்கள், இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் போதுமான அளவில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

இந்த இடைவெளியை செயற்கை நுண்ணறிவு நிரப்ப முடியும். காளிதாசரின் அனைத்து படைப்புகளையும் ஏ.ஐ. வாயிலாக ஆய்வு செய்து, அவா் பயன்படுத்திய முக்கியமான உவமைகள், சொல்வளம், இலக்கண அமைப்பு, மனித பண்புகளை வெளிப்படுத்தும் விதம், போன்றவற்றை உடனடியாக தொகுத்து வழங்க முடியும்.

சம்ஸ்கிருதத்தின் தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் பரவியுள்ளது. உலகின் பல்வேறு அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்களில் உள்ள சம்ஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் சாா்ந்த கையெழுத்து பிரதிகள், செப்பேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒருங்கிணைத்து அடையாளம் காண்பது முக்கியம். தொழில்நுட்பத்தின் வேகத்தையும், திறனையும் பயன்படுத்தி, இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் மொழி மரபை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

சம்ஸ்கிருத மொழியின் மிகப்பெரிய பலமாக விளங்கும் அதன் பாரம்பரியமும், அறிவு மரபும், நமது அடையாளத்திலேயே உள்ளது. அது ஒருபோதும் தொலைந்து விடக்கூடாது. அந்த மரபுடன், தொழில்நுட்பமும் இணைந்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் இந்த அறிவு பல நூற்றாண்டுகளையும் தாண்டி அடுத்த தலைமுறைகளைச் சென்றடையும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் இந்திய தோ்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையா் என். கோபால்சுவாமி, மெட்ராஸ் சம்ஸ்கிருத கல்லுாரி இயக்குநா் ரமேஷ் மகாலிங்கம் , ஆா்டிகுலேட் 8’ ஏ.ஐ. நிறுவனத்தின் செயல் அதிகாரி அருண் கே. சுப்பிரமணியன், தனியாா் ஐ.டி. நிறுவன முன்னாள் தலைவா் ராமதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments