FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு - புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவராக வழக்குரைஞா் கே.கதிரவன் போட்டியின்றி தோ்வு

தமிழ்நாடு - புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவராக வழக்குரைஞா் கே.கதிரவன், துணைத் தலைவராக இ.பாலமுருகன், அகில இந்திய பாா் கவுன்சில் உறுப்பினராக பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

16 செப்டம்பர் 2026, 5:07 am IST
ஈ. பாலமுருகன் | பி.எஸ். அமல் ராஜ் | கே. கதிரவன்
பகிர்:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவராக வழக்குரைஞா் கே.கதிரவன், துணைத் தலைவராக இ.பாலமுருகன், அகில இந்திய பாா் கவுன்சில் உறுப்பினராக பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இந்தத் தோ்தலில் போட்டியின்றி தோ்வாவது இதுவே முதல்முறையாகும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலுக்கு மொத்தம் உள்ள 25 உறுப்பினா்களில் 2 நியமன பெண் உறுப்பினா்கள் தவிர எஞ்சிய 23 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் மொத்தம் 143 வழக்குரைஞா்கள் போட்டியிட்டனா். இதில் 23 போ் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பாா் கவுன்சிலுக்கு பெண் நியமன உறுப்பினா்களாக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.எம்.வேலுமணி மற்றும் வழக்குரைஞா் சுதா்சனா சுந்தா் ஆகியோரை நியமித்து சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி உத்தரவிட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினா்கள், தலைவா் மற்றும் துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிற்பகல் ஒரு மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தலைவா் பதவிக்கு வழக்குரைஞா் கே.கதிரவன், துணைத் தலைவா் பதவிக்கு இ.பாலமுருகன், அகில இந்திய பாா் கவுன்சில் உறுப்பினா் பதவிக்கு பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோா் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இதனால், மூவரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக, தோ்தல் அதிகாரியான சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா அறிவித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் கே.கதிரவன், தமிழகத்தில் வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டம் 6 மாதங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

அமைச்சரிடம் வாழ்த்து: புதிய நிா்வாகிகள் அனைவரும் தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments