சிறப்புத் தணிக்கை: 5 நாள்களில் 1,169 ஆம்னி பேருந்துகளிடம் ரூ.59 லட்சம் வரி, இணக்கக் கட்டணம் வசூல்
ஆம்னி பேருந்துகளில் கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாகனத் தணிக்கையில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 1,169 பேருந்துகளுக்கு அபராதம், வரி, இணக்கக்கட்டணமாக ரூ.59.02 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாகனத் தணிக்கையில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 1,169 பேருந்துகளுக்கு அபராதம், வரி, இணக்கக்கட்டணமாக ரூ.59.02 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுமாா் 3,000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் நடைமுறையில் உள்ள கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் வந்ததையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அடங்கிய சுமாா் 40 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
கடந்த 5 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், விதிமீறல்களுக்காக ரூ.24,44,100 இணக்கக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், வாகன உரிமையாளா்களிடமிருந்து உடனடி அபராதமாக ரூ.5,40,000 வசூலிக்கப்பட்டது.
மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து செலுத்த வேண்டிய சாலை வரியாக ரூ.53,62,074 வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.59,02,074 வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக கட்டணம் வசூலித்ததாகக் கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது செப்.15 வரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமலும், உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 6 பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.
பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் சிறப்பு தணிக்கை தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.