FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தனியார் கல்லூரிகளின் பிசி, எம்பிசி மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்! - அன்புமணி

தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கும் கல்விக்கட்டண உதவி வழங்க வேண்டுவது தொடர்பாக...

36 வினாடிகள் முன்பு
பாமக தலைவர் அன்புமணி - எக்ஸ்
பகிர்:

தமிழ்நாட்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கும் கல்விக்கட்டண உதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை உயர்வு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கட்டண உதவி மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும்.

Advertisement

Advertisement

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில், அரசு கலைக் கல்லூரிகளில் பயில இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை ஏற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆண்டு கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை கடந்த 2011 -ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படாத நிலையில், இப்போது பி.எஸ்சி, பி.காம் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2850-லிருந்து, 295% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஏ மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.1350-லிருந்தும், எம்.எஸ்சி, எம்.காம் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2850-லிருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பி.ஏ. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1350 உதவித் தொகை 733% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக வழங்கப்படும். பி.பி.ஏ மாணவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். இதுதவிர மேலும் 11 இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.11,250 வீதமும், 10 முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதமும் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதையும், பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டண உதவித் தொகை கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததையும் கனக்கில் கொண்டு பார்க்கும் போது இந்த உதவித்தொகை உயர்வு நியாயமானதும், தேவையானதும் ஆகும்.

அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு இத்தகைய கல்விக்கட்டண உதவிகள் வழங்கப்படுவதே இல்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவதால், அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ஒரு பிரச்னை இல்லை. ஆனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூக மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் கல்விக்கட்டண உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப் படுவதில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் 8,083 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரம் சீரழிந்திருப்பதால், பெரும்பான்மையான மாணவர்கள் அவற்றில் இடம் கிடைத்தாலும் தவிர்த்து விட்டு தனியார் கலைக் கல்லூரிகளில் சேரும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

எடுத்துக்காட்டாக, 2022-23ஆம் ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மாணவர் சேர்க்கை 96,000 ஆக குறைந்து விட்டது. அதேநேரத்தில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023 - 24ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 94,306 ஆக இருந்த முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, 2025-26ஆம் ஆண்டில் 2.60 லட்சத்தைக் கடந்திருக்கிறது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், அவர்களில் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

அவர்களிலும் கணிசமானவர்கள் கல்லூரிக் கல்விக் கட்டணம் செலுத்த வசதியற்றவர்கள். அவர்களில் பெரும்பான்மையினரின் பெற்றோர் கடன் வாங்கித் தான் கட்டணம் செலுத்துகின்றனர். இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு மாணவர்களோ, பெற்றோர்களோ காரணமல்ல. தமிழக அரசு தான் இதற்கு காரணம். அரசு கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும், அவற்றில் தகுதியான உதவிப் பேராசிரியர்களை நியமித்தும் தரமானக் கல்வியை வழங்கியிருந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. அதனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கட்டண சுமையை அரசு தான் ஏற்க வேண்டும்.

அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும். நடப்பு 2026-27ஆம் கல்வியாண்டிலிருந்தே இந்த உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

PMK President Dr Anbumani Ramadoss Statement

BC,BCM,MBC Students in Private Colleges Must Also Be Provided Annual Tuition Fees Scholarship!

summary

denying similar tuition fee scholarship to students belonging to Backward Classes (BCs), Most Backward Classes (MBCs) and minority communities is a grave social injustice

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments