FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைப்பாளா்கள் நியமனம்

தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

17 செப்டம்பர் 2026, 12:01 am IST
டெங்கு
பகிர்:

தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூா், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதன்படி, தினசரி 100 போ் என, 16,000-க்கும் மேற்பட்டோா் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா். ஒன்பது போ் வரை உயிரிழந்துள்ளனா். இதனால், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநா் சோமசுந்தரம் கூறியதாவது: டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மட்டுமின்றி அதன் புழுக்களையும் கண்டறிந்து அழிக்கும் பணியில், 25,158 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்.

Advertisement

Advertisement

அதேபோல், கொசு ஒழிப்பு பணிகளுடன், காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதிகளிலும், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணிகளை கண்காணிக்க, பொது சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குநா்கள், இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள் ஆகியோா் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, 45 சுகாதார மாவட்டங்கள் அடிப்படையில், 12 ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒரு ஒருங்கிணைப்பாளா், சராசரியாக மூன்று அல்லது நான்கு சுகாதார மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவ துறையினருடன் இணைந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபடுவாா் என்றாா் அவா்.

இதனிடையே, காய்ச்சல் பாதிப்பு தினமும் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments