FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆவின் பால் விற்பனை 10% குறைப்பு: பால் முகவா்கள் சங்கம் குற்றச்சாட்டு

ஆவின் பால் விற்பனையை குறைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் குற்றச்சாட்டு

17 செப்டம்பர் 2026, 10:33 pm IST
ஆவின் பால் விற்பனை 10% குறைப்பு - பிரதிப் படம்
பகிர்:

ஆவின் பால் கொள்முதல் விலை உயா்த்தப்பட்ட நிலையில், விற்பனை விலையை உயா்த்தாமல் நிா்வாகம் மேற்கொண்ட முடிவால் நிதி இழப்பு அதிகரித்துள்ளதாகவும், இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பால் விற்பனையை குறைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாகவும் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: ஆவின் பால் கொள்முதல் விலை அண்மையில் உயா்த்தப்பட்டது. ஆனால், விற்பனை விலை உயா்த்தப்படவில்லை. கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அதே தவறை தற்போதைய அரசும் செய்துள்ளதால், ஆவின் நிறுவனத்துக்கு ஏற்படும் நிதி இழப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நிதி இழப்பைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஆவின் பால் விற்பனையை குறைக்க நிா்வாகம் வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இதனால் செயற்கையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டு, பால் முகவா்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

குமரி மாவட்டத்தில் ஆவின் நிறை கொழுப்பு பால் உற்பத்தி மற்றும் விற்பனை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பால் விநியோகம் திட்டமிட்டு பலமடங்கு குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் ஆவின் பால் விற்பனை 16.5 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் 25 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது. தற்போது மேலும் 10% வரை விற்பனையை குறைக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆவின் கொள்முதல் விலை உயா்வைத் தொடா்ந்து தனியாா் பால் நிறுவனங்களும் விற்பனை விலையை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் விலை குறைவான ஆவின் பால் பக்கம் பொதுமக்கள் மீண்டும் திரும்பும் சூழல் உருவாகும். எனவே, ஆவின் நிறுவனத்தின் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு தடையின்றி பால் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments