2026 -லும் கல்விக்காக ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை! கனிமொழி பதிவு
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவர் பாரதிதாசன் விடியோ குறித்து திமுக எம்.பி. கனிமொழி பதிவு....
ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது என்று மாணவர் பாரதிதாசன் விடியோ குறித்து திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ளார்.
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தனக்கான அரசின் கல்வி உதவித் தொகை கடந்த ஏப்ரல் மாதம் முதல் கேட்டும் கிடைக்கவில்லை என்று கண்ணீருடன் வெளியிட்ட விடியோவுக்கு பலரும் ஆதரவுக் குரல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு கேள்வி எழுப்ப, மாணவர் பாரதிதாசன் மீண்டும் ஒரு விடியோ வெளியிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
அதில், "சமூகநீதித் துறையிலிருந்து என் மீதே குற்றம்சாட்டி வருகின்றனர். இப்போதே உண்மையை உடைத்துப் பேசவிருக்கிறேன். தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 8 ஆம் தேதி வரை ரூ. 36 லட்சம் கொடுத்திருக்கிறீர்கள். நான் அதற்கான ரூ. 37 லட்சத்துக்கான ரசீதை சமர்ப்பித்திருக்கிறேன். அதன்பின்னர், பல்கலைக்கழகம் வாயிலாக விளக்கம் கேட்டிருந்தீர்கள். அதனையும் அனுப்பியிருக்கிறேன். தற்போது நீங்கள் கொடுத்தது 6 மாதங்களுக்குத் தேவையான உதவித்தொகையும் அதுவும் முடிந்துவிட்டது. ஆராய்ச்சிக்குப் பணம் தேவைப்படுகிறது எனக் கேட்டிருந்தேன். அந்தப் பிரச்சினைக்கு இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
மீண்டும் மீண்டும் ரசீது சமர்ப்பிக்கவில்லை என்று சமூகநீதித் துறையிலிருந்து தவறான தகவல் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஜூன் 8 ஆம் தேதி அனுப்பிய ரசீதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கான ரசீதையும் அனுப்பியிருக்கிறேன். நான் அனுப்பிய குறுஞ்செய்திகள் ஸ்பேம் (Spam)-ல் இருக்கிறதா? என்று பாருங்கள். நான் எல்லா Bill-களையும் ஏற்கெனவே அனுப்பி விளக்கத்தையும் கொடுத்துவிட்டேன்.. ஆனால் மீண்டும் மீண்டும் சமூக நீதித்துறை என் மீது Narrative செட் செய்கிறார்கள்.. என் கனவை சிதைக்கிறீர்கள்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக,
"மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன?
கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே இந்த அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள்.
அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது.
என்றும், தி.மு.கழகமும் தமிழ்நாட்டு மக்களும் பாரதிதாசனின் கல்விக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் அண்ணன் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
A student has to shed tears for the sake of education, even in 2026: Kanimozhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.