அமைச்சர் வன்னி அரசின் அறிக்கைக்கு பதிலளித்து விடியோ வெளியிட்ட ஆய்வு மாணவர்!
அமைச்சர் வன்னி அரசின் அறிக்கைக்கு பதிலளித்து ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் விடியோ வெளியிட்டுள்ளதைப் பற்றி...
மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன் அமைச்சர் வன்னி அரசின் அறிக்கைக்கு பதிலளித்து விடியோ வெளியிட்டுள்ளார்.
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் பாரதிதாசன், 'இரண்டாம் ஆண்டு படிப்பிற்கு கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்கவில்லை' என சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டிருந்த விடியோவில், “ஏப்ரல் மாதத்தில் இருந்துதான், உதவித் தொகைக் கேட்டு வருகிறேன். ஆனால், இப்போது வரை கிடைக்கவில்லை. என்னை பல்கலையிலிருந்தே வெளியேற்றும் நிலை உருவாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
அரசிடமிருந்து தொடர்ந்து எனக்கு மின்னஞ்சல்கள் வந்தன. ஆனால், உதவித் தொகை மட்டும் இன்னும் வரவில்லை. என்னைப் படிக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா?” என கண்ணீருடன் விடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த விடியோ வெளியானதைத் தொடர்ந்து ஆளும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் முதல்வர் விஜய் மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர்.
ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனின் விடியோவுக்கு மறுப்புத் தெரிவித்த தமிழ்நாடு சமூக நீதி துறை, “பாரதிதாசனின் செலவின கோரிக்கை, ரூ. 19.50 லட்சம் தொடர்பாக பரிந்துரைத்து அனுப்பும்படி தெரிவித்து, அவர் படிக்கும் பல்கலைக்கு கடந்த 17ல், -'இ - மெயில்' அனுப்பப்பட்டது. அதன் நகல், அந்த மாணவருக்கும் அனுப்பப்பட்டது. பல்கலையிடம் இருந்து பதில் கிடைத்ததும் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும்.
இந்த தகவல், இ - மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர் பாரதிதாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட விடியோவில், உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார். அவரது படிப்புக்கு இதுவரை மொத்தம், ரூ. 48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் தெரிவித்த கருத்துக்கள், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளன” என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், சமூக நீதி அமைச்சர் வன்னி அரசுக்கு பதிலளித்து மாணவர் பாரதிதாசன் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில் மாணவர் பேசுகையில், “சமூகநீதித் துறையிலிருந்து என் மீதே குற்றம்சாட்டி வருகின்றனர். இப்போதே உண்மையை உடைத்துப் பேசவிருக்கிறேன். தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 8 ஆம் தேதி வரை ரூ. 36 லட்சம் கொடுத்திருக்கிறீர்கள். நான் அதற்கான ரூ. 37 லட்சத்துக்கான ரசீதை சமர்ப்பித்திருக்கிறேன். அதன்பின்னர், பல்கலைக்கழகம் வாயிலாக விளக்கம் கேட்டிருந்தீர்கள்.
அதனையும் அனுப்பியிருக்கிறேன். தற்போது நீங்கள் கொடுத்தது 6 மாதங்களுக்குத் தேவையான உதவித்தொகையும் அதுவும் முடிந்துவிட்டது. ஆராய்ச்சிக்குப் பணம் தேவைப்படுகிறது எனக் கேட்டிருந்தேன். அந்தப் பிரச்சினைக்கு இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
மீண்டும் மீண்டும் ரசிது சமர்ப்பிக்கவில்லை என்று சமூகநீதித் துறையிலிருந்து தவறான தகவல் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஜூன் 8 ஆம் தேதி அனுப்பிய ரசீதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கான ரசீதையும் அனுப்பியிருக்கிறேன். நான் அனுப்பிய குறுஞ்செய்திகள் ஸ்பேம் (Spam)-ல் இருக்கிறதா? என்று பாருங்கள். நான் எல்லா Bill-களையும் ஏற்கெனவே அனுப்பி விளக்கத்தையும் கொடுத்துவிட்டேன்.. ஆனால் மீண்டும் மீண்டும் சமூக நீதித்துறை என் மீது Narrative செட் செய்கிறார்கள்.. என் கனவை சிதைக்கிறீர்கள். நான் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன.
நான் சமூகநீதித் துறைக்கு ஒரு பணிவான வேண்டுகோளை விடுத்துக் கொள்கிறேன். எத்தனை பேர் இந்தத் திட்டத்தில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர் என்ற விவரத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாரும் முதுநிலைப் படிப்பு படிக்கின்றனர். அதற்கு ஓராண்டு கட்டணம், தங்கும் கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால், ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க வேண்டும், கட்டணம் செலுத்த வேண்டும், கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள வேண்டும், புத்தகங்கள் வாங்க வேண்டும்.
இந்தியாவிலும் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்றும் நினைத்து வந்தேன். மீண்டும் மீண்டும் தனிநபர் மீது தாக்குதல் நடத்துவது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது” என்றார் அவர்.
Bharathidasan, a student from Tamil Nadu pursuing research studies in Malaysia, has released a video in response to a statement by Minister Vanni Arasu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.