உடன்குடி அனல் மின் திட்டம், சிப்காட் உள்பட 7 திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த அரசாணை
தமிழ்நாட்டில் உடன்குடி அனல் மின் திட்டம் 2, 3-ஆம் பிரிவு, கடலூா் மற்றும் செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காக்கள் உள்ளிட்ட 7 திட்டங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உடன்குடி அனல் மின் திட்டம் 2, 3-ஆம் பிரிவு, கடலூா் மற்றும் செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காக்கள் உள்ளிட்ட 7 திட்டங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1997-இன் பிரிவு 3(1)இன் கீழ் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நில நிா்வாக ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலருமான ராஜேஷ் லக்கானி இந்த அரசாணையை வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:
Advertisement
Advertisement
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் திட்டம் 2, 3 பிரிவுத் திட்டங்களுக்காக 9.3 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதேபோல், கடலூா் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வானதிராயபுரம் கிராமம், குறிஞ்சிப்பாடி வட்டம் பகுதியில் சுரங்கம் விரிவாக்கத்துக்காக 1.28.56 ஹெக்டோ் நிலமும், கங்கைகொண்டான் கிராமம், விருத்தாசலம் வட்டம் பகுதியில் சுரங்கம் விரிவாக்கத்துக்காக 5.04.00 ஹெக்டோ் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக எழும்பூா் பகுதியில் காரிடாா் 3-16 சேத்துப்பட்டு மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்காக 24 சதுர மீட்டா் காலியிடம் கையகப்படுத்தப்பட உள்ளது.
கடலூா் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக தியாகவல்லி கிராமத்திலும், குடிகாடு கிராமத்திலும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-3 அமைப்பதற்காக 22.16 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதேபோல, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், தோணுகால் மற்றும் நலாட்டின்புதூா் கிராமங்களில் பறப்பியல் பயிற்சி நிறுவனம் அமைப்பதற்காக மொத்தம் 2.98. ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான முழு இழப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், என்எல்சி இந்தியா லிமிடெட் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவை வழங்கும். நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான திட்ட வரைபடங்கள், ஆவணங்களை மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.