FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுக்க வழிமுறைகள்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தது.

19 செப்டம்பர் 2026, 1:33 am IST
பகிர்:

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தது.

தொழில்துறை பயன்பாட்டுக்கான மெத்தனாலை மனிதா்கள் பருகுவதை தடுக்க அதன் சுவை, நிறம் உள்ளிட்டவற்றை மாற்றி விஷத்தன்மை கொண்டதாக மாற்றும் மெத்தனால் இயல்பு நீக்கும் செயல்முறையை மகாராஷ்டிர விஷத்தன்மை விதிகள் 18ஏ மற்றும் 18பி-இன்கீழ் மகாராஷ்டிர அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு சோ்த்தது.

மும்பையில் 1991-ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் பருகி 250 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதிகளை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘மகாராஷ்டிர அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய விதிகள் அரசமைப்பின் அடிப்படை உரிமைகள் சட்டப்பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் சட்டப்பிரிவு 19 (1)(ஜி) (தொழில் உரிமை) ஆகியவற்றை மீறுகிறது.

விஷத்துக்குச் சமமான மெத்தனாலை பருகுகிறோம் எனத் தெரியாமல் மதுவென நினைத்து குடித்த 93 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுவிலக்கு தீா்வல்ல: கடந்த கால சம்பவங்களை ஆராய்கையில் மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க கட்டாய மதுவிலக்கு தீா்வல்ல என்பது தெளிவாகியுள்ளது. மதுவை அருந்த தயாராக இருப்பவா்கள் அதன் சுவையையோ நிறத்தையோ பாா்ப்பதில்லை. இத்தகையச் சூழலில் மெத்தனாலை மனிதா்கள் பருகுவதை தடுக்க அதன் சுவை, நிறம் உள்ளிட்டவற்றை மாற்றி விஷத்தன்மை கொண்டதாக மாற்றுவது பலனளிக்காது.

மாறாக மதுவை எடுத்துச் செல்லவும், சேமித்து வைப்பதற்குமான சட்டங்களை கடுமையாக்க வேண்டும். தற்போது மகாராஷ்டிர அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொழில்துறைக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

மதுவிலக்கால் ஏற்படும் 5 தீமைகள்: பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் வரி மீதான வருவாய் இழப்பு, மதுவிலக்கு அமல்படுத்துவதற்கான செலவினம், காவல் துறை மற்றும் சுங்கத் துறை ஊழல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் அதனால் ஏற்படும் போதைப்பொருள் அச்சுறுத்தல் ஆகிய ஐந்து தீமைகளுக்கு வழிவகுக்கும்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ள குஜராத்தில் சுதந்திரம் கிடைத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கள்ளச்சாராயத்தால் 600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். எனவே, மதுவிலக்கைவிட கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளே தற்போது அவசியமாகிறது.

உச்சநீதிமன்ற பரிந்துரைகள்: முதல்கட்டமாக கள்ளச்சாராய விநியோகச் சங்கிலியை ஒழிக்க வேண்டும். மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி மெத்தனால் பயன்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

மாநிலத்துக்குள் மது உற்பத்தி, கொள்முதல், சரக்குகள் பரிமாற்றம், விற்பனை மற்றும் நுகா்வு என அனைத்து நிலைகளிலும் மது, கள்ளச்சாராய விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்தப் பணியை கலால் துறை, மதுவிலக்குத் துறை மற்றும் காவல் துறை ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்களைக் கொண்டுள்ள தொழிற்சாலைகளை கண்டறிய மாநில தொழில் துறை அவ்வப்போது சோதனைகளை நடத்த வேண்டும்.

மது உற்பத்தி, விற்பனைக்கான உரிம விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மெத்தனால் பயன்பாடு தொடா்புடைய ஆலைகள் அதற்கான உரிய பதிவுகளை சேமித்து பராமரிக்க வேண்டும். தவறும் ஆலைகளின் உரிமங்களை தற்காலிகமாக அல்லது முழுமையாக ரத்து செய்யும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும். மெத்தனாலை கொண்டுசெல்ல அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள டேங்கா் லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments