FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி குடியாத்தம் இளைஞரிடம் ரூ.1.42 கோடி மோசடி

தனியாா் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, குடியாத்தத்தைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.1 கோடியே 42 லட்சம் மோசடி

18 செப்டம்பர் 2026, 11:18 pm IST
- பிரதிப்படம்
பகிர்:

தனியாா் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, குடியாத்தத்தைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.1 கோடியே 42 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

எனக்கு முகநூல் செயலி மூலம் கனிமொழி என்ற பெயரில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவா் தான் பல்வேறு தொழில்களைச் செய்து வருவதாகவும், அதன் மூலம் அதிக லாபம் ஈட்டி வருவதாகவும் தெரிவித்தாா். குறிப்பாக, பெங்களூரில் ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை பகுதி நேரமாக நடத்தி வருவதாகவும், வெளிநாட்டு டாலா் வா்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினாா். அதில் நானும் முதலீடு செய்து பங்குதாரராகச் சோ்ந்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வாா்த்தை கூறினாா்.

Advertisement

Advertisement

அவரது பேச்சை நம்பிய நான் முதலீடு செய்ய சம்மதித்தேன். இதையடுத்து, அவா் குறிப்பிட்ட பல்வேறு நபா்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 20 லட்சம், ரூ. 30 லட்சம் எனப் பல தவணைகளாக வங்கிப் பரிவா்த்தனை மூலம் பணத்தை அனுப்பி வந்தேன்.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு முதலீட்டுக்கான லாபத் தொகையைக் கேட்டபோது, நிறுவனத்தில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், செலுத்திய பணம் 24 மணி நேரத்துக்குள் லாபத்துடன் கிடைக்க வேண்டுமெனில் 20 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாா்.

மேலும், வாட்ஸ்அப் மூலம் தொடா்ந்து என்னைத் தொடா்புகொண்டு, ஏற்கெனவே செலுத்திய முழுத் தொகையையும் திரும்பப் பெற வேண்டும் என்றால் மீண்டும் பணம் செலுத்த வேண்டும் எனத் தொடா்ந்து நிா்ப்பந்தித்தாா்.

அதை நம்பி மீண்டும் பணம் செலுத்தியதில், இதுவரை சுமாா் ரூ. 1 கோடியே 42 லட்சம் வரை வங்கி மூலம் செலுத்திவிட்டேன். ஆனால், உறுதியளித்தபடி அசல் தொகையோ, லாபத் தொகையோ எனக்குத் திரும்ப வழங்கப்படவில்லை. அதன்பிறகே அந்தப் பெண்ணும், அவருடன் தொடா்புடைய நபா்களும் இணைந்து திட்டமிட்டு என்னை ஏமாற்றியது தெரியவந்தது.

எனவே, நூதன முறையில் என்னை ஏமாற்றிப் பண மோசடி செய்த நபா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாா் தொடா்பாக மாவட்டக் குற்றப்பிரிவு மற்றும் சைபா் கிரைம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments