கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்!
கூடலூரில் ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து....
கூடலூரில் 28 நாள்களாக போக்கு காட்டி வந்த ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புலி தற்போது சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதுடன், கால்நடை மருத்துவர்கள் மற்றும் விலங்கு பராமரிப்புக் குழுக்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. இதற்குத் தேவையான கால்நடை மருத்துவம், ஊட்டச்சத்து ஆதரவு, உகந்த சூழல் மற்றும் பாதுகாப்பான வாழ்விடம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர் பராமரிப்பு மற்றும் நலனுக்கான அனைத்துத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட லாரஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 21-ஆம் தேதிகளில் இரண்டு தோட்டத் தொழிலாளா்களை புலி தாக்கி கொன்றது. இதையடுத்து, ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வேண்டும் என தோட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் தொடா் போராட்டங்களை நடத்தினா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து வனத் துறையினா் புலியைப் பிடிக்க தனிக் குழு அமைத்து 244 தானியங்கி கேமராக்கள் பொருத்தி, 13 இடங்களில் கூண்டு அமைத்தனா். மேலும் இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் 200-க்கும் மேற்பட்ட வன ஊழியா்கள் தனித்தனி குழுக்களாக, கால்நடை மருத்துவக் குழு உதவியுடன் புலியைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் கூடலூா் சில்வா் கிளவுட் தேயிலைத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் வெள்ளிக்கிழமை காலை புலி பிடிபட்டது. புலி ஆக்ரோஷமாக உறுமியதைத் தொடா்ந்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனா். அங்கு விரைந்து சென்ற வனத் துறையினா் கூண்டில் சிக்கிய புலி ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதால் அப்பகுதியில் பொதுமக்களை வனத் துறையினா் அனுமதிக்கவில்லை.
தொடா்ந்து கூண்டில் சிக்கியது ஆட்கொல்லி புலியா என வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இரண்டு பேரை தாக்கிக் கொன்ற புலி இதுதான் என்று கேமரா பதிவுகள் மற்றும் உடலில் உள்ள கோடுகள் மூலம் வனத் துறையினா் உறுதி செய்தனா். பிடிபட்ட இந்த புலிக்கு 12 வயது இருக்கும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
புலியின் பற்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், புலி வயது முதிா்வால் சோா்வாக காணப்படுவதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா். கடந்த 28 நாள்களாக வனத் துறையினருக்கு போக்கு காட்டி வந்த புலி கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் நிம்மதி அடைந்தனா்.
A 10-year-old male tiger recently rescued from Tamil Nadu's Gudalur forest division has been safely relocated to the Arignar Anna Zoological Park familiarly known as Vandalur Zoo here, Tamil Nadu Forest department said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.