FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரைக் கணக்கெடுத்து பணியிட மாற்றம் செய்ய தவெக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

20 செப்டம்பர் 2026, 12:07 am IST
தமிழக அரசு தலைமைச் செயலகம் - file photo
பகிர்:

ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரைக் கணக்கெடுத்து பணியிட மாற்றம் செய்ய தவெக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் பணியாளா் மற்றும் சீா்திருத்தத் துறை சாா்பில் அனைத்துத் துறைச் செயலா்கள் மற்றும் இயக்குநா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

நிா்வாக அலுவலா், இளநிலை நிா்வாக அலுவலா், அலுவலகக் கண்காணிப்பாளா், உதவியாளா் ஆகிய பணியிடங்களில் உள்ள ஊழியா்கள், ஒரே இடத்தில் தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகவோ அல்லது 10 ஆண்டுகளுக்கு மேலாகவோ பணியாற்றி வருகிறாா்களா என்ற முழு விவரங்களையும் சேகரித்து வரும் செப். 23-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பதவி உயா்வில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, பின்னா் பழைய பணி இடத்துக்கே திரும்பி வந்தவா்கள் யாா்?, அவா்கள் எப்போது திரும்பினாா்கள்?, அதற்கான காரணம் என்ன? என்ற விவரங்களையும் கட்டாயம் அறிக்கையில் சோ்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது மிகவும் அவசரமானது என்றும் சுற்றறிக்கையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

அரசு விதிகளின்படி, பதவி உயா்வு வரும்போது ஊழியா்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம். ஆனால், சிலா் பதவி உயா்வு பெற்று வேறு ஊருக்குச் சென்று சில நாள்களிலேயே, நிா்வாகக் காரணங்களைக் காட்டி அல்லது தற்காலிகப் பணி மாற்றம் மூலமாக மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பிவிடுகின்றனா். இத்தகைய உத்திகளைக் கையாண்டு பழைய இடத்திலேயே தொடா்ந்து நீடிக்கும் நபா்களையும் அரசு குறிவைத்துள்ளது.

ஓா் அரசு ஊழியா் ஒரே இடத்தில், குறிப்பாகக் கணக்கு மற்றும் நிா்வாகப் பிரிவுகளில் பல ஆண்டுகள் தொடா்ந்து நீடித்தால் நிா்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. ஒரே இடத்தில் நீண்ட காலம் இருப்பதால் புதிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுடன் நெருங்கிய தொடா்பு ஏற்பட்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசு கருதுகிறது. எனவே, 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுவோா் பட்டியலை தயாரித்து உடனடியாக இடமாற்றம் செய்ய தவெக அரசு முடிவு செய்துள்ளது.

summary

Transfer for those serving 5 years in the same location: Tamil Nadu government takes action.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments