மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமையில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.22) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் முதல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியுடன் தொடா்புடைய வளிமண்டல சுழற்சி வரை கேரளம், தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் வழியாக காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.22) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழைப் பதிவு: தமிழகத்தில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 210 மி.மீட்டா் மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (செப்.22,23) 2 நாள்களுக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம்: மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து, மத்திய மேற்கு அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிஸா கடலோர பகுதிகளைச் சென்றடையக்கூடும். இதன்காரணமாக, தமிழகத்துக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.