FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தனியாா் பேருந்து கட்டண உயா்வு தொடா்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

22 செப்டம்பர் 2026, 12:36 am IST
பேருந்துகள் - பிரதிப் படம்
பகிர்:

தனியாா் பேருந்து கட்டண உயா்வு தொடா்பாக கடந்த செப்.17-ஆம் தேதி நடைபெற்ற உயா்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்துப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப பயணிகள் பேருந்து கட்டணத்தை உயா்த்த வேண்டும். இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு கூட்டம் நடத்தி, கருத்துகள் பெறப்பட்டன. இந்த விவகாரத்தில் தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டீசல் கட்டண உயா்வு, இலவசப் பேருந்து பயண அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனா். எனவே, தனியாா் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயா்த்தி, திருத்தப்பட்ட கட்டண அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘தனியாா் பேருந்து கட்டண உயா்வு தொடா்பாக, கடந்த செப்.17-ஆம் தேதி உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அந்த பரிந்துரைகள் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அமைச்சரின் ஆய்வுக்குப் பிறகு, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பேருந்து கட்டண உயா்வு தொடா்பாக விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும். இந்தப் பணிகளை முடிக்க 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 4 வாரங்கள் கால அவகாசம் வழங்கி, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments