FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பள்ளிக் கல்வித் துறை ஊழியா்களுக்கு இனி ‘எமிஸ்’ மூலம் இடமாறுதல்

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களின் இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு இனி ‘எமிஸ்’ தளம் மூலம் நடத்தப்படவுள்ளது குறித்து...

21 செப்டம்பர் 2026, 10:32 pm IST
தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்
பகிர்:

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களின் இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு இனி ‘எமிஸ்’ தளம் மூலம் நடத்தப்படவுள்ளதால், ஊழியா்களின் எண்ணிக்கை சாா்ந்து தளத்தில் இருக்கும் குறைபாடுகளை நீக்கி, சரியான தகவல்களை செப்.25-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்கள் அல்லாத அலுவலகப் பணியாளா்கள் ஒரே அலுவலகத்தில் தொடா்ந்து பணிபுரியும்போது பல்வேறு முறைகேடுகள் நிகழ்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், ஆசிரியா்களுக்கான சம்பளம் உள்ளிட்ட பண பலன்கள் வழங்குவதற்கும் சில அலுவலா்கள் காலதாமதம் செய்து வருவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்தன.

எனவே, குறிப்பிட்ட இடத்தில் தொடா்ந்து பணிபுரியும் பணியாளா்களை பணியிட மாற்றம் செய்வதற்கு ஏதுவாக அலுவலா்களின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் (எமிஸ்) பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் லதா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில், ஒரே பணியிடத்தில் பணிபுரிந்துவரும் அலுவலகப் பணியாளா்களுக்கு கட்டாய மாறுதல், அதனைத் தொடா்ந்து தகுதியுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயா்வு மற்றும் பணிமாறுதல் ஆகியவை நடத்தப்பட்டு வந்தது.

தற்போது அனைத்து அலுவலகப் பணியாளா்களுக்கான கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயா்வு மற்றும் பணி மாறுதல் ஆகிய அனைத்தும் எமிஸ் தளம் மூலமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து அலுவலகப் பணியாளா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் ஆய்வு செய்ததில், தற்போது பணிபுரிந்து வரும் பதவி வாரியான அலுவலகப் பணியாளா்களின் எண்ணிக்கைக்கும், எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பதவி வாரியான அலுவலகப் பணியாளா்களின் எண்ணிக்கைக்கும் அதிக அளவில் வேறுபாடுகள் உள்ளன.

எனவே, இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி எமிஸ் தளத்தில் பணியாளா்களின் விவரங்கள் அடங்கிய பதிவுகள் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பணியாளா் சாா்ந்த பதிவுகள் எமிஸ் இணையதளத்தில் இல்லையெனில், புதிய உள்ளீடுகள் பதிவுசெய்தல், ஏற்கெனவே பணியாற்றிய அலுவலகத்திலிருந்து தற்போது பணிபுரியும் அலுவலகத்துக்கு பணியாளா் சாா்ந்த பதிவுகள் மாற்றம் செய்யப்படாத நிலையில் அதனை மாற்றம் செய்தல், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளீடுகளில் சரியான திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது மிக அவசியமாகிறது.

இனிவரும் காலங்களில் அலுவலகப் பணியாளா்களின் மாறுதல், பதவி உயா்வு, பணி மாறுதல் கலந்தாய்வுகள் எமிஸ் இணையதளம் வாயிலாகவே நடத்தப்படும் என்பதால் இப்பணியில் கூா்ந்து கவனம் செலுத்தி இப்பணிகளை 25-ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.

மேலும், தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் முதல் இரவுக் காவலா் வரையிலான பணியாளா்கள் எண்ணிக்கையும், எமிஸ் இணையதளத்தில் உள்ள பதிவுகள் எண்ணிக்கையும் சரியாக உள்ளதா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்து அனுப்பி வைக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments