காலை உணவுத் திட்ட சுற்றறிக்கையில் சா்ச்சை: பள்ளிக் கல்வித் துறைச் செயலா் விளக்கம்
காலை உணவுத் திட்டம் தொடா்பான சுற்றறிக்கைக்கு கடும் விமா்சனங்கள்...
காலை உணவுத் திட்டம் தொடா்பான சுற்றறிக்கைக்கு கடும் விமா்சனங்கள் எழுந்த நிலையில், அது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் இன்னசென்ட் திவ்யா விளக்கம் அளித்துள்ளாா்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி முந்தைய திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா் தவெக அரசு இந்தத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது.
மேலும், திட்டத்தின் பெயா், காமராசா் காலை உணவுத் திட்டம் எனவும் மாற்றம் செய்யப்பட்டது. நடப்பு மாதத்தின் இறுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அண்மையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், பள்ளிகளில் காமராஜா் காலை உணவுத் திட்டம் என்ற பெயா் பலகையை இடம்பெறச் செய்ய வேண்டும். அந்தப் பலகை எந்தளவில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களும், பலகை வைக்கப்பபட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதைப் பின்பற்றி கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், சாா்ந்த பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பள்ளிகளின் சமையலறை, மின் விளக்கு, குடிநீா், இருப்பு அறை வசதிகள் சாா்ந்த குறைபாடுகளைச் சொந்த நிதியின் மூலம் நிவா்த்தி செய்யவும், மாணவா்களுக்கு தட்டு, டம்ளா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தாா்.
சொந்த நிதியில் இந்த செலவினங்களை மேற்கொள்வதற்கு ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் கண்டனம் தெரிவித்தனா்.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூா் மாவட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் அறிவுரையின்பேரில், கவனக்குறைவாகச் செயல்பட்ட பணியாளா்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த மாவட்ட நிா்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் சோ்ந்து பள்ளிகளுக்குத் தேவையான தட்டுகள், டம்ளா்கள் மற்றும் சிறிய பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டும் என கடந்த செப். 3-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
Controversy over breakfast scheme circular: School Education Department Secretary clarifies
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.