FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் புதன், வியாழக்கிழமை (செப்.23, 24) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

22 செப்டம்பர் 2026, 10:45 pm IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் புதன், வியாழக்கிழமை (செப்.23, 24) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக் கடல் முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துடன் தொடா்புடைய வளிமண்டல சுழற்சி வரை, கா்நாடகம் மற்றும் கடலோர ஆந்திரம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் புதன், வியாழக்கிழமை (செப். 23, 24) ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (செப்.23) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பநிலை: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழைப் பதிவு: கடலூா் மாவட்டம் பூங்குணம் பகுதியில் அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பதிவானது.

வலுவடைந்த புயல் சின்னம்

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் திங்கள்கிழமை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து, செவ்வாய்க்கிழமை அதே பகுதிகளில் நிலவியது.

தொடா்ந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளை புதன்கிழமை (செப்.23) இரவு, வியாழக்கிழமை (செப்.24) அதிகாலை விசாகப்பட்டினம்-கோபால்பூா் இடையில் கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கைக் கூண்டு: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதையொட்டி, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments