FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரை மாணவன் மரணம்! 16 நாள்களுக்குப் பிறகு உடல் ஒப்படைப்பு!

மதுரை மாணவன் மரணத்தில் 16 நாள்களுக்குப் பின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டது பற்றி..

22 செப்டம்பர் 2026, 1:42 pm IST
பகிர்:

மதுரை ஆனையூர் பகுதியில் மாயமாகி, முட்புதர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வனின் உடல், 16 நாள்களுக்குப் பிறகு இன்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவைச் சேர்ந்தவர் 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். கடந்த 7-ஆம் தேதி திங்கள்கிழமை, அப்பகுதியில் உள்ள முட்புதர் குட்டை ஒன்றிலிருந்து தமிழ்ச்செல்வன் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவனின் மரணத்தைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மற்றும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 'தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டு இயக்கம்' சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. மாவட்ட காவல் ஆணையர் அலுவலக முற்றுகை, ஆட்சியர் அலுவலக முற்றுகை மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் என கடந்த 16 நாள்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்களும் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், 17-வது நாளான இன்று, குடும்பச் சூழல் காரணமாக உடலை வாங்கச் சம்மதித்து காவல்துறையினரிடம் கடிதம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவனின் உடல், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் மூலம் ஒப்படைக்கப்பட்டது.

உடலைப் பெற்றுக் கொண்ட நீதிக்கான கூட்டமைப்பினர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலிருந்து வைகை ஆறு தரைப்பாலம் வரை ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, தமிழ்ச்செல்வனின் உடல் அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் குச்சிலியம்பாறை அருகே உள்ள பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இது குறித்து 'தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டமைப்பைச்' சேர்ந்த மகாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காவல்துறையின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாததால் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். உயர்நீதிமன்றம் நிச்சயம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடும் என்ற நம்பிக்கையிலும், குடும்பத்தினரின் சூழல் கருதியுமே உடலைப் பெற்றுக்கொண்டோம். உடலை வாங்கினாலும், சந்தேக மரணத்தைக் கொலை வழக்காக மாற்றி, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். மேலும், ஆட்சியர் அலுவலக முற்றுகையின்போது எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்," எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments