ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி ஜாமீன் மனு மீது மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க உத்தரவு!
ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களுக்கு பதிலளிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திரன் ஆகியோரது ஜாமீன் மனுக்களுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திரன் ஆகியோர் கடந்த ஆக. 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதில் வீரமணியை காவலில் எடுத்து காவல் துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
அந்த மனுவில், “கடந்த 2025 ஆம் ஆண்டு அக். 6 ஆம் தேதி இந்திய குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஆறு ஆண்டுகள் தாமதமாக 2025 அக். 7 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாமதத்துக்கு எந்த விளக்கமும் இல்லாததால், இந்த வழக்கில் சந்தேகம் எழுந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
புகார்தாரர், பாதிக்கப்பட்டவரல்ல; பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரோ, பாதுகாவலர்களோ அல்ல. பாதிக்கப்பட்ட எந்த சிறுமிகளும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
வழக்கில் காவல் துறையினர், நிபுணர்கள் தான் சாட்சிகளாக உள்ளனர். அவர்களின் வாக்குமூலங்கள் காவல் துறை வசம்தான் உள்ளன. அதனால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பில்லை” எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆக. 28 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தங்களை 24 மணி நேரத்திற்கு பிறகு தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டு மூன்று வாரங்கள் நெருங்கும் நிலையில் இதுவரை தங்களை காவலில் வைத்து விசாரிக்க கோரி காவல் துறை மனுத்தாக்கல் செய்யாததாலும், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதாலும் தங்களை சிறையில் அடைத்து வைத்திருக்க அவசியமில்லை என்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி பத்மா முன் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்ற காவலில் வைத்ததில் எந்த ஒரு தாமதமும் இல்லை. அனைத்தும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பதில்மனு தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப். 29 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
The Chennai Special POCSO Court has ordered the police to file a response to the bail petitions of Shanthi and Mahendra Simhan, who were arrested in connection with the case against Gem Granite owner Veeramani.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.