தவெக ஆட்சி திமுக போட்ட பிச்சை: உதயநிதி கடும் தாக்கு
தவெக ஆட்சியை திமுக போட்ட பிச்சை என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தது குறித்து...
தவெக ஆட்சியை திமுக போட்ட பிச்சை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியதாவது, "இன்று செப். 27. கடந்தாண்டு இதே தேதியில் நடந்ததை ஞாபகப்படுத்தத் தேவையில்லை. உங்கள் அனைவருக்குமே தெரியும். நம் அனைவரின் மனங்களிலும் மிகுந்த காயத்தை ஏற்படுத்திய ஒரு வடு.
இதே தேதியில் தற்போதைய முதல்வர் பிரசாரம் செய்வதாகக் கூறி, கிட்டத்தட்ட 10 மணிநேரம் தாமதமாகச் சென்று, அங்கிருக்கக் கூடிய மக்களுக்கு குடிநீர் வசதியோ கழிப்பறை வசதிகூட செய்யாமல் மக்கள் நெருக்கடி ஏற்பட்டு, 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிர்கள் பறிபோன நாள்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்துக்காக முதல்வர் விஜய் இன்று ஆறுதலும் இரங்கலும் தெரிவிக்கிறார். ஆனால், அன்றைக்கு தெரிவித்தாரா?
வண்டிமேல் ஏறி பாட்டு பாடிவிட்டு, அவர் கண் முன்னாலேயே 20 பேர் இறந்தபோதும்கூட அங்கிருந்து ஓடி திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று விட்டார். அங்கேயும் மக்களுக்கோ பத்திரிகையாளர்களுக்கோ பதிலளிக்காமல் சென்றுவிட்டார். சென்னை விமான நிலையத்தை அவர் அடையும்போது 40 பேர் இறந்துவிட்டனர். அப்போதும் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது. எந்தவொரு குற்ற உணர்ச்சியோ கொஞ்சம்கூட மனசாட்சியோ இல்லாமல் ஓடிப்போனவர்தான் இன்றைய ஓடுகாலி முதல்வர்.
இன்றைக்கு வேண்டுமானால் மக்களை ஏமாற்றி அவர் முதல்வராகியிருக்கலாம். ஆனால், இதனை நினைத்து அவரால் ஒருநாள்கூட நிம்மதியாக தூங்க முடியாது.
கடந்த 2 ஆண்டுகளாக திமுக தீயசக்தி என்று கூறி வந்தார். அப்போதெல்லாம் நாம் (திமுக) ஆளுங்கட்சியாக இருந்தோம்; அவர் எதிர்க்கட்சியாக இருந்தார். இப்போது நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஓம் காளி ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி என்று சொல்லுங்கள். இனிவரும் ஒவ்வொரு திமுக கூட்டத்திலும் இதனைச் சொல்ல வேண்டும்.
இன்று இரு தொகுதிகளிலும் வந்த இடைத்தேர்தல் இயற்கையாக வந்ததா? இந்த இடைத்தேர்தல் வந்ததற்கு யார் காரணம்?
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவினருக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இன்றைக்கு நடக்கக்கூடிய ஆட்சி, நாம் போட்ட பிச்சையில்தான் நடக்கிறது. ஏனெனில், நம்முடன் கூட்டணி வைத்து, நம் தலைவரின் பெயரைச் சொல்லி, வாக்கு சேகரித்து வெற்றி பெற்றவர்களின் தயவால்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் இந்த ஆட்சியை திமுக போட்ட பிச்சை என்கிறோம்.
தொடர்ந்து, அவர் முதல்வராவதற்காக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு ஷோஃபா அனுப்பினார். அதிமுகவையும் இரண்டாகப் பிளந்து, அங்கிருந்த ஒரு சில தலைவர்களுக்கு மட்டும் ஷோஃபா கொடுத்து, அவர்களின் எம்எல்ஏ-க்களையும் அழைத்தார்.
திமுகவினர் மக்களுக்குக் காசு கொடுப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டு வைத்த முதல்வர், எம்எல்ஏ-க்களையே காசுகொடுத்து தூக்கிவிட்டார். அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது" என்று தெரிவித்தார்.
DMK MLA Udhayanidhi Stalin harshly criticizes TVK's rule, calling it a 'handout' from the DMK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.