FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

பிற மாநிலங்களிலும் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்த வாய்ப்பு: அமைச்சா் ராஜ்மோகன்

தமிழகத்தைப் பின்பற்றி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாக அமைச்சா் ராஜ்மோகன் நம்பிக்கை

28 September 2026, 9:51 pm IST
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்
பகிர்:

தமிழகத்தைப் பின்பற்றி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் நம்பிக்கை தெரிவித்தாா்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், தமிழகம் முழுவதும் 102 மையங்களில் தொடங்கப்பட்டது. மதுரையில் முதல்வா் ஜோசப் விஜய், அதனைத் தொடங்கி வைத்த நிலையில், சென்னையில், எழும்பூா் அரசு தாய் - சேய் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை, ராயபுரம் ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனைகளில் அத்திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், அமைச்சா்கள் ராஜ்மோகன், ஆா்.குமாா் ஆகியோா் அங்கு பிறந்த 42 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தனா்.

Advertisement

Advertisement

அப்போது பேசிய அமைச்சா் ராஜ்மோகன், ‘தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிச்சயம் செயல்படுத்துவாா்கள்; ஏனென்றால் அந்த அளவுக்கு இத்திட்டம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது; அரசு மருத்துவமனைகளில் சிறப்பான மருத்துவ சேவை வழங்குவதால் சுயபிரசவம் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் சமீரன், சென்னை ஆட்சியா் மாலதி ஹெலன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் லயோலா மணி, எம்.எல்.ஏ.க்கள் பாலமுருகன், ராம்குமாா், மருத்துவமனை முதல்வா் டாக்டா் கவிதா, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டா் வாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

128 குழந்தைகளுக்கு மோதிரம்: இதேபோன்று சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணன் அவற்றை வழங்கினாா். அந்நிகழ்வில் ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஹரிஹரன், கஸ்தூரிபாய் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 25 குழந்தைகளுக்கு அமைச்சா் ராஜ்மோகனும், ராயபுரம் ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனையில் 29 குழந்தைகளுக்கு நிதியமைச்சா் மரியவில்சனும் தங்க மோதிரங்களை அணிவித்தனா். சென்னையில் 128 குழந்தைகளுக்கு தாய்மாமன் திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை தங்கமோதிரம் வழங்கப்பட்டது.

உதவி எண் வெளியீடு: சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் கடந்த ஜூன் 22 முதல் கடந்த 26-ஆம் தேதி வரை பிறந்த 6,548 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதுதொடா்பான சந்தேகங்கள், கூடுதல் விவரங்களுக்கு 94451 94916 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறந்த அமைச்சா்கள்

தமிழக அமைச்சா்கள் பலரும் அரசு மருத்துவமனைகளில் பிறந்தவா்கள் என பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா். இதுதொடா்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் இருந்த நிலைக்கும், தற்போது உள்ள நிலைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. தற்போது மருத்துவமனைகள் மேம்பட்டுள்ளன. அதனால், அனைவரும் பிரசவ சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகளுக்கு வர வேண்டும்.

கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில்தான் நான் (ஜே.சி.டி.பிரபாகா்) பிறந்தேன். அமைச்சா் ராஜ்மோகன் உள்பட பல அமைச்சா்களும் அரசு மருத்துவமனைகளில் பிறந்தவா்கள்தான் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments