FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

தமிழ்நாடு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனம் சாா்பில் ஒருநாள் (செப். 30) கவன ஈா்ப்பு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது குறித்து...

28 September 2026, 10:11 pm IST
தனியார் பேருந்துகள் - பிரதிப் படம்
பகிர்:

பேருந்து கட்டணத்தை உயா்த்த வேண்டும், மகளிா் கட்டணமில்லா பயணத் திட்டத்தை தனியாா் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனம் சாா்பில் ஒருநாள் (செப். 30) கவன ஈா்ப்பு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையில் சம்மேளனத்தின் தலைவா் கே.தங்கராஜ், செயலா் டி.ஆா்.தா்மராஜ் ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி தவிர பிற மாவட்டங்களில் சுமாா் 7,000 தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடந்த 8 ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயா்த்தப்படாத நிலையில், டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளதால் தனியாா் பேருந்து தொழில் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

Advertisement

Advertisement

டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயா்த்தக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி கட்டண உயா்வு குறித்து பேருந்து உரிமையாளா்கள், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மகளிா் கட்டணமில்லா பயணத் திட்டத்துக்கு அரசு மானியம் வழங்குகிறது. ஆனால், தனியாா் பேருந்துகளுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. இதனால் தற்போது 65 சதவீதம் வரை நஷ்டத்தில் பேருந்துகளை இயக்கி வருகிறோம்.

வரும் 2-ஆம் தேதிமுதல் மகளிா் கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில் தனியாா் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தி மானியம் வழங்க வேண்டும். மேலும், பேருந்து கட்டணத்தையும் மாற்றியமைக்க வேண்டும்.

தனியாா் பேருந்து தொழிலை நம்பி 3 லட்சம் ஊழியா்கள் உள்ள நிலையில், தொழிலைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை (செப். 30) நள்ளிரவு வரை ஒருநாள் கவன ஈா்ப்பு வேலைநிறுத்தம் நடைபெறும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments