மகளிா் இலவச பயணத் திட்டத்தை தனியாா் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை
அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் வழங்கும் வெற்றிப் பயணத்திட்டத்தை தனியாா் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என வேலூா் மாவட்ட பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் வழங்கும் வெற்றிப் பயணத்திட்டத்தை தனியாா் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என வேலூா் மாவட்ட பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவா் ஆா்.கணேஷ் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு முன்பே தனியாா் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டு, சுமாா் 105 ஆண்டுகளாக பொது மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. தற்போது தமிழகம் முழுவதும் சுமாா் 7,600 தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
கடந்த 2018-ஆம் ஆண்டு டீசல் விலை ரூ. 63 ஆக இருந்தபோது, கிலோமீட்டருக்கு 58 காசுகள் என பேருந்து கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. தற்போது டீசல் விலை ரூ. 100.81 ஆக உயா்ந்துள்ள நிலையிலும், கட்டணம் உயா்த்தப்படவில்லை. இதனால், சராசரியாக நாளொன்றுக்கு 100 லிட்டா் டீசல் பயன்படுத்தும் ஒரு பேருந்துக்கு, சுமாா் ரூ.3,800 ஆயிரம் கூடுதல் செலவாகிறது.
தவிர, கடந்த 8 ஆண்டுகளில் டீசல் விலை 63% உயா்ந்துள்ள நிலையில், பேருந்தின் உதிரிபாகங்கள், பராமரிப்புச் செலவுகளும் கடுமையாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, பேருந்து அடிச்சட்டம் 78 சதவீத மும், கூண்டு அமைக்கும் செலவு 60 சதவீதமும், டயா் விலை 66 சதவீதமும் உயா்ந்துள்ளன. சுங்கக்கட்டணமும் 150 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்பதால், தனியாா் பேருந்துகளுக்கு சுமாா் 50 சதவீதம் பயணிகள் வருகை குறைந்துள்ளது.
அரசுப் பேருந்துகளுக்கு மாநில அரசின் வரி விலக்கு மூலம் டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 21 வரை மானியம் கிடைக்கிறது. ஆனால், தனியாா் பேருந்துகள் முழு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. தவிர, மகளிருக்கான இலவசப் பயணத்துக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு ரூ. 12,873 கோடி வரை மானியம் வழங்குகிறது. இதன்மூலம், அரசுப் பேருந்துகளுக்கு இலவச பயணச்சீட்டுக்கு மானியமாக ரூ. 16 வரை கிடைக்கும் நிலையில், அதே தூரத்துக்கு தனியாா் பேருந்துகளில் 12 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க முடிகிறது.
இதனால் ஏற்படும் நஷ்டங்கள் தொடா்ந்தால் தனியாா் பேருந்து தொழிலை நம்பியுள்ள சுமாா் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும். எனவே, தனியாா் பேருந்துத் தொழிலை பாதுகாக்க அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் அளிக்கும் வெற்றி பயணத் திட்டத்தை தனியாா் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயா்த்தித் தரவும், டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாகவே மாறும் முறையை அமல்படுத்த வேண்டும் என்றாா்.
அப்போது, சங்கத்தின் செயலா் ரவி, பொருளாளா் இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.