தொடர் ஓட்டத்தில் வென்ற தடகள வீரர்களுக்கு தலா ரூ. 30 லட்சம்: முதல்வர் விஜய் அறிவிப்பு!
தொடர் ஓட்டத்தில் வென்ற மூன்று தடகள வீரர்களுக்கு முதல்வர் விஜய் தலா ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் அறிவித்துள்ளது குறித்து...
தொடர் ஓட்டத்தில் வென்ற மூன்று தடகள வீரர்களுக்கு தலா ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை (செப். 29) அறிவித்துள்ளார்.
தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு ரூ. 30 லட்சம் அறிவித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் முதல்வர் விஜய் தெரிவித்திருப்பதாவது:
ஜப்பான் நாட்டில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4*400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
Advertisement
இத்தடகள வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும், குழு ஒருங்கிணைப்பும் வெற்றியை நோக்கி பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும். எதிர்காலத்திலும் இத்தடகள வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனுக்கு ரூ. 30 லட்சம் அறிவித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4*100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது இவ்வெற்றி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவர் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து, நாட்டின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Chief Minister Vijay announced on Tuesday (Sept. 29) an incentive of ₹30 lakh each for three athletes who won in the relay race.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.