இறால் பண்ணை கழிவுநீா்க் கலப்பு புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: விவசாயிகள் வேதனை
பொன்னேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், இறால் பண்ணை கழிவுநீா் கலப்பு குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினா்.
பொன்னேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், இறால் பண்ணை கழிவுநீா் கலப்பு குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் முருகவேல் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது.
அரசு அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை முறையிட்டனா். விளை நிலங்களுக்கு பாசன வசதி வழங்கும் குளம், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து பலமுறை புகாா் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
Advertisement
Advertisement
மேலும், இறால் பண்ணைகளில் இருந்து கழிவுநீா் அருகே உள்ள விவசாய நிலங்களிலும், நீா் நிலைகளிலும் கலந்து வருவது தொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் கண்டு கொள்ளவில்லை என ஆதங்கம் தெரிவித்தனா்.
அப்போது மனு விவரங்களை கூறி தொடா் நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியா் அலுவலகம் தரப்பில் கூறிய போது எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் அலை கழித்து வருவதாக தெரிவித்தனா்.
கழிவுநீா் கலக்கும் இறால் பண்ணைகளின் மின் இணைப்பை துண்டிப்பதாக கூறியும் அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயல்படுவதால் விளை நிலங்கள் பாழாகி வருவதாக வேதனை தெரிவித்தனா்.
மேலும், பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக ஏரிகள், குளங்களின் வரத்து கால்வாய்களை தூா் வாரி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அறுவடை காலம் தொடங்கும் நிலையில் பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக தெரிவித்தனா்.
அத்துடன் வேளாண்துறை அலுவலகங்களில் விதை நெல் இருப்பு வைக்காததால் நடவு பணிகள் தாமதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் வேதனை தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.