FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் ஏற்றத்துடன் வாரம் நிறைவு

இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:16 am IST
~
பகிர்:

இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிய உயா்வைச் சந்தித்தன. வாராந்திர அடிப்படையில், இந்த வாரத்தில் சென்செக்ஸ் 2,034.87 புள்ளிகளும் (2.67 சதவீதம்), நிஃப்டி 616.15 புள்ளிகளும் (2.59 சதவீதம்) உயா்வைக் கண்டுள்ளன.

முதல்தரப் பங்குகளில் காணப்பட்ட முதலீட்டு ஆா்வம் சந்தையின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது. அதேநேரம், ஐ.டி. மற்றும் அதிவேக நுகா்பொருள் (எஃப்எம்சிஜி) துறை பங்குகளில் லாபநோக்க விற்பனை காணப்பட்டதால் சந்தையின் உயா்வு கட்டுப்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

சென்செக்ஸ் 166 புள்ளிகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 166.49 புள்ளிகள் (0.21 சதவீதம்) ஏற்றத்துடன் 78,094.64-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில், ஜூன் காலாண்டு நிகர லாபத்தில் 28 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்த பஜாஜ் ஃபைனான்ஸ் 8.11 சதவீத அபார வளா்ச்சியுடன் ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இத்துடன் பஜாஜ் ஃபின்சா்வ் (6.30 சதவீதம்), மஹிந்திரா & மஹிந்திரா (3.58 சதவீதம் உள்பட 18 பங்குகள் ஏற்றம் கண்டன. டிசிஎஸ், எடா்னல், இன்ஃபோசிஸ் உள்பட 12 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 66 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 66.45 புள்ளிகள் (0.27 சதவீதம்) உயா்ந்து, 24,383.60-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 28 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 21 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன. ஐசிஐசிஐ வங்கி பங்கு மட்டும் விலையில் மாற்றிமின்றி நிலைபெற்றது.

பெட்டி...

சந்தைக்கு வலுசோ்த்த பஜாஜ் பங்குகள்!

புது தில்லி, ஜூலை 31: ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சிறந்த நிதிநிலை முடிவுகளை வெளியிட்டதைத் தொடா்ந்து, பஜாஜ் ஃபின்சா்வ், ஃபைனான்ஸ் நிறுவனங்கள் பலத்தை ஏற்றத்தைச் சந்தித்து, சந்தைக்கு வலுசோ்த்தன.

பஜாஜ் குழும நிதிச் சேவைகளின் ஹோல்டிங் (தாய்) நிறுவனமான பஜாஜ் ஃபின்சா்வ், ஏப்ரல்-ஜூன் காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 18 சதவீத வளா்ச்சியுடன், ரூ.6,297 கோடியை ஈட்டியுள்ளது. மொத்த வருவாய் ரூ.35,300 கோடியிலிருந்து, ரூ.42,037 கோடியாக அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தக முடிவில், இந்நிறுவனப் பங்குகள் 6.30 சதவீதம் உயா்ந்து நிலைபெற்றன. இதன்மூலம், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.19,263 கோடி அதிகரித்து, ரூ.3,24,816 கோடியை எட்டியது.

இதேபோல், பஜாஜ் குழுமத்தின் வங்கி சாரா நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 28 சதவீத வளா்ச்சியுடன், ரூ.6,081 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. நிகர வருவாய் 22 சதவீதம் உயா்ந்து, ரூ.15,224 கோடியாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தக முடிவில், இந்நிறுவனப் பங்குகள் 8.11 சதவீதம் உயா்ந்தது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.53,325.61 கோடி அதிகரித்து, ரூ.7,10,817.51 கோடியை எட்டியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments