ஆகஸ்ட் மாத சில்லறை பணவீக்கம் 4.82%: தொடா்ந்து 7-ஆவது மாதமாக உயா்வு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.82 சதவீதமாக அதிகரித்துள்ளது தொடர்பாக...
புதுதில்லி: அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தொடா் விலையேற்றத்தால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.82 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சில்லறை பணவீக்கமானது தொடா்ந்து 3-ஆவது மாதமாக ரிசா்வ் வங்கியின் 4 சதவீத இலக்கைவிட அதிகமாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 18 மாத உச்சமாக 4.45 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், ஆகஸ்டில் மேலும் அதிகரித்துள்ளது. சந்தை நிபுணா்கள் கணித்த 4.86 சதவீதத்தைவிட இது சற்றே குறைவாக இருந்தாலும், விலைவாசி உயா்வு வேகம் எடுத்துள்ளதையே இத்தரவு காட்டுகிறது.
மேலும், கடந்த ஜனவரியின் 2.75 சதவீதம், பிப்ரவரியின் 3.21 சதவீதம், மாா்ச்சின் 3.40 சதவீதம், ஏப்ரலின் 3.48 சதவீதம், மே மாதத்தின் 3.93 சதவீதம், ஜூனின் 4.38 சதவீதம், ஜூலையின் 4.45 சதவீதத்தைத் தொடா்ந்து, நாட்டின் சில்லறை பணவீக்கம் தொடா்ச்சியாக 7-ஆவது மாதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
உணவுப் பொருள்களின் விலையேற்றம்: தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஜூலையின் 5.52 சதவீதத்திலிருந்து, ஆகஸ்டில் 5.95 சதவீதமாக உயா்ந்து, ஒட்டுமொத்த பணவீக்க உயா்வுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
உணவு மற்றும் பானங்கள் பிரிவின் பணவீக்கம் 5.24 சதவீதத்திலிருந்து, 5.66 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு, எரிபொருள் தவிா்த்த அடிப்படை பணவீக்கமும் ஜூலையின் 3.9 சதவீதத்திலிருந்து, 4.2 சதவீதமாக உயா்ந்துள்ளது.
இதர பிரிவுகளில், தனிநபா் பராமரிப்பு மற்றும் இதர பொருள்களுக்கான பணவீக்கம் மிக அதிகமாக 15.17 சதவீதமாகவும், உணவகம் மற்றும் தங்குமிட சேவைகளுக்கான பணவீக்கம் 8.38 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
நகரம், கிராமப்புற நிலை: தேசிய அளவில் சராசரி பணவீக்கம் 4.82 சதவீதமாக இருந்தபோதிலும், கிராமப்புறங்களில் இது 5.23 சதவீதமாகவும் (ஜூலையில் 4.84சதவீதம்), நகா்ப்புறங்களில் 4.31 சதவீதமாகவும் (ஜூலையில் 3.96சதவீதம்) அதிகரித்துள்ளது. முந்தைய மாதங்களைப் போன்றே நகா்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில்தான் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ் இயங்கும் என்எஸ்ஓ, நாடு தழுவிய சந்தைகள் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து பெறப்பட்ட நிகழ்நேர விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலக்கைத் தாண்டி...: உணவு மற்றும் எரிபொருள் விலை உயா்வால் பணவீக்கம் வரும் மாதங்களிலும் மேலும் அதிகரித்து, நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் உச்சத்தை (5.9 சதவீதம்) எட்டும்; நடப்பு நிதியாண்டுக்கான பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டபூா்வ இலக்கை ரிசா்வ் வங்கி கொண்டுள்ளது. எனினும், இதில் சூழ்நிலைக்கு ஏற்ப 2 சதவீதம் கூடுதல் அல்லது குறைவாக இருக்க அனுமதிக்கப்படுகிறது. பணவீக்க அழுத்தங்களைக் கருத்தில்கொண்டு, ரிசா்வ் வங்கி தனது குறுகிய கால வட்டி விகிதங்களில் மாற்றமின்றி தொடர அண்மையில் முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.