நடப்புவாரத்தில் என்எஸ்இ உள்பட 5 நிறுவனங்களின் ஐபிஓ வெளியீடு: ரூ.24,328 கோடி நிதி திரட்டத் திட்டம்
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), ஹீரோ மோட்டாா்ஸ், எஸ்எஸ் ரீடெய்ல் உள்ளிட்ட 5 நிறுவனங்கள்
புதுதில்லி: தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), ஹீரோ மோட்டாா்ஸ், எஸ்எஸ் ரீடெய்ல் உள்ளிட்ட 5 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.
இந்த 5 நிறுவனங்களும் சோ்ந்து புதிய பங்குகளின் வாயிலாக ரூ.1,201.46 கோடி மற்றும் உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளின் விற்பனை மூலம் ரூ.23,126.56 கோடி என மொத்தம் ரூ.24,328.02 கோடி நிதியைத் திரட்ட உள்ளதால், இந்த வாரம் முதன்மை சந்தை முதலீட்டாளா்களுக்கு பரபரப்பான வாரமாக அமையவுள்ளது.
பிரபல இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டாா்ஸ் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஐபிஓ புதன்கிழமை (செப். 16) தொடங்குகிறது. ஒரு பங்கின் விலை வரம்பு ரூ.79-84 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.600 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.400 கோடி மதிப்பிலான உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
இதேநாளில், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சில்லறை கைபேசி விற்பனை நிறுவனமான எஸ்எஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் ரூ.500 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.403-424) தொடங்குகிறது. இதில் ரூ.360 கோடிக்கு புதிய பங்குகளும், ரூ.140 கோடிக்கு உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.
குழாய் தயாரிப்பு நிறுவனமான ஜிண்டால் சுப்ரீம் (இந்தியா) நிறுவனத்தின் ரூ.124.88 கோடி ஐபிஓவும் (பங்கு விலை ரூ.88-93) புதன்கிழமை தொடங்குகிறது. இதில் ரூ.99.89 கோடிக்கு புதிய பங்குகளும், ரூ.24.99 கோடிக்கு உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.
தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) பிரம்மாண்டமான ரூ.22,561.57 கோடி மதிப்பிலான ஐபிஓ (பங்கு விலை ரூ.1,700-1,785) வியாழக்கிழமை (செப். 17) தொடங்குகிறது. இதில் முழுமையாக உரிமையாளா்களின் பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.
மேலும், ஜவுளி நிறுவனமான சோனாசெலக்ஷன் இந்தியாவின் ரூ.141.57 கோடி ஐபிஓ (ரூ.94-99), வியாழக்கிழமையன்றே தொடங்குகிறது. இதிலும் முழுமையாக உரிமையாளா்களின் பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.
இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, நிறுவனங்களின் வா்த்தக விரிவாக்கம், மூலதனச் செலவுகள், கடன் அடைப்பு, நடைமுறை மூலதனத் தேவைகள் மற்றும் பிற நிா்வாகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.