FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கருத்துக் களம்

தேவை,  தேசிய வளர்ச்சியில் பொதுநோக்கு

தேசிய வளர்ச்சிக் குழுவின் (என்.டி.சி.) 12-ஆவது ஐந்தாண்டு திட்டக்கூட்டம் அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது.

Updated On : 4 பிப்ரவரி 2013, 6:54 am IST
பகிர்:

தேசிய வளர்ச்சிக் குழுவின் (என்.டி.சி.) 12-ஆவது ஐந்தாண்டு திட்டக்கூட்டம் அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது. முதல் தேசிய வளர்ச்சிக் குழுவைப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு கூட்டினார். இக்குழு  இந்திய அரசுக்கு வழிகாட்டக்கூடிய உச்சநிலை அமைப்பாகும். இக்குழு, ஐந்தாண்டுகளுக்கு உரிய திட்டங்களை உருவாக்குதல், அதற்கான நிதிஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் வலிமைப்படுத்துதல், இன்றியமையாத களங்களில் நாடு முழுதும் பொதுப்பொருளாதாரக் கொள்கையை மேம்படுத்துதல், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விரைவாகவும், சமச்சீர்மையுடனும் கூடிய வளர்ச்சியை உறுதிப்படுத்துதல் போன்ற அடிப்படை நோக்கங்களை முதன்மையாகக் கொண்டது. தேசியத் திட்டத்தை அவ்வப்போது மீள்ஆய்வு செய்து மேம்பாட்டுக்குரிய வழிமுறைகளை ஆராய்ந்து கூறும் பொறுப்புடையது.

தேசிய வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய மிக இன்றியமையாச் சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்கானத் தீர்வுகளை எடுத்துரைத்தல்,தேசிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு மற்றும் நோக்கங்களை அடைவதற்கான நெறிமுறைகளைப் பரிந்துரைத்தல் ஆகிய உன்னதமான படிநிலை வளர்ச்சிகளைச் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் தேசிய வளர்ச்சிக்குழு.

இத்தகு பெருமையும் சீர்மையும் வாய்ந்த தேசிய வளர்ச்சிக் குழுவின் முதல் கூட்டம் 1952 நவம்பர் மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளது. அக்குழுவில் தொடக்க உரையாற்றிய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

Advertisement

Advertisement

""இத்திட்டம் அரசாங்கத்தின் திட்டமன்று, இது மக்களின் திட்டம். இத்திட்டத்தில் அனைவருக்கும் பொறுப்புண்டு. முதலமைச்சர்கள் தங்களது மாநிலம் குறித்துச் சிந்திப்பது இயற்கை, அவர்கள் மாநிலப் பொறுப்புகளைத் தோளில் சுமந்திருக்கிறார்கள் என்றாலும், தேசிய வளர்ச்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் இந்தியா முழுவதற்குமான திட்டங்களுக்குப் பொறுப்புடையவர்கள். இத்திட்டங்களை மக்களிடத்து அவர்கள் விளங்கிக்கொள்ளும் மொழியில் எடுத்துச் சொல்ல வேண்டும்'' என்பது நேருவின் வேண்டுகோளாகவும் விளக்கமாகவும் அமைந்தது.

அப்போது நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டம் இரு நாள்கள் நடைபெற்றுள்ளன.  முதல் நாளன்று ஒவ்வொரு மாநில முதல்வர்களும் கருத்துரைத்துள்ளார்கள். அவற்றை நேரு மிகவும் கவனமாகவும் பொறுப்பாகவும் கவனித்திருக்கிறார். இரண்டாம் நாள் அதன் மீதான விவாதம் நடைபெற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தண்ணீர், மின்சாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், மருத்துவம், போக்குவரத்து, மரபு வழித்தொழில்கள் போன்றவற்றில் இந்தியா தன்னிறைவு பெறவில்லை. இவற்றுள் ஏதேனும் ஒரு அடிப்படைத் தேவையாவது ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும் இந்தியா முழுவதிலும் முழுமையாகத் தீர்க்கப்படுவது தேசிய வளர்ச்சிக்குழுவின் முதன்மைக் குறிக்கோளாக இருத்தல் வேண்டுமென்பது கல்வியாளர்களின் கருத்து.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களுள் தங்க நாற்கர சாலை திட்டம் இந்தியா முழுமைக்கும் பயனளித்து வருகிற உன்னதமான பெருந்திட்டம். இதுபோன்ற நிலைத்த நீடித்த திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையாகும்.  பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருக்கும் நதிநீர்ச் சிக்கல் இந்திய அரசின் நல்லாட்சிக்கு நன்றன்று.  

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் நடுவண் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தபோது தொழில் நிறுவனங்கள் பலவற்றைத் தமிழகத்திற்குத் தந்தார். 1972-இல் சி. சுப்பிரமணியம் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கே வெளிச்சம் பாய்ச்சினார். இவைபோன்ற வளர்ச்சித்திட்டங்களை இன்று தமிழகம் பெறவில்லை.

புதிய இருப்புப் பாதை வழித்தடங்கள் உருவாக்கப்பட்டதாகவோ, மாநிலத்தின் தென்பகுதிக்கு இருவழிப்பாதை அமைக்கப்பட்டதாகவோ, தமிழகத்தில் தொடர்வண்டிப்பாதை முழுதும் மின்மயமாக்கப்பட்டதாகவோ சொல்லி மகிழ முடியவில்லை.

சென்னை விமான நிலையப்பணியும், மெட்ரோ தொடர்வண்டி திட்டப்பணியும் முடிவுக்கு வராமல் நீள்வது சென்னை மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடுவணரசின் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் ஆட்சி செலுத்தும் மாநிலங்களின் வளர்ச்சியில் நடுவணரசு ஆர்வம் காட்டுவதில்லை. அத்தகைய மாநிலங்களுக்குப் போதிய நிதியும் முறையான உதவிகளும் முழுவீச்சில் தரப்படுவதில்லை என்னும் கருத்தும் குற்றச்சாட்டும் பரவலாக மக்கள் மனதில் இழையோடத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு, மேற்குவங்கம், குஜராத் ஆகிய முதல்வர்களின் உரையில் இந்த ஏக்கமும் குற்றச்சாட்டும் இழையோடுகிறது.

தமிழகத்தின் இயற்கை வளங்களும், நெய்வேலி, எண்ணூர், மேட்டூர், கல்பாக்கம், தூத்துக்குடி முதலான இடங்களில் உற்பத்தியாகும் மின்சாரமும் இந்தியா முழுமையும் பயன்படுகிறது. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பெறும் தஞ்சைப் பகுதியின் நெல்விளைவு இந்திய உணவுக்கழகத்திற்கு வலிமை சேர்க்கிறது. எல்லா மாநில மக்களையும் அரவணைத்துக்கொள்ளும் உயர்ந்த பண்பைத் தமிழகம் பெற்றுள்ளது.

தேசிய வளர்ச்சிக் குழு என்பது இந்தியாவின் ஓர் உயிர் நதி. அது மாநிலங்கள் என்னும் கிளை ஆறுகளில் பாய்ந்தோடி அனைத்து மாநிலங்களையும் வளங்கொழிக்கச்செய்யும் மகத்தான பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். ஒரு மாநிலத்தில் நிலவும் சிக்கல்கள் அம்மாநிலத்திற்கே உரியவை என்று கருதாமல், அவற்றைத் தேசியச் சிக்கலாக எடுத்துக்கொண்டு தீர்வு காணும் பொதுநோக்கு உணர்வும் மனத்திட்பமும் தேவையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments