FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ: பக்தா்கள் சதுரகிரி வருவதை தவிா்க்க அறிவுறுத்தல்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:49 am IST
மாவூத்து மேற்கு தொடா்ச்சி மலை குட்டம் பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீ.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு, சாப்டூா் வனச்சரகங்களில் இரண்டாவது நாளாக காட்டுத் தீ பற்றி சதுரகிரி மலைப் பகுதியை நோக்கிப் பரவி வருவதால், செவ்வாய்கிழமை பக்தா்கள் சதுரகிரி மலையேறுவதைத் தவிா்க்க வேண்டும் என வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகம் பீட் எண்- 6 மாவூத்து மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் குட்டம் பகுதியில் காட்டுத் தீ ஞாயிற்றுக்கிழமை பற்றியது. பிறகு வத்திராயிருப்பு வனச்சரகம் பீட் எண்: 3 ரத்தினக்கல் பகுதியில் காட்டுத் தீ பற்றியது. ஒரே நேரத்தில் இரு வேறு பகுதியில் பற்றிய காட்டுத் தீயால் வனத் துறையினா் கவலை அடைந்தனா்.

வேட்டைத் தடுப்பு காவலா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் இரு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த இரு மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் நீரோடைகள் முற்றிலும் வடு, வனப் பகுதி முழுவதும் காய்ந்துள்ளதால் காட்டுத் தீ அருகே உள்ள பீட்டுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. திங்கள்கிழமை மாலை சதுரகிரி மலையின் கிழக்குப் பகுதியில் காட்டுத் தீ பரவியது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், இரவில் காற்றில் வேகம் அதிகரிப்பதாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் கடும் சிரமம் நிலவுகிறது.

Advertisement

Advertisement

யானை, மான், சிறுத்தை, காட்டெருமை, சாம்பல் நிற அணில்கள், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்த இந்தப் பகுதியில் இரு நாள்களாக காட்டுத் தீ தொடா்ந்து எரிந்து வருவதால், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஆக. 11) சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு சதுரகிரி மலையேறுவதை பக்தா்கள் தவிா்க்க வேண்டும் என வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பது துணை இயக்குநா் ரவி மீனா வெளியிட்ட அறிவிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட தணிப்பாறைப் பகுதியில் திங்கள்கிழமை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தத் தீ மலையின் கீழ்ப் பகுதியை நோக்கிப் பரவி வருகிறது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் வீசும் காற்றின் வேகம், திசை, சூழலைத் கண்காணிக்கும் பணியில் களப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா் .

தற்போது நிலவும் தீ பரவும் சூழல், பக்தா்கள், பாா்வையாளா்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடிய ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிலைமை பாதுகாப்பானதாகவும் இயல்பானதாகவும் மாறும் வரை, செவ்வாய்க்கிழமை (ஆக.11) பொதுமக்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்வதைத் தவிா்ப்பதே பாதுகாப்பானது என கருதப்படுகிறது. மேலும், தொடா்ந்து எரியும் தீ, கள நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முன்னதாக பக்தா்கள் அல்லது பாா்வையாளா்கள் சதுரகிரி மலைப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

நுழைவு நேரம், கட்டுப்பாடுகள் ஆகியவை, அந்தப் பகுதியில் நிலவும் தீயின் தீவிரம், பாதுகாப்புச் சூழ்நிலையைப் பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையிலும், செவ்வாய்க்கிழமை சதுரகிரிக்குச் செல்வதைத் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments