ஹோர்முஸ் நீரிணைக்கு ‘நோ’! புதிய வழியைத் தேர்ந்தெடுத்த அமீரகம்!
ஹோர்முஸ் நீரிணைப் பாதையைத் தவிர்க்க அமீரகம் தேர்ந்தெடுத்த புதிய வழி பற்றி...
ஹோர்முஸ் நீரிணைப் பாதையை பயன்படுத்துவதை தவிர்க்க, இந்தியப் பெருங்கடல் அருகேவுள்ள ஃபுஜைரா துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளை ஐக்கிய அரபு அமீரகம் வேகப்படுத்தியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா போரால் கடந்த 4 மாதங்களாக ஹோர்முஸ் நீரிணை வழியாக சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் படைகள் ஏவுகணைகள், ட்ரோனகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையில் சென்ற ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) சரக்குக் கப்பல் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 10 இந்தியர்கள் பலத்த காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
இவ்வாறான பதற்றமான சூழலில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தை பெரும்பாலும் நம்பியிருக்கும் வளைகுடா நாடுகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் உலகளவில் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில், ஹோர்மூஸ் நீரிணையைப் பயன்படுத்தும் சரக்கு கப்பல்கள் 20% சதவிகிதம் சுங்கக் கட்டணம் தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டு, பின்னர் திரும்பப் பெற்றார்.
ஈரானும் ஹோர்மூஸ் நீரிணையைப் பயன்படுத்தும் சரக்குக் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதனை போர் நிறுத்த ஒப்பந்தத்தில் முக்கிய கோரிக்கையாகவும் வைத்திருந்தது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய ஜெபல் அலி துறைமுகத்துக்கு மாற்றாக ஃபுஜைரா துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளை அந்நாடு அரசு தொடங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய துறைமுகமாக ஜெபல் அலி இருந்தாலும், கடல்சார் உள்கட்டமைப்பை பன்முகப்படுத்தவும், சர்வதேச அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஒரு துறைமுகத்தை மட்டும் சார்ந்திருப்பதை தவிர்க்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெபல் அலி துறைமுகம் - பலமும் பலவீனமும்
துபையின் தென்மேற்குப் பகுதியில் 35 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஜெபல் அலி துறைமுகம், உலகளாவிய வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றது.
இந்த துறைமுகத்தில் கடந்தாண்டு மட்டும் 1.56 கோடி இருபது அடி கண்டெய்னர்கள் கையாளப்பட்டுள்ளது. உலகின் மிக முக்கியமான மறுஏற்றுமதி மையமாக இருக்கிறது. இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ஆசிய உற்பத்தியாளர்களை ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்காசியாவின் பிற பகுதிகளிலுள்ள சந்தைகளுடன் இணைக்கிறது.
ஆனால், ஜெபல் அலி துறைமுகத்தின் பலமே அதன் மிகப்பெரிய பலவீனமாக தற்போது மாறியுள்ளது.
பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்த துறைமுகத்துக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்துக் கப்பல்களும், ஹோர்மூஸ் நீரிணை வழியாக மட்டுமே செல்ல முடியும்.
ஈரான் - அமெரிக்கா போர் தொடங்கியதிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து 3,000-க்கும் அதிகமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. இதில், ஜெபல் அலி துறைமுகமும் தாக்குதலுக்குள்ளாகி தீ விபத்து ஏற்பட்டது.
தொடர் பதற்றம் காரணமாக ஜெபல் அலி துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 90 முதல் 95 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. போருக்கு முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையை நாளொன்றுக்கு சுமார் 135 சரக்குக் கப்பல்கள் கடந்து சென்றன. ஆனால், தற்போது போர் நிறுத்தம் செய்யப்பட்ட காலகட்டத்தில் நாளொன்று 40 கப்பல்கூட ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கவில்லை.
ஹோர்மூஸ் நீரிணையைக் கைவிடும் அமீரகம்
ஹோர்மூஸ் நீரிணை வழியாக பயணம் மேற்கொள்வதை தவிர்க்க ஓமன் வளைகுடாவை ஒட்டிய ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஃபுஜைரா துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை ஐக்கிய அரபு அமீரகம் தொடங்கியுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கப்பல் எரிபொருள் நிரப்பும் மையமாகவும், முக்கியமான எரிசக்தித் துறைமுகமாகவும் ஃபுஜைரா துறைமுகம் விளங்குகிறது.
அபுதாபியில் ஹப்ஷான் எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்திலிருந்து ஃபுஜைரா துறைமுகத்துக்கு குழாய்வழியாக நாளொன்றுக்கு சுமார் 18 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் அனுப்பப்படுகிறது. இதனை நாளொன்றுக்கு 50 லட்சம் பீப்பாய்களாக அதிகரிக்கும் நோக்கில், ஏற்கெனவே புதிய குழாய் வழித் திட்டங்கள் கட்டமைப்பில் இருக்கிறது.
இந்த நிலையில், ஃபுஜைராவின் தற்போதைய துறைமுகத்தில் புதிய பல்நோக்குத் துறைமுகம் மற்றும் புதிய கொள்கலன் முனையம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து துபையைச் சேர்ந்த டிபி வோர்ல்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த துறைமுகம் ஹோர்முஸ் நீரிணைக்கு வெளியே அமைந்துள்ளதால், சரக்குக் கப்பல்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை அடைய ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்தியப் பெருங்கடலில் இருந்து நேரடியாக ஃபுஜைரா துறைமுகத்தில் கொள்கலன்களை கப்பல்கள் இறக்கும். பின்னர், அந்தச் சரக்குகள் கனரக சாலை வலையமைப்பு மற்றும் ரயில் போக்குவரத்துகள் மூலம் தரைவழியாக துபாய், அபுதாபி மற்றும் அண்டை வளைகுடா நாடுகளுக்குக் கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்படவுள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஃபைனான்ஷியல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மைத் துறைமுகமாக ஜெபல் அலி துறைமுகம் செயல்பட்டாலும், நிலையற்ற காலங்களில் வர்த்தகம் தடையின்றி நடைபெற உதவும் திறன்கொண்ட இரண்டாவது நுழைவுவாயில் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹோர்மூஸ் நீரிணைப் பாதையைத் தவிர்ப்பதில் வளைகுடா நாடுகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஃபுஜைரா துறைமுகத்தின் விரிவாக்கம் மாற்று வழியாக அமைந்துள்ளது.
To skip Strait of Hormuz, UAE chooses a new plan and port
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.