பதிவுகள்: வருங்காலத் தலைமுறைக்கு வளம்!
நூல், ஆடையானாலும் இலக்கியமானாலும் மானம் போற்றும்; பண்பாடு காக்கும். பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் ஓலைச் சுவடிகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அதுவரை கிடைத்த இலக்கியங்களைத் தொகுப்பதில் அரசர்களும் புலவர்களு
நூல், ஆடையானாலும் இலக்கியமானாலும் மானம் போற்றும்; பண்பாடு காக்கும்.
பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் ஓலைச் சுவடிகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அதுவரை கிடைத்த இலக்கியங்களைத் தொகுப்பதில் அரசர்களும் புலவர்களும் அக்காலத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதி நூல்களையும் இலக்கியங்களையும் தொகுத்துப் பதினென்கீழ்க்கணக்காக்கியுள்ளனர். சிறு, பெரும் காப்பியங்களை வகைப்படுத்தியுள்ளனர். தேவாரத் திருமுறைகளையும் திவ்ய பிரபந்தங்களையும் பக்தி இலக்கியங்களாகத் தொகுத்து வைத்துள்ளனர்.
தொகுப்பதும் வகுப்பதும் பாதுகாக்கவும் பயன்படுத்தவும் உதவி வந்திருக்கின்றன. அச்சு ஊடகம் வரும்வரை இவ்வாறு தமிழ்நூல்கள் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளன. தமிழகத்தில் மடங்கள், கல்விநிறுவனங்கள் மட்டுமின்றித் தனிநபர்களும் இத்தகைய பணிகளில் பங்களித்து வந்துள்ளனர்.
Advertisement
Advertisement
ஒரு நாடு அல்லது இனத்தின்மீது அந்நிய ஆதிக்க ஆளுமை ஏற்படுகிறபோதெல்லாம் தமக்குரிய பண்பாட்டுக் கருவூலங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அந்நிய ஆதிக்கக்காரர்கள் தங்களுடைய ஆளுமைக்குட்படுத்தப்பட்ட நாடு, இனத்தின் மீது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அந்த இனத்தின் பண்பாட்டு வேர்களைக் கண்டறியவும் தொகுத்தல் தொகுப்பித்தல் முயற்சிகள் நடைபெற்று வந்திருக்கின்றன. ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் தொடங்கிய இத்தகைய பணி அச்சு ஊடகத்திலும் தொடர்ந்து மின் ஊடகத்திலும் வெளிப்படுவதைக் காண முடிகிறது.
கி.பி.16 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் நூல்கள் அச்சேறத் தொடங்கிவிட்டன. கர்னல் காலின் மெக்கன்சி (1756 - 1821) என்பவர் சென்னை மாகாணத்தின் முதல் தலைமை நில ஆய்வாளராக (First Surveyor General) நியமனம் செய்யப்பட்ட பிறகு, பணிகளுக்காக அவர் சென்ற இடங்களிலிருந்தெல்லாம் சுவடிகளையும் கல்வெட்டுகளையும் நாணயங்களையும் நாட்டுப்புறக் கதைகளையும் வழிபாட்டுமுறைகளையும் வாழ்வியல்நெறிகளையும் தொகுத்திருக்கிறார். இலண்டனுக்கு எடுத்துச் சென்றவை போக எஞ்சியவை அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் தற்போதும் பயன்பட்டு வருகின்றன.
ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராகச் சென்று தொகுத்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. ஆனாலும் பெயர் மட்டுமே தெரிய வந்து காணாமல் கைநழுவிப்போன தமிழ்நூல்கள் இன்றுவரை கிடைக்கவேயில்லை. அச்சுநூல்களுக்கும் அதே நிலை.
அச்சிடப்பட்டு வெளிவந்துள்ள தமிழ்நூல்கள் இதுவரை எவ்வளவு? அவற்றின் பெயர்கள் ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் என்னென்ன பொருண்மைகளில் எவ்வளவு நூல்கள் வெளிவந்துள்ளன போன்ற தகவல்களை நாம் பெறுவதற்கு ஐரோப்பியரே வழிகாட்டியுள்ளார்கள்.
கி.பி.1865 வரை தமிழில் வெளிவந்த அச்சு நூல்களின் தகவல்களைத் தொகுத்து அட்டவணைப்படுத்தித் தந்த பெருமை ஜான் மர்டாக் (John Murdoch 1819 - 1904) என்பவரையே சேரும்.
சமயம், தத்துவம், இலக்கியம், மொழியியல், கணிதம், புவியியல் மற்றும் வரலாறு, காலமுறை இதழ்கள், செய்தித்தாள்கள் என்று ஒவ்வொரு வகைப்பாட்டிலும் அச்சாகி வெளிவந்துள்ள நூல்களின் எண்ணிக்கை, நூலின் பெயர், ஆசிரியர், நூலில் கூறப்பட்டுள்ள பொருளின் சுருக்கம் என்று அவர் ஆற்றிய பணி போற்றுதற்குரியது. இந்த அட்டவணை (Classical Catalogue on Tamil Printed books) மட்டும் இல்லாமல் போயிருந்தால் 1865 க்கு முற்பட்ட அச்சு நூல்களின் தகவல்களை முழுமையாக அறிய இயலாமற் போயிருக்கும்.
ரெவரண்ட் ஜே.லாங் என்பவரிடமிருந்து இக்கருத்தாக்கத்தைப் பெற்று, உலகப் புள்ளிவிவரக் குழுமத்தின் (The International Statistical Congress)அறிக்கையிலிருந்து செயற்திட்டத்தை உருவாக்கி, ஜான் மர்டாக், அட்டவணைப் பணியை மேற்கொண்டுள்ளார்.
தமக்குப் போதிய அளவு தமிழில் பயிற்சி இல்லை என்றபோதும் மாநிலக் கல்லூரியில் அக்காலத்தில் பணியாற்றி வந்த தமிழாசிரியர்களுடன் கலந்துரையாடியும் சென்னை, அரசுப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராக விளங்கிய சி.இராசகோபால்பிள்ளை, மெக்கன்சி சுவடிப் பொறுப்பாளராகப் பணியாற்றிவந்த டி.எஸ். கோதண்டசுவாமி ஐயர், தமிழில் நூல்களைப் படைத்துவந்த ஐரோப்பியத் தமிழறிஞர் ரெவரண்ட் எஸ்.வின்பிரெடு (தங்ஸ். ந.ரண்ய்ச்ழ்ங்க்)ஆகியோரின் உதவிகளைக் கொண்டும் இப்பணியை முடித்திருக்கிறார்.
கால்டுவெல் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' ரெவரண்ட் எச்.பெüவர், தமிழ்மொழி, இலக்கியம் குறித்துக் கொல்கத்தா இதழில் (Calcultta Reveiw Vol.xxv) எழுதிய கட்டுரைகள், டைலர் தயாரித்த கீழ்த்திசைச் சுவடிகளின் விவர அட்டவணை, பட்ங் பஹம்ண்ப் டப்ன்ற்ஹழ்ஸ்ரீட், எல்லீசு அவர்களின் குறள் மொழிபெயர்ப்பு, பெஸ்கி எழுதிய தமிழ் இலக்கணம், வில்சன், மாக்ஸ்முல்லர், மூர், கென்னட், பெர்சிவல், ரெவரண்ட் பி.ஆஷ்டான் மற்றும் பலர் எழுதிய நூல்களிலிருந்தும் ஜான்மர்டாக் தகவல்களைத் தொகுத்துள்ளார்.
இந்த அட்டவணைப் பணிக்கு, சென்னை, வேப்பேரி, ‘The Christian Vernacular Education Society for India’ நிறுவனம் தோள் கொடுத்துள்ளது. இந்நிறுவனமே 1865 இல் முதற்பதிப்பாக மர்டாக் தமிழ்நூல் விவர அட்டவணையை வெளியிட்டுள்ளது.
ஜான் மர்டாக் உடல் நலமின்மையாலும் வேறு பணிகளின் நெருக்கடியாலும் அவசரம் அவசரமாக அட்டவணைப் பணியை முடித்துள்ளார். ஆனாலும் ஒரு தமிழ்நூல் பற்றி இரண்டு தமிழாசிரியர்களிடம் ஒத்த கருத்து இல்லையென்றால் மூன்றாவதாக ஒரு தமிழாசிரியரைத் தேடிச் சென்று உறுதி செய்து கொண்ட பின்னரே நூல் விவர அட்டவணையில் தகவலைச் சேர்த்திருக்கும் ஜான்மர்டாக் அவர்களின் பணி நெகிழ வைக்கிறது. இப்படி அரும்பாடுபட்டு நிறைவேற்றிய அட்டவணை அச்சாகும் வரை அவர் சென்னையில் இருக்க முடியாமல், கையெழுத்துப் படிகளை அப்படியே விட்டுவிட்டு இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
ஜான் மர்டாக் நூல் விவர அட்டவணையில் இடம் பெற்றுள்ளவாறு 1865 வரை வெளிவந்துள்ள தமிழ் அச்சுநூல்களின் எண்ணிக்கை 1755. பொருண்மையின் அடிப்படையில் நூல்களின் எண்ணிக்கை அட்டவணையில் காண்க:
இந்த அட்டவணை நூலின் அறிமுக உரையில், ஜான் மர்டாக் தமிழ்மொழி, இலக்கியம், தமிழ்க் கல்வி, தமிழில் வெளிவர வேண்டிய (தேவையான நூல்கள்), பல்கலைக் கழகம் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கான பாட நூல்கள், அச்சுமுறை, பதிப்புரிமை, வட்டார மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு அரசின் கடமை, தமிழ் வங்காள அச்சு நூல்களின் ஒப்பாய்வு, தமிழ்ப் புலவர்களின் விவரங்கள் ஆகிய ஆய்வுக் குறிப்புகளையும் தகவல்களையும் தந்துள்ளார்.
இந்த அட்டவணை நூலின் மறுபதிப்பு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது (1968) பேராசிரியர் மு.சண்முகம் அவர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு வெளியீடாக வெளிவந்துள்ளது.
ஜான் மர்டாக் அட்டவணையில் இடம்பெறாத நூல்களின் தகவல்களையும் 1865 க்குப் பின்னர் 1896 வரை வெளிவந்த அச்சுநூல்களின் பட்டியலையும் ("தமிழில் அபிருசியுள்ள மாணாக்கர்களுக்கு உதவியாக வகுத்த தமிழிலக்கிய அகராதி' எனும் தலைப்பிட்டு கி.பி.1896 ஆம் ஆண்டு, திருமணம் செல்வக்கேசவராய முதலியாரால் வெளியிடப்பட்ட "தமிழும் தமிழரும்' எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது) ஜி.யு.போப் மற்றும் டாக்டர் எல்.டி. பர்னட் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட பிரிட்டன் அருங்காட்சியக அட்டவணையில் உள்ள தமிழ்நூல்களின் தகவல்களையும் சேர்த்து 1900 வரை வெளிவந்துள்ள தமிழ் அச்சு நூல்களின் விவர அட்டவணையாக மறுபதிப்பு வெளிவந்துள்ளது.
திருமணம் செல்வக்கேசவராய முதலியார், ஜான்மர்டாக் போன்று தமிழில் வெளிவந்துள்ள அனைத்து அச்சு நூல்களுக்கும் பட்டியல் தராமல் மாணவர்களின் பயன்பாட்டு நோக்கில் மட்டுமே தமிழ்நூல்களின் பட்டியலை அளித்துள்ளார். ஆனாலும் தமிழில் மேற்கொள்ளப்பட்ட தமிழரால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாகவும் அரும்பணியாகவும் அது இருந்தது. தமிழிலக்கிய அகராதிக்காக அவர் ஆற்றியுள்ள பணி போற்றுதற்குரிய தகவல்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக 1896 க்கு முன்பே, "பாரதி' என்பவரால் பாரதிதீபம் எனும் பெயரில் நிகண்டொன்று இயற்றப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு தமிழில் 1865 வரை வெளிவந்த அச்சு நூல்களின் தகவல்களை ஜான்மர்டாக் அட்டவணை தருகிறது. 1865க்குப் பின்னர் 1956 வரை தமிழ்நூல் விவரங்களைத் தமிழ் வளர்ச்சித்துறை அட்டவணைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 1956 க்குப் பின் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்நூல் விவரங்கள் கன்னிமாரா நூலகப் பதிவின் வழி அறிய வாய்ப்பிருக்கிறது. இந்த அட்டவணைகளில் இடம் பெறாமல் வெளிநாடுகளிலுள்ள தமிழ்நூல் விவரங்கள் தொகுத்தறியப்பட வேண்டும்.
இவ்வாறு தமிழில் இதுவரை வெளிவந்துள்ள நூல்களின் பட்டியலைக் கண்டறியும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அனைத்து நூல்களையும் பார்க்கவோ படிக்கவோ வாய்ப்பில்லை. வந்துள்ள நூல்களின் பட்டியலைக் கொண்டு பொருண்மை வரிசையில் அவை வகைதொகைப்படுத்தப்பட வேண்டும். ஆய்விற்கும் பயன்பாட்டிற்கும் தரவுகளாக்கப்பட வேண்டும். தரவுகள் மின்தரவுகளாக்கப்பட்டால் உலகநாடுகளில் கவனிப்பாரின்றி வைக்கப்பட்டிருக்கும் தமிழ்நூல்களும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் பயன்தரும் காலம் வரும். இது தமிழ் ஆய்வினையும் பதிப்புகளையும் மேம்படுத்தும்; வருங்காலத் தலைமுறைக்கும் வளம் சேர்க்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.