FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

அறியப்படாதவர்களை அறிய வைக்க..!

நாடு சுதந்திரம் அடைந்து, 78 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், வல்லரசு நாடாகும் அளவுக்கு வலிமை பெற்றுள்ளோம்.

Updated On : 21 டிசம்பர் 2025, 12:00 am IST
பகிர்:

நாடு சுதந்திரம் அடைந்து, 78 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், வல்லரசு நாடாகும் அளவுக்கு வலிமை பெற்றுள்ளோம். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று உயிரையும், பொன் - பொருள் - உடைமைகளைத் துறந்த ஆயிரக்கணக்கானோரில் முக்கியத் தலைவர்களையே நாம் நினைவில் கொண்டுள்ளோம். அறியப்படாமல் உள்ள தியாகிகள் குறித்த விவரங்களை வெளிக்கொணர மத்திய, மாநில அரசுகளோடு இணைந்து பலரும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அறப்பணியில் ஈடுபட்டுள்ள சிலரிடம் பேசியபோது:

ஆவணப்பட இயக்குநர் சுந்தரராஜன்

Advertisement

Advertisement

2017 முதல் 2019 வரையில் வட திராவிட மொழிகள் குறித்து ஆவணப் படத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டேன். இந்தப் பணியை முடித்தபோது, 2020-இல் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது எனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பூலாம்படி கிராமத்தில் சில மாதங்கள் தங்கியபோது, தமிழ்ப் பல்கலை. பேராசிரியர் தெய்வநாயகத்தின் அறிவுரையின்பேரில், பெரம்பலூர் மாவட்டம் குறித்த வரலாற்றுத் தேடல் பணியில் ஈடுபட்டேன்.

1920-க்குப் பின்னர் சுதந்திரப் போராட்டம் குறித்தான தகவல்களே இருந்தன. தியாகிகள் குறித்து சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதை அறிந்தேன். அவர்கள் குறித்துத் தேடும்போது, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா, 'பெரம்பலூர் மாவட்டத்தை மட்டும் ஆவணப்படுத்தாதே... பிற மாவட்டங்களைச் சேர்ந்த தியாகிகள் குறித்தும் ஆய்வு செய்யலாமே' என்று அறிவுறுத்தினார். இதன்பேரில் பணியைத் தொடங்கினேன். மத்திய தொல்லியல் துறை அலுவலர் அருண்ராஜும் பெரிதும் உதவினார்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் பங்கேற்ற 10 ஆயிரம் பேரில், 7 ஆயிரம் பேர் குறித்து சிறு தகவல்களையும், 750 பேர் குறித்து முழு தகவல்களையும் சேகரித்தேன். இவற்றை 2 ஆயிரம் பக்கங்களில் ஆவணப்படுத்தியுள்ளேன். 'விடுதலைப் போராட்டத்தில் புதுக்கோட்டை', 'விடுதலைப் போராட்டத்தில் திருச்சி' என இரு நூல்களை வெளியிட்டுள்ளேன்.

1930-இல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில், திருச்சியில் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் 99 பேர் யாத்திரையாகப் பயணித்து, வேதாரண்யத்தில் நிறைவு செய்தனர். திருச்சியில் டி.எஸ்.எஸ்.ராஜன் வீட்டில் இந்த யாத்திரையை மகாத்மா காந்தி தொடங்கிவைத்துள்ளார். பயணித்த 99 பேர் யாரென்று தேடும் பணியில் ஈடுபட்டேன். பல மாத முயற்சிக்குப் பின்னர், 50-க்கும் மேற்பட்டோர் குறித்த முழு விவரங்களையும் சேகரித்துவிட்டேன். நான் ஆவணப்படுத்தியுள்ள விவரங்களைப் பார்த்தால், தியாகிகளோடு நின்றுவிடாது. அவர்களது கொள்ளுப் பேரன்கள், பேத்திகள் குறித்த குறிப்புகளும், புகைப்படங்களும்கூட இருக்கும்.

'இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்கள் பங்கு' என்ற நூலை நிறைவு செய்யும் நிலையில் உள்ளேன். இந்தியா மட்டுமன்றி, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசித்த தமிழர்களும் நேதாஜி அழைப்பின்பேரில், இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) இணைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறித்து இதுவரை எவரும் ஆவணப்படுத்தாத வரலாற்றை நான் தொகுத்துள்ளேன்.

இந்த நூலை வரும் ஜனவரியில் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளேன். சுதந்திர தின நூற்றாண்டு விழாவின்போது, தியாகிகளின் குடும்பத்தாரை அரசு எளிதாக அடையாளம் காண எனது ஆவணங்கள் உபயோகமாக இருக்கும்.

தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய முதல்வர் (பணி நிறைவு) ஜே.ஸ்டெல்லா மதியழகன்

ஐ.என்.ஏ. வீரராக இளம்வயதிலேயே இணைந்து பணியாற்றி, இரண்டாம் உலகப் போருக்குச் சென்ற எனது மாமா திரும்ப வராததால், எனது அத்தை சண்முகத்தாய் தனது இரு கைக்குழந்தைகளுடன் சங்கரன்கோவில் அருகேயுள்ள எங்கள் சொந்தக் கிராமத்துக்கு வந்துவிட்டார். எனது தந்தையும் ஐ.என்.ஏ. படையில் பணியாற்றியவர். இதுபோன்ற விஷயங்கள் என்னை இந்தப் பணியில் ஈடுபட வைத்தது.

'சுதந்திரப் போரில் தமிழச்சிகள்' என்ற முதல் நூலையும், 'சுதந்திரப் போரில் தமிழர்கள்' என்று இரண்டாம் நூலையும் வெளியிட்டேன். 'சுதந்திரப் போரில் தமிழகத் தியாகிகள்' என்ற பெயரில் மூன்றாவது நூலாக்கியுள்ளேன். தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம், ராணுவ மையம், ஐ.என்.ஏ. வாரிசுதாரர்கள் பேட்டி, நூல்கள்- செய்தித்தாள்கள் என்று பலவகைகளில் கிடைத்தத் தகவல்களின்படி, 400 தியாகிகள் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளேன்.

'ஒப்பிட முடியாத, சமரசம் ஆகாத தியாகிகள்' என்ற தலைப்பில், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற முக்குலத்தோர் ஆளுமைகள் குறித்த நூலை வெளிக்கொணரும் முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். மாவீரன் பூலித்தேவன், முத்துவடுக

நாதர், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் தியாகம் இதில் இடம்பெறும். 1751-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயரிடம் போரிட்ட பூலித்தேவன், திப்பு சுல்தானுடன் இணைந்து போரில் ஈடுபட்ட வேலு நாச்சியார், திப்பு சுல்தானும் வேலு நாச்சியாரும் பரஸ்பரம் இருவரும் மதநல்லிணக்கத்தைப் பேணும் வகையில் கட்டிய வழிபாட்டுத் தலங்கள், சுதந்திரப் போரில் ஆண்களின் உயிர் தியாகத்துக்கு எப்போதும் தயார் என்று பெண்கள் அணிந்த கருப்புக் கயிறு மாங்கல்யம் போன்ற அறியப்படாத வரலாற்றுத் தகவல்கள் இந்த நூலில் இடம்பெறும். சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு குறித்து விரிவாகத் தகவல்களைச் சேகரித்து, வெளிக்கொணரும் முயற்சியில் இருப்பேன்.

சென்னை பாடியைச் சேர்ந்த என்.ஆர்.மணி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்கள் பங்கு என்பது அளப்பரியது. முக்கியமான தலைவர்கள் என நூறு பேர் வரையில்தான் மக்கள் நினைவில் வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் குறித்து இளையத் தலைமுறையினருக்குச் சரிவரத் தெரியவில்லை.

அகிம்சை, சகிப்புத்தன்மை, ஒழுக்கம், மக்கள் நலம், நாட்டுப் பற்று என்று தன்னலம் கருதாது, பொதுநலத்தோடு வாழ்ந்த அவர்களின் வரலாறு குறித்து மாணவர்கள், இளையத் தலைமுறையினர் அறியும் வகையில் 'தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள்' என்ற நூலை வெளியிட்டேன்.

இதில், 108 தியாகிகள் குறித்து ஓரிரு பக்கங்களில் சுருக்க வரலாறு இடம்பெற்றிருந்தது. அடுத்ததாக, 100 தியாகிகள் குறித்த வரலாற்றைத் தொகுத்து இரண்டாவது நூலை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதற்கான விவரங்களை பல்வேறு நூல்களில் இருந்தும், பல்வேறு வகைகளிலும் சேகரித்து வருகிறேன்.

இதுபோன்ற நூல்களை கல்வி நிலையங்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றால், இளையத் தலைமுறையினருக்கு நாட்டுப் பற்றும் அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments