FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

மனதோடு நீ...

ஆபீஸ் மீட்டிங்கை முடித்துவிட்டு வெளியே வந்த நான் என் செல்போன் அழைப்பை எடுத்து டிஸ்ப்ளேவை பார்த்தேன். பள்ளிக்கால நண்பன் சுந்தர் அழைத்திருக்கிறான்.

Updated On : 3 பிப்ரவரி 2025, 6:41 pm IST
பகிர்:

ஆபீஸ் மீட்டிங்கை முடித்துவிட்டு வெளியே வந்த நான் என் செல்போன் அழைப்பை எடுத்து டிஸ்ப்ளேவை பார்த்தேன். பள்ளிக்கால நண்பன் சுந்தர் அழைத்திருக்கிறான். இருவரும் நான் கிராமத்தில் இருந்தபோது, ஒன்றாகச் சுற்றி திரிவோம். ஊரிலேயே இருக்கும் அவன், இயற்கை விவசாயி.

'சொல்லுடா சுந்தர்.''

'எத்தனை முறையா ஃபோன் பண்றது? ஏன் எடுக்கலை?''

Advertisement

Advertisement

'ஸாரிடா. மீட்டிங்ல கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். செல்லை சைலன்ட் மோடில் போட்டிருந்தேனா.அதான் எடுக்க முடியல.சொல்லு..என்ன விஷயம்?''

'வர்ற பத்தாம் தேதி ஊர்ல திருவிழா.. ஃபங்ஷன் வச்சிருக்கேன்..கண்டிப்பா வர்றே.''

'ஸாரிடா..வர முடியாதுப்பா. வேலை இருக்குடா?''

'அப்டியா ..'' என்றவன்,'சாந்தியையும் கூப்டுருக்கேன்டா..அவ வர்றா..''

அவன் சொன்னதும் என் மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தது. மனதில் ஏதோ சொல்ல இயலாத பரவசம் ஏற்பட,'என்னடா..என்ன சொல்றே?'' என்றேன்.

'ஆமாம்ப்பா. நம்ம செல்வி ஊர்லதான் அவளும் இருக்கா. செல்வியை கூப்பிட போனேன்.அப்ப யதேச்சையா பார்த்தேன். ஆச்சரியம். அவளுக்கும்தான்.''

'ம்.''

'கண்டிப்பா வர்றதா சொன்னா. உன்ன பலமுறை விசாரிச்சாடா? உன்னை கூப்பிட்டிருக்கேன்னு சொன்னேன்.கண்டிப்பா வர்றதா சொன்னா?''

'நம்பவே முடியலைடா. பத்தாம் தேதிதானே? சரி..கண்டிப்பா வர்றேன்..'' என்று சொல்லிவிட்டு, சில நிமிடங்கள் பேசிவிட்டு ஃபோனை வைத்தேன்.

'கண்டிப்பாக போயாக வேண்டும்..சாந்திக்காக..' என்று மனதுக்குள் நினைத்தவாறே, தளர்வாய் சேரில் சாய்ந்தேன். கண்ணை மூடினேன். என்னுள்ளே நிறைந்து கிடந்தவள் அவள் முழுதாய் நினைவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தாள்.

அப்போது நாங்கள் பிளஸ் டூ. நாங்கள் என்றால், சுந்தர், இன்னொரு நண்பன் கணேஷ், அப்புறம் சாந்தி. அவள் நல்ல வெள்ளை நிறம். பட்டாம்பூச்சி கண்கள். சுருக்கமாகச் சொன்னால் தேவதை.

எங்கள் ஊர் பள்ளிப்பட்டியில் இருந்து பிளஸ் டூ படிக்க பக்கத்து கிராமம் பையர்நத்தமுக்குதான் போக வேண்டும். எங்கள் ஊரில் அப்போது ஹை ஸ்கூல் வரை மட்டும்தான் இருந்தது. இரண்டு கிலோ மீட்டர் நடந்துதான் போக வேண்டும். ஜாலியாக பேசிக் கொண்டு போவதில் நேரம் போவது தெரியாது.

இரண்டு வீடுகள் தள்ளி அவள் வீடு. பாடத்தில் சந்தேகம் கேட்க போவேன். அப்போதெல்லாம் அவர்கள் வீட்டில் செய்யும் எள்ளுருண்டையோ,அதிரசமோ.. முருக்கோ,.ரகசியமாக எனக்கும் கிடைக்கும். அந்த வயதுக்கே உரிய கிரஷ் அவள் மேல், அவளுக்கும் இருந்திருக்குமோ தெரியவில்லை.

அன்று காலை வழக்கம் போல நாங்கள் நால்வரும் நடந்து ஸ்கூலுக்கு ஜாலியாக பேசிக் கொண்டே போய் கொண்டிருந்தோம்.. சுந்தர்தான் ஆரம்பித்தான். என்னைப் பார்த்து சொன்னான்.

'சந்தோஷ். நீ நல்லா கவிதை எழுதுவியே.ஒண்ணு சொல்லேன்.''

'காலைலதான் ஒண்ணு எழுதினேன்.சொல்றேன்.கேக்கறீங்களா?''

'சொல்லு..சொல்லு..''

குரலை செருமிக் கொண்டேன். என் மனதில் வைரமுத்து வந்து போனார். சொன்னேன்.

'பறவையின் சிறகுகளால் நிரம்பி இருக்கும் அத்தனை வானமும் அழகு''

'சூப்பர்டா..'' என்று சுந்தரும்,கணேஷும் கை தட்ட ,என்னை ஆச்சரியமாக பார்த்தாள் சாந்தி.

'நீ கவிதையெல்லாம் எழுதுவியா?''

அவள் என்னை ஆச்சரியமாகவும்,பெருமையாகவும் பார்த்ததைப் பார்த்து மிதந்தேன்..

'ம்.எப்டி இருக்கு?''

'அற்புதமா இருக்கு..'' என்றாள் அழுத்தமாக என்னையே பார்த்தபடி..

'இன்னொன்னு சொல்றேன் கேக்கறியா?''

'ம்..''

'வாசிப்பவன் கண்களுக்கு

மட்டுமே புலப்படும்

ஒவ்வொரு மூங்கிலிலும்

இருக்கும் புல்லாங்குழல்.''

'வாவ்..சூப்பரா இருக்குப்பா. உன்கிட்ட இவ்வளவு திறமை இருக்குன்னு எனக்கு இன்னிக்குதான் தெரியும்..'' என்று சொன்ன சாந்தியின் கண்களில் இருந்தது என்ன மாதிரி உணர்ச்சி என்று புரியவில்லை எனக்கு. ஆனால் அவள் மனதில் என்னை ஹீரோவாக அவள் பார்க்க ஆரம்பித்திருந்தது மட்டும் எனக்கு புரிந்தது.

'கவிதையெல்லாம் இருக்கட்டும்..தமிழ் சார் திருக்குறள் பத்து மனப்பாடம் பண்ணிட்டு வர சொல்லி இருந்தாரே..மனப்பாடம் பண்ணிட்டியா?'' என்று சாந்தி கேட்கவும்தான் ஞாபகமே வந்தது.தூக்கி வாரிப் போட்டவனாய் அவளை பார்த்தேன். சுத்தமாய் மறந்து விட்டிருந்தேன்.

என் முழியே நான் படிக்கவில்லை என்பதை அவளுக்கு உணர்த்தி இருக்கும்.

'படிக்கலை..அப்படிதான?.ராத்திரியெல்லாம் அப்படி என்னதான்டா பண்ணிட்டு இருந்தீங்க? ஒன்னையா சார் பத்தி தெரியும்ல?'' அவள் முகத்தில் அவ்வளவு கோபம்.

தமிழ் சார் பெயர் ஒன்னையா. முடியில்லாத தலை. எப்போதும் தும்பை பூ வெள்ளை, வேட்டி சட்டை. நெற்றியில் திருநீர். தினம் பளிச் ஷேவிங்..இதான் ஒன்னையா சார்.

தமிழ் வகுப்பு எடுத்தாரென்றால் உண்மையிலேயே காதில் தேன் வந்து பாயும்.அவ்வளவு அற்புதமாக இருக்கும். கிளாஸ் ஆரம்பிப்பதும் தெரியாது. முடிவதும் தெரியாது. கம்பராமாயணம், சிலப்பதிகாரம் எல்லாம் அவர் நடத்தி கேட்க வேண்டும். ராம, லட்சுமணர்களை,கோவலனை, கண்ணகியை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுவார். அவர் எங்கள் கிளாஸ் டீச்சர் வேறு. ஆனால் கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான். மனிதர் ருத்ரதாண்டவம் ஆடி விடுவார்.

தினமும் ஹோம் ஒர்க் கொடுப்பார்..ஏதோ ஒரு காரணத்தினால் செய்யாமல் போகிறவன் அவ்வளவுதான். ஒழிந்தான்.அன்று மூங்கில் தடி ஒடிந்துவிடும். அதை நினைத்துதான் நானும்,சுந்தரும் நடுங்கினோம்.

'கேக்கறேன்ல.சொல்லுங்கடா'' என்ற சாந்தியின் குரல் மீண்டும் எங்களை உசுப்பியது.

'அது வந்து. .வந்து சாந்தி..''

'என்ன..ஊர் சுத்தப் போனீங்களா?''

'இல்ல சாந்தி.. நம்ம மாரியப்பன் ஐயாவோட காட்டுல கடலக்காய் நல்லா வெளைஞ்சிருக்குல்ல. அத வேய்ச்சி சாப்டா நல்லாருக்கும்னு நம்ப வளையாபதி சொன்னான். அதான் ராத்திரி நான், சந்தோஷ், வளையாபதி மூணு பேரும் கடலக்காய் திருட போனோம். அங்கயே சுட்டு சாப்டோம். ஆஹா..என்னா ருசிங்கற..திருட்டு பொருளுக்கே ருசி அதிகம்தான் போ.'' என்று சுந்தர் பல் இளித்தபடி சொன்னான்.

'புட்டு அண்ணனோட காட்டு குச்சி கிழங்க மறந்துட்டியே..'' என்றேன் நான்.

இரண்டு காடுகளும் பக்கம் பக்கமே. இரவில் அடிக்கடி நாங்கள் இப்படி வீர சாகசங்களில் ஈடுபடுவதுண்டு.

நேற்று இரவும் அப்படிதான் திருட்டு கடலை,கிழங்கு சாப்பிட ஆசைப்பட்டு திருக்குறள் படிக்க மறந்து நிற்கிறோம்.

'வாய்க்கு வக்கணையா தின்னீங்க இல்ல.இன்னைக்கு வந்து நல்லா வாங்குங்க..'' என்றாள் சாந்தி.

'சாந்தி...சாந்தி..தப்பிக்க ஏதாவது ஐடியா குடேன்.''

'ஒரு வழியும் இல்ல.. மனப்பாடம் பண்ணிட்டு போனாதான் தப்பிக்க முடியும்.''

'இப்பவா?..எப்படி?''

'பயப்படாதே. நான் படிச்சுட்டேன்.ரெண்டு பேருக்கும் சொல்லி தர்றேன்.''

பள்ளிக்குப் போக இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. பத்து குறளையும் அவள் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்ல, கால் மணி நேரத்தில் எல்லாம் மனப்பாடமாகி விட்டது. அடுத்த ஐந்து நிமிடங்களில் நாங்களே பத்தையும் வரிசையாக மட மடவென்று சொல்லும் அளவுக்கு தயாராகி விட்டோம்.

அன்று தமிழ் வகுப்பில் ஒன்னையா சார் சொல்லி வைத்தது போல என்னை எழுப்பி குறள்களைச் சொல்லுமாறு கூற , மளமளவென எல்லாவற்றையும் ஒப்பித்து தப்பித்தேன்.

சாந்தி மட்டும் அன்று சொல்லி கொடுத்திருக்காவிட்டால் அன்று என் கை உடைந்திருக்கும். சொல்லிவிட்டு அவரிடம் பாராட்டு வாங்கிக் கொண்டு உட்கார்ந்தபோது, நன்றியுடன் பார்த்த பார்வை கண்டு பதிலுக்கு அவள் சந்தோஷமாய் சிரித்தாள்.

இடைவேளை நேரம். என்னருகில் வந்தாள் சாந்தி.

'சாயங்காலம் வேடியப்பன் கோயில் பின்னால நில்லேன்.. உங்கூட கொஞ்சம் பேசணும்.நீ மட்டும் நில்லு..''

'என் கூட பேசணுமா? என்ன விஷயம்? என் கூட சுந்தரும் வருவானே. .எப்படி அவனை விட்டுட்டு நான் மட்டும் வர்றது?''

'அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ மட்டும் வர்றே..அவ்வளவுதான்'' என்று சொன்னவள் வேகமாய் கிளாசுக்குள் போய் விட்டாள்.

'தனியாகப் பேசும் அளவுக்கு என்ன விஷயமாய் இருக்கும்?'' என்று குழம்பியவன் கிளாஸ் ரூமுக்குள் வந்தேன்.

மாலை ஐந்து மணிக்கு பெல் அடித்ததும், சுந்தரிடம் ஏதோ ஒரு பொய்யை சொல்லி அனுப்பிவிட்டு தனியாக நடந்தேன். பள்ளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது அந்த வேடியப்பன் கோவில். ரொம்ப பழைமையான கோயில். இரண்டு ஏக்கரில் வனமாய் மரங்கள் சூழ ஏகாந்தமாய் இருக்கும். சுற்று வட்டம் பதினெட்டு கிராமங்களுக்கு குல தெய்வம். கல்யாணம்,கெடாவெட்டு, காதுகுத்து, எல்லாம் நடக்கும். ஞாயிறு, திங்கள்,வெள்ளியில் திருவிழா கோலம்தான்.

அம்மாவும், 'எங்க கல்யாணம் கூட வேடியப்பன்ட்ட அருள் வாக்கு வாங்கின பின்னால,வேடியப்பன் சம்மதத்தோடதான்டா நடந்துச்சி..'' என்பாள்.

வேடியப்பனுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு, அங்கிருந்த பெரிய வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்தேன். சற்று நேரத்தில் வந்தாள் சாந்தி.

'சொல்லு சாந்தி.என்ன விஷயம்?''

'ராத்திரில அவனுங்க கூட சேர்ந்துட்டு அடுத்தவங்க காட்டுல திருட போறது என்ன பழக்கம்?'' என்ற அவளது குரலில் அவ்வளவு கடுமை.

'இல்ல சாந்தி.சும்மா விளையாட்டுக்கு..''

'விளையாட்டு வினையாயிடும்பா. உனக்கு மாரப்பன் ஐயாவைப் பத்தி தெரியும்தானே? மாட்டிக்கிட்டினா பஞ்சாயத்தைக் கூட்டிருவான். ஊர்ல அத்தனை பேர் முன்னால தலை குனிஞ்சி நிக்கறது எவ்வளவு அவமானம் தெரியுமா?'' என்று அவள் கண்களில் லேசாய் கண்ணீர்.

'நீ யார் முன்னாலயும் தலைகுனிஞ்சி நிக்க கூடாது சந்தோஷ். அதை என்னால பார்க்க முடியாது. நீ எல்லார் முன்னாடியும் கம்பீரமா நிக்கணும்பா?'' என்று சொன்னவளை நெகிழ்ந்து போனவனாய் பார்த்தேன்.

'சாந்தி..'' என்று என் குரல் தழுதழுத்தது.

'என் தலை மேல சத்தியம் பண்ணு.

இனிமே போக மாட்டேன்னு..'' என்று சாந்தி சொன்னபோது, அதிர்ந்து போனவனாக நிமிர்ந்தேன்.

'பண்றேன்.ஆனா ஒண்ணு சொல்லணும் நீ.. என் மேல மட்டும் எதுக்காக உனக்கு இவ்ளோ அக்கறை?''

அவள் பதில் சொல்லவில்லை. அருகில் நெருங்கி வந்தாள். என் கண்களையே உற்று பார்த்தாள். அவள் கண்களிலும், முகத்திலும் இனம் காண முடியாத ஒரு உணர்ச்சி. அவள் பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் தலையை குனிந்து கொண்டேன்.

'உனக்கே ஒருநாள் தெரிய வரும் சந்தோஷ். நான் சொல்லவே தேவையில்லை..'' என்று லேசான புன்னகையுடன்,மயக்கும் பார்வையில்,மெதுவான குரலில் அவள் சொன்னபோது அவள் கண்களில் தேங்கி நின்றது என்ன?

'இப்போ பண்ணு..''

நான் அவள் தலை மீது கை வைத்து சத்தியம் பண்ண, ' நல்லா ஞாபகம் வச்சுக்கோ.சத்தியத்தை மீறுனா நான் செத்துடுவேன். இப்போ நட போகலாம்..'' என்ற அவள் முன்னால் நடக்க நான் பின் தொடர்ந்தேன்.

இரண்டு நாள் ஓடி இருந்தது. எங்கள் ஊரில் இருந்து குறுக்கு வழியில்தான் பள்ளிக்குப் போவோம். குறுக்கு வழி ஒரு கிலோமீட்டர் மண் பாதை வரும். மண்பாதை முடியும் இடத்தில் ஒரு கிழங்கு மில் வரும்.அதைத் தாண்டியதும் ஒரு பெரிய புளிய மரம் இருக்கிறது. அதன் அடியில் உட்கார வசதியாக கற்களும் இருக்கின்றன. போகும்போது பத்து நிமிடம் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துவிட்டு போவோம்.காற்று சில்லென்று வீசும்.

வழக்கம் போல அன்றும் அங்கு உட்கார்ந்தோம்.காற்று சில்லென்று வீச,நடந்து வந்த களைப்புக்கு இதமாக இருந்தது.

சாந்தி உட்கார்ந்தவள்,தன் பையில் இருந்து பாக்ஸை எடுத்தாள். பாக்ஸில் எள்ளுருண்டை பெரிதாய்.

'சந்தோஷ்.உனக்கு எள்ளுருண்டை பிடிக்கும்தானே? நைட் எங்க வீட்ல செஞ்சாங்க. அதுல உனக்கும் ஒன்னு கொண்டு வந்தேன்..இந்தா..''

பக்கத்தில் இருவரை உட்கார வைத்துகொண்டு நான் மட்டும் சாப்பிட தர்ம சங்கடமாக இருந்தது.

'எங்களுக்கு?'' என்று மற்ற இருவரும் கேட்க, அப்போதுதான் தன் தவறை உணர்ந்த சாந்தி நாக்கை கடித்துகொண்டாள்.

'சாரிடா..வர்ற அவசரத்துல ஒன்னுதான் எடுத்துட்டு வந்தேன். மூணு பேரும் பிரிச்சிக்கோங்க..''

'வேணாம் போ.எங்கள மறந்துட்ட இல்ல.

அவன்தான உனக்கு முக்கியம்.அவனே சாப்டட்டும்'' என்றார்கள் இருவரும். கடைசியில் மூவரும்தான் சாப்பிட்டோம்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மதியம் இரண்டு மணி இருக்கும். எங்கள் வீட்டுக்கு வந்த சுந்தர், 'சந்தோஷ்..குளிக்க போலாமாடா?'' என்றான்.

ஸ்கூல் லீவு நாள்களில் கிணற்றுக்கு குளிக்கப் போவோம். இருவருக்கும் நீச்சல் தெரியும். ராமசாமியின் கிணற்றுக்குதான் போவோம். வற்றாத கிணறு அது.ஐந்து நிமிட நடையில் இருந்தது.

'வா போவோம்..''

'சந்தோஷ்.ஒண்ணு கேப்பேன். உண்மையை சொல்லணும்? நீ சாந்திய லவ் பண்றதானே?'' என்று போகும் வழியில் அவன் கேட்கவும் திடுக்கிட்டு போனவன், 'என்னடா உளர்றே? அப்படிலாம் ஒண்ணுமில்லை..நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ்..அவ்வளவுதான்'' என்றேன்..

'நான் உண்மைதான் பேசுகிறேனா?' என்று எனக்கே சந்தேகமாக இருந்தது. மனதின் ஆழத்தில் இருந்து சொல்லவில்லை என்பது புரிந்தது. அவன் கேள்வி ஏதோ ஒரு சந்தோஷத்தைக் கொடுத்ததன் காரணம் புரியவில்லை.

அவன் கேட்பது உண்மையா? என்னையும் அறியாமல் நான் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டேனா? இந்த இரண்டு வருடங்களாக இல்லாத உணர்வு,சமீப காலத்தில் மட்டும் ஏன்?..இதென்ன புதிதாக இருக்கிறது? நான் பொய் சொல்வதை சுந்தர் கண்டுபிடித்துவிட்டான்.

'டேய்..பொய் சொல்லாதடா..உன் கண்ணையும், முகத்தையும் பார்த்தே கண்டுபிடிச்சிட்டேன்.''

'ச்சீ..போடா..'என்றவன் கிணறை நோக்கி வேகமாக நடந்தேன்.''

அன்று இரவு. நிறைய நேரம் தூக்கமே வரவில்லை. சுந்தர் சொன்னதே மனதில் வட்டமடித்தது. உண்மைதானா? இப்போதெல்லாம் அவளை தினமும் பார்க்க மனசு துடிக்கிறதே? அவளிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருக்க ஆசைப்படுகிறதே. ஒருநாள் க்ளாசுக்கு வரவில்லை என்றாலும் தவித்துப் போய், எதையோ இழந்தவன் போல் ஆகிவிடுகிறேன்.முன்னைப் போல அவளிடம் கண்களைப் பார்த்து இயல்பாக பேச முடிவதில்லை..தடுமாற்றம் வருகிறதே..

இதற்கு பெயர்தான் காதலா?

அடுத்த நாள் எல்லாவற்றையும் சுந்தரிடம் சொன்னேன். 'எனக்கு தெரியும்டா.அவ மட்டுமென்ன.அவளும்தான் உன்ன லவ் பண்றா.அவ பார்க்கற பார்வையே சொல்லுதே.அவகிட்ட சொல்லிடுடா?''

'வேணாம்டா.பயமா இருக்கு.''

'என்னடா சொல்ற?''

'ஆமாப்பா.நல்லா பழகறோம். இதனால ரெண்டு வீடுகளுக்கும் பிரச்னை ஆயிடுமோனு பயமா இருக்கு...''

'அதெல்லாமில்ல.நான் பேசட்டுமா?''

'வேணாம் வேணாம்.நானே சொல்லிக்கறேன்'' என்று அவசரமாக மறுத்தேன்.

'சரிடா..இன்னும் ஒரு வாரத்துல நம்ம ஊர் திருவிழா வருதுல்ல..அதுல சொல்லிடு..'' என்று சுந்தர் சொன்னது சரியென பட்டது எனக்கும்..

ஏழு நாள் திருவிழா அது. எங்கள் ஊர் சுற்றி இருக்கும் எல்லா கிராமங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் இருக்கும். கடைகள், ரங்கராட்டினம் என்று கோலாகலமாய் இருக்கும்.

ஏழு நாளும் அம்மனுக்கு பொங்கல் வைப்பதும், கிடாவெட்டும் இருக்கும். சரக்கு வைபவங்களும் உண்டு. ஏழு நாளும் யாரும் வேலைக்கும் போக மாட்டார்கள். மாமன், மச்சான் என்று உறவுமுறை கொண்டாடிக் கொண்டு மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடி ஊரே சந்தோஷமாய் இருக்கும்.

பொதுவாக, கட்டுப்பாடு காரணமாக வீட்டினுள்ளே அடைந்து கிடக்கும் இளம்பெண்களுக்கு இந்த ஏழு நாளும் கட்டுப்பாடு கிடையாது. சுதந்திரமாக, ஜாலியாக கடை வீதி,விளையாட்டு, பொங்கல் வைப்பது என்று சுற்றுவார்கள். பெற்றவர்களும் பெரிதாய் கண்டுகொள்ள மாட்டார்கள். பல காதல்களும் அப்போது அரங்கேறும் என்பதால் சுந்தர் சொன்னது சரியெனவே பட்டது எனக்கும்.

அன்று திருவிழாவின் மூன்றாவது நாள். மாலை மணி நான்கு இருக்கும். மாரியம்மன் கோயில் திண்ணையில் உட்கார்ந்து திருவிழாவில் அன்று நடந்துகொண்டிருந்த கபடி போட்டியை ரசித்துகொண்டிருந்த என்னை கூப்பிட்டான்

சுந்தர்.

'டேய்.இன்னிக்கு ராத்திரி அர்ஜூனன் தபசு தெருக்கூத்து. ஊரே அதை பார்க்க போயிடும். சாந்தியை விநாயகர் கோயில் பக்கம் வர சொல்றேன்.. நீ கோயில் பக்கம் இருக்கற பாதாமணி மரம் அடியில இரு..இன்னைக்கு சொல்லிரு..'' என்றான்.

அன்று மணி இரவு பத்து. ஊரே தெருக்கூத்தில் லயித்திருக்க, சாந்தி வந்தாள்.

'என்னப்பா.வர சொன்னியாமே..சுந்தர் சொன்னான்'' என்று பக்கம் வந்தவள் கேட்டாள்.

'தனியா வந்திருக்கே.பயமில்லியா சாந்தி?''

'நம்ம ஊரு.பழகின இடம். என்ன பயம்..அதிருக்கட்டும் சொல்லு..எதுக்கு வர சொன்னே?''

அவளை உற்றுப் பார்த்தேன்..அவள் கண்களில் தெரிவதென்ன? அவள் முகத்தில் எதற்கு அத்தனை உணர்ச்சிகள்?

'அது வந்து..வந்து..'' என்று தடுமாற்றம் என்னுள் உருவாக அத்தனை நேரம் இருந்த தைரியம் காணாமல் போக, உடலில் லேசான நடுக்கம். கைகளில் வியர்வை ஈரம். ஏதேதோ உளறினேன் என்றுதான் சொல்ல வேண்டும்..கால் மணி நேரம் ஓடி இருக்கும். திடீரென யாரோ பேசிக் கொண்டு வரும் சத்தம் கேட்க திடுக்கிட்ட சாந்தி,'யாரோ வர்றாங்க. காலையில பார்க்கலாம்'' என்று கிளம்பியவள் திடீரென நின்றாள். ஒருநிமிடம் என்னை பார்த்தவள், ' நீ ஒரு பயந்தாங்கொள்ளிடா'' என்றவள் வேகமாய் நடந்தாள்.

அடுத்த நாள் ஆர்வமாய் கேட்ட சுந்தரிடம் எல்லாம் சொன்னதும், 'அவ சொன்னது சரிதான்டா..'' என்று பயங்கரமாய் திட்டினான். அதன் பிறகும் சில சந்தர்ப்பங்கள் அமைந்தும் என் பயத்தாலும்,தயக்கத்தாலும் சொல்லவில்லை.

ஒரு வாரம் ஓடி இருந்தது. அன்று மதிய வேளை. நானும்,அம்மாவும் மட்டும் வீட்டில் இருக்க, சாந்தியின் அம்மா வந்தார்.

'வாங்க..உக்காருங்க. சாப்டிங்களா?''

'அண்ணா (சாந்தியின் அப்பா..) சாப்ட்டாரா'' என்று அம்மா கேட்டாள்.

'நான் சாப்டேங்க.அவர் இன்னிக்கு விரதம்.''

'விரதமா? ஏங்க?''

சாந்தி அம்மாவின் முகம் மாறியது. குரல் உடைய சொன்னார். 'அது இருவது வருஷத்து கதைங்க.அவருக்கு ரெண்டு தங்கச்சிங்க.அவரோட முதல் தங்கச்சி ஒருத்தர காதலிச்சா.. வீட்ல பயங்கர எதிர்ப்பு. எதிர்ப்பையும் மீறி காதலிச்சவன் கூட ஓடி போயிட்டா. கிராமம்தானே?..அவ பண்ணதால சின்ன தங்கச்சியை யாரும் கல்யாணம் பண்ணிக்கலை..அவமானத்துலயும்,விரக்தியுலயும் இனிமே தனக்கு இனிமே கல்யாணமே ஆகாதுனு முடிவுக்கு வந்தவ ஒரு நாள் தற்கொலை பண்ணிக்கிட்டா..''

'அடடா..''

'தன்னோட ரெண்டு தங்கச்சிகளயும் தன்கிட்ட இருந்து பிரிச்ச காதல் மேல அன்னைல இருந்து இவருக்கு பயங்கர வெறுப்பு..காதல்ங்கற வார்த்தையே பிடிக்காம அலர்ஜி ஆயிடுச்சி.தன்னோட தங்கச்சி இறந்த அன்னைக்கு அவ நினைவா அன்னைக்கு முழுசும் சாப்ட மாட்டார்'' என்று சொல்லி நிறுத்தியவர்,'சாந்தி காதல் அது, இதுனு வந்தா என்னை உயிரோடவே பார்க்க முடியாது விமலான்னு இப்பவும் எங்கிட்ட சொல்லிட்டே இருக்காருங்க அடிக்கடி.வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கேன்.அவர் பிடிவாதக்காரர்.சொன்னதை செஞ்சுடுவார்..இவகிட்ட சொல்லவும் தயக்கமா இருக்கு..'' என்றார்.

இதைக் கேட்ட எனக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. திகைப்பு,அதிர்ச்சி ஒன்று சேர அவரையே பார்த்துகொண்டிருந்தேன்.

அன்று கடைசி எக்ஸாம். என்னைத் தனியாகச் சந்தித்தவள் பார்த்த அந்த அழுத்தமான பார்வை,கண்களில் துளிர்த்த கண்ணீரையும் சலனமில்லாமல் பார்த்துகொண்டிருந்தேன். அடுத்த நாள் சாந்தியின் வீடு பூட்டி இருந்தது.

'சாந்தியோட பாட்டிக்கு திடீர் ஹார்ட் அட்டாக்காம். காலையில தந்தி வந்தது.எல்லோரும் ஒடனே கிளம்பிட்டாங்க.உன்ன சாந்தி கேட்டா.நீ காலைல ஊர சுத்த போனவன் மத்தியானம் வர்றே.வந்தா உங்கிட்ட சொல்ல சொன்னா.'' என்றார் அம்மா. அதற்கப்புறம் பத்து, பதினைந்து நாள்களாக அவர்களின் வீடு பூட்டியே கிடந்தது.

'சாந்தி அப்பாக்கு அவங்க ஊர்லயே டிரான்ஸ்வர் கிடைச்சிடுச்சாம்.அதனால அங்கயே இருக்காங்க..'' என்றார் அம்மா ஒருநாள்.

பத்து நாள்களுக்கு பிறகு, சாந்தியின் அப்பாவும்,அம்மாவும் மட்டும் வந்து எல்லா சாமான்களையும் எடுத்துகொண்டு போனார்கள். அதன்

பிறகு சாந்தியை நான் பார்க்கவில்லை.அவளை பற்றிய எந்த தகவலும் இல்லை.என் நினைவுகளில் மட்டுமே உறைந்து போனாள்.

ஒன்பதாம் தேதியே ஊருக்கு கிளம்பி விட்டோம். சாயங்காலம் குளித்து முடித்துவிட்டு காலாற நடந்து வரலாம் என்று நானும்,சுந்தரும் நடந்தபோது ஆர்வமாக சாந்தியை பற்றி விசாரித்தேன்.

'சாந்தி பார்த்தியா?..எப்டி இருக்கா?'' என்று நான் கேட்டபோது, சுந்தரின் முகம் மாறியது..

'அவ கல்யாணம் பண்ணிட்டு போன இடம் சரியில்லையாம்பா சந்தோஷ்.. அவ புருஷன் பெரிய குடிகாரனாம்.சந்தேகப் புத்தி வேற அதிகம்னு செல்வி சொன்னா.'' என்று கத்தியை எடுத்து நெஞ்சில் குத்தியது போலிருந்தது எனக்கு.

அடுத்த நாள் காலையிலேயே திருவிழா நடக்கும் இடத்துக்கு சென்றுவிட்டோம்.சாந்தியின் வருகையை வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்.

இதோ வந்துவிட்டாள். என் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.என்னை பார்த்துவிட்டாள். அவளுக்கும் அப்படிதான் இருந்திருக்க வேண்டும். உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது.அவள் முகத்தில் தெரிந்தது பரவசமா என புரியவில்லை எனக்கு. கூடவே அவளின் ஜெராக்சாக இரண்டு பிள்ளைகள்.

அரை மணி நேரம் கழித்து என் அருகில் வந்தாள்..குடும்பம்,வேலை என பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம். நிறைய பேசினோம். மதியத்துக்கு மேல் சாப்பாடு தயாராகி சாப்பிட்ட பின் கிளம்ப தயாரானாள் சாந்தி.

என் அருகில் வந்தாள்..

'உனக்கு என்ன பிடிக்கும்னு நான் தெரிஞ்சு வச்சிருந்தேன். ஆனா எனக்கு என்ன பிடிக்கும்னு கடைசி வரை நீ தெரிஞ்சுக்கவே இல்ல சந்தோஷ்?'' என்று மெதுவான குரலில் சொன்னவளின் குரலிலும், பார்வையிலும் எதற்கு அவ்வளவு விரக்தி?..கூடவே சோகமான புன்னகை.

அன்று பார்த்த அதே அழுத்தமான பார்வை. 'நீ ஒரு பயந்தாங்கொள்ளிடா..'' என்றாள் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் திடீரென, அவள் கண்கள் லேசாய் கலங்கி இருந்தது.

தன் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தவளை கண்களில் வழிந்த கண்ணீருடன் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

'சாந்தி காதல் அது, இதுனு வந்தா என்னை உயிரோடவே பார்க்க முடியாது விமலான்னு இப்பவும் எங்கிட்ட சொல்லிட்டே இருக்காருங்க'' என்று அன்று சாந்தியின் அம்மா சொன்ன வார்த்தைகள் காதில் ஒலிக்க ஆரம்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments