FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அர்ப்பணிப்பு தேவை!

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் (ஹெளரங்காபாத்) விவசாயக் குடும்பத்தில் பிறந்த இருபத்திரண்டு வயதான ஓம் கக்காட், டென்னிஸ், பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) தேர்வு என, ஒரே சமயத்தில் படிப்பிலும் விளையாட்டிலும் முத்திரை பதித்துள்ளார். காலையில் விளையாட்டு, மற்ற நேரங்களில் படிப்பு எனப் படிப்புக்கும், பயிற்சிக்கும் இடையே பயணித்த அவர், 'வாழ்க்கையில் வெற்றியடைய தியாகம், அர்ப்பணிப்பு தேவை' என்கிறார்.

30 ஆகஸ்ட் 2026, 12:06 pm IST
பகிர்:

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் (ஹெளரங்காபாத்) விவசாயக் குடும்பத்தில் பிறந்த இருபத்திரண்டு வயதான ஓம் கக்காட், டென்னிஸ், பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) தேர்வு என, ஒரே சமயத்தில் படிப்பிலும் விளையாட்டிலும் முத்திரை பதித்துள்ளார். காலையில் விளையாட்டு, மற்ற நேரங்களில் படிப்பு எனப் படிப்புக்கும், பயிற்சிக்கும் இடையே பயணித்த அவர், 'வாழ்க்கையில் வெற்றியடைய தியாகம், அர்ப்பணிப்பு தேவை' என்கிறார்.

டென்னிஸ் போட்டிகளில் தேசிய அளவில் தங்கப் பதக்கங்கள், மகாராஷ்டிரா மாநில ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்கள், மகாராஷ்டிராவின் 'கோல்டன் பாய்' அங்கீகாரம் பெற்றிருக்கும் வேளையில், அவர் சி.ஏ. தேர்வில் அனைத்து நிலைகளிலும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார்.

இளைஞர்களுக்கு முன்மாதிரியாக மாறியிருக்கும் ஓம் கக்காட் கூறியது:

Advertisement

Advertisement

'வீட்டில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், டென்னிஸ் மீதான ஈர்ப்பு என்னை பெரிய கனவுகளைக் காண வைத்தது. நன்றாகப் படித்து, நல்ல வேலையில் அமர்ந்து பொருளாதார ரீதியாக நான் சுதந்திரமானவனாக இருக்கவேண்டும் என்று பெற்றோர் விரும்பினர்.

எனது விளையாட்டுப் பயணம் ஒன்பதாம் வகுப்பில் 'சாஃப்ட் டென்னிஸ்' விளையாட்டுடன் தொடங்கியது. அதே ஆண்டில், நான் தேசிய அளவிலான தங்கப் பதக்கத்தை வெல்ல முடிந்தது.

உள்ளூர் போட்டி முதல் தேசியப் போட்டிகள் வரையில் நான் அடுத்தடுத்து பெற்ற வெற்றிகள், மகாராஷ்டிர மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு என்னை உயர்த்தியது. இருந்தாலும், இந்த வெற்றிகள், படிப்பில் நான் முன்னுக்கு வர தடையாக அமையவில்லை. அதில் ஆர்வத்தைக் குறைக்கவில்லை. கவனத்தைத் திசை திருப்பவில்லை. மாறாக, படிப்பில் உற்சாகத்தையே அளித்தது.

பிளஸ் டூவில் கிடைக்கும் அதிக மதிப்பெண்கள் மாணவர்களை இயல்பாகவே பொறியியல் அல்லது மருத்துவத் துறை பக்கம் போகச் செய்யும். ஆனால், விளையாட்டுதான் என்னை அதிக அளவில் கவர்ந்தது. முதல் காதலாகவும் இருந்தது. அதேசமயம், வாழ்வாதாரத்துக்குத் தொழில் தேவை என்ற புரிதலும் எனக்கிருந்தது. அதனால், பட்டயக் கணக்காளராவது என்று முடிவு செய்தேன். அறிவியல் பாடப்பின்னணியிலிருந்து வணிகவியல் துறைக்கு மாறி, பின்னர் இந்தியாவின் மிகக் கடினமான தொழில்முறை பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர்ந்து படிப்பது எளிதான விஷயமாக இருக்கவில்லை.

விளையாட்டுப் போட்டிகளில் எதிராளி தரும் சவால்களை எப்படிக் கையாளுவது என்பதைக் கற்றுக் கொள்ளலாம். அந்த அனுபவம், சி.ஏ. தேர்வுக்கான தயாரிப்பின்போது எனக்கு உதவியது. படிப்பு எனக்குப் பொறுமையையும் விடாமுயற்சியையும் கற்றுக் கொடுத்தது. அவை விளையாட்டில் எனக்கு உதவியது.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக, ஓய்வுக்கு சிறிதும் இடமளிக்காத கால அட்டவணையைச் சுற்றியே எனது நாள்கள் நகர்ந்தன. தினமும், காலை ஆறு மணிக்கெல்லாம், மைதானத்தில் டென்னிஸ் பயிற்சியைத் தொடங்கிவிடுவேன். பயிற்சி முடிந்ததும், மாணவனாக மாறிவிடுவேன். பதினைந்து மணி நேரம் வரை தினமும் படித்த நாள்களும் உண்டு. பரபரப்பாக ஒவ்வொரு நாளும் நகர்ந்தன. விளையாட்டு, பட்டயக் கணக்காளர் படிப்பு என இரண்டுக்குமே குறுக்குவழிகள் இல்லை' என்கிறார் ஓம் கக்காட்.

-பிஸ்மி பரிணாமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments