5 வயதில் 5 சாதனைகள்!
'இரண்டு வயதிலேயே எங்கள் மகளது சாதனைப் பயணம் தொடங்கியது. ஒரு நிமிடத்துக்குள் 10 பொருள்களை அடையாளம் கண்டு உலகச் சாதனை சான்றிதழ் பெற்றார்.
பொ.ஜெயச்சந்திரன்
'இரண்டு வயதிலேயே எங்கள் மகளது சாதனைப் பயணம் தொடங்கியது. ஒரு நிமிடத்துக்குள் 10 பொருள்களை அடையாளம் கண்டு உலகச் சாதனை சான்றிதழ் பெற்றார். அதே வயதில் உடல் உறுப்புகள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், வாகனங்கள், மின்னணுச் சாதனங்கள் போன்ற பிரிவுகளில் மொத்தம் 260 பொருள்களை அடையாளம் கண்டு, 'க்கோளரியஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'-இல் இரண்டாவது சாதனையும் பதிவு செய்தார்'' என்கிறார், காஞ்சிபுரம் ஒரகடம் பி.எஸ்.சீனியர் மேல்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி.படிக்கும் பள்ளிச் சிறுமி
யோ.கா.லக்ஷணாகம்யாவின் பெற்றோர் யோகேஷ், கானப்ரியா. இச்சிறுமி தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் மேலும் கூறியது.
Advertisement
Advertisement
'மூன்று வயதில், இந்தியாவின் 21தேசியச் சின்னங்களை நினைவு கூருதல், ராணுவம், கடற்படை, வான்படை ஆகியவற்றின் பதவிகளை வரிசையில் கூறுதல், பல்வேறு நாட்டைச் சேர்ந்த பல்வேறு தகவல்களுக்கு தன்னம்பிக்கையுடன் பதிலளித்தல் ஆகிய திறமைகளுக்காக 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' -இல் மூன்றாவது சாதனையைப் பெற்றார்.
இந்தியப் பாரம்பரியம், பாதுகாப்புப் படைகளின் மீது அவளது ஆர்வம் தொடர்ந்து வளர்ந்தது. நான்காவது சாதனையாக அசோக சக்ரா, மகா வீர சக்ரா, பரம் வீர சக்ரா உள்ளிட்ட 33 வீர விருது பெற்றவர்களை வெறும் 5 நிமிடங்களுக்குள் அடையாளம் கண்டார். இது அவருடைய 4 வயது 7 மாதம் 27 நாள்களில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நாலாவது சாதனையாக நிகழ்ந்தது. அதே பிரிவில் 4 நிமிடம் 24 நொடிகள் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் 5-ஆவது உலகச் சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
இத்தகைய பல சாதனைகளும் சேர்ந்து இளைய குழந்தைகளில் சிறந்தவராக அவரை நிலை நிறுத்துகின்றன. பாடப்பயிற்சிகளுக்கு அப்பால், பாரம்பரியப் பயிற்சிகள், கலைகள், உடற்பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தமிழ், சம்ஸ்கிருதத்தில் 118 ஸ்லோகங்களைச் சொல்கிறார். தற்போது அஷ்டகங்கள், சஹஸ்ர நாமங்களையும் ஸ்ரீமதி.குமுதா குருவிடம் கற்றுக் கொண்டுள்ளார்.
பரதநாட்டியத்தை குரு.சிப்பி தினராஜன், அபிஜித் பி.கே ஆகியோரிடமும், சிலம்பத்தை ஷிபு மதன் குமார் ஆகியோரிடம் கற்றுவருகிறார். கதைகள் சொல்லுதல், வரைதல் ஆர்வம் உள்ளவர். அறிவு, பண்பு, தேசப்பற்று இணைந்த சிறுவர் மேதை.
சிறிய வயதிலேயே சாதனைகள் செய்து, தனித்துவமான சாதனையாளராக உயர்ந்துள்ளார். ஒழுங்கான கற்றல் சூழலும், ஆழமான ஆர்வமும் அவளது சாதனைகளில் பிரதிபலிக்கின்றன'' என்று கூறினார் யோகேஷ், கானப்ரியா.