FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நயாகரா: 40 லட்சம் கிலோவாட்!

தேன்நிலவுக்குச் செல்லும் புதிய இளம் தம்பதிகளா? ஹாலிவுட்டில் இருக்கும் பெரிய டைரக்டர் தனது முக்கியமான படப்பிடிப்பு நிகழ்ச்சியை நடத்தவேண்டுமா?

19 செப்டம்பர் 2026, 7:00 pm IST
- ANGELA WEISS
பகிர்:

தேன்நிலவுக்குச் செல்லும் புதிய இளம் தம்பதிகளா? ஹாலிவுட்டில் இருக்கும் பெரிய டைரக்டர் தனது முக்கியமான படப்பிடிப்பு நிகழ்ச்சியை நடத்தவேண்டுமா? வேறு பலநாடுகளிலிருந்து அமெரிக்கா வரும் சுற்றுலாப்பயணிகளா? இவர்கள் அனைவரும் முதலில் தேர்ந்தெடுக்கும் இடம் பொதுவாக அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியாகத்தான் இருக்கும்.

நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல... அவை இயற்கையின் ஒரு மாபெரும் எழுச்சி. மனதைக் கொள்ளை கொள்வன.

உலகில் அதிகப் புகழ் வாய்ந்தவை என 1. இக்குவாசு (அர்ஜெண்டினா), 2. விக்டோரியா (ஜிம்பாப்வே / ஜாம்பியா), 3. நயாகரா (அமெரிக்கா) என மூன்று நீர் வீழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்.

Advertisement

Advertisement

இவை வெவ்வேறு உயரங்கள், நீரளவு கொண்டவை. ஆனால், அவை நம் கண்களுக்குப் புலப்படும் முன்பே மெல்லிய இடியோசையோ என நாம் சந்தேகப்படும் படியான (நீர் விழும்) சத்தம் சற்று தொலைவிலிருந்தே கிடைக்கும்.

நயாகரா அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின் வடபகுதியில் கனடா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சியில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை முறையே ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி, அமெரிக்கன் நீர்வீழ்ச்சி, பிரைடல் வெயில் நீர்வீழ்ச்சி ஆகியன.

ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சியின் பகுதிகள் கனடாவின் எல்லையிலேயே அமைந்துள்ளன. வளைந்து உயரமாக இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி ஒரு குதிரையின் காலணியைப்போல் இருப்பதால் இந்தப் பெயர் இடப்பட்டுள்ளது.

ஒரு மணமகளின் மெல்லிய வெண்மையான முக்காடை போல் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி பிரைடல் வெயில் நீர் வீழ்ச்சி என்ற பெயர் பெற்றது.

ஒரு பாலத்தின் வழியாக அமெரிக்காவிலிருந்து கனடா (விசா இருந்தால்) பகுதிக்குச் சென்றும் இந்த நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிடலாம்.

நியூயார்க் மாநிலத்தின் வடபகுதியில் ஐந்து ஏரிகள் உள்ளன. சுபீரியர், மிட்சிகன், ஹ்யூரோன், ஈரி, அண்டேரியோ என அவை அழைக்கப்படுகின்றன. உலகுக்குத் தேவையான ஐந்தில் ஒரு பகுதி நீரை அவை வைத்திருக்கின்றன.

முதல் நான்கு ஏரிகள் நயாகரா வீழ்ச்சிக்கான நீர்ப்பெருக்கை அளிக்கின்றன. ஈரி ஏரியிலிருந்து உற்பத்தியாகும் நயாகரா நதி சுமார் 58 கி.மீ. பயணித்து அண்டேரியோ ஏரியுடன் கலக்கிறது. அதன் போக்கிலேயே கனடா அமெரிக்காவின் சில எல்லைப்பகுதிகள் அமைந்துள்ளன. பின்னர் அண்டேரியோ ஏரியிலிருந்து உற்பத்தியாகும் செயிண்ட் லாரென்ஸ் நதி அட்லாண்டிக் பெருங்கடலுடன் சங்கமாகிறது.

நயாகராவின் தொடக்கம் ஐஸ் ஏஜ்' என்று சொல்லப்படும் பனிக்காலம் அல்லது பனியூழிக் காலத்தில் நிகழ்ந்தது. சுமார் 12300 ஆண்டுகள் பழைமையானது. உருகும் பனி இத்தகைய நீர்ப்பெருக்கத்தைத் தருகிறது. பள்ளத்தாக்குகள் நிறைந்த நியூயார்க் மாகாணத்தின் வடபகுதியில் இந்த நீர்ப் பெருக்கம் ஒரு பெரிய நீர்வீழ்ச்சியாக மாறுகிறது.

நயாகரா அமெரிக்கா, கனடா எல்லையில் இரு பகுதிகளாகப் பிரிவதால், கனடா பகுதில் பாயும் நீர்ப் பெருக்கம் ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சியையும், அமெரிக்கா பகுதியில் பாயும் நதிப் பகுதி அமெரிக்கன் நீர் வீழ்ச்சியையும் தருகிறது. ஆனால் அவை அருகருகேயே உள்ளன.

முதலில் இப்பகுதியில் வாழ்ந்த அமெரிக்கப் பழங்குடிமக்களுக்கு மட்டுமே இந்த நீர்வீழ்ச்சியைப் பற்றிய தகவல்கள் இருந்தன. கி.பி. 1678-இல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் ஹென்னேபின் என்பவர் இதனை முதலில் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார்.

ஆனால், 19-ஆம் நூற்றாண்டில் போக்குவரத்து வசதிகள் பெருகிய பின்னரே பயணிகள் இங்கு வரத்தொடங்கினர். கி.பி. 1804-இல் நெப்போலியனின் சகோதரர் ஜெரோம் இங்கு தன் அமெரிக்க மனைவியுடன் தேன்நிலவைக் கழித்தார் எனச்சொல்லப்படுகிறது. அது முதல் இங்கு தேன்நிலவைக் கொண்டாட பெரும்பான்மையான தம்பதிகள் வருவது வழக்கமானது.

நயாகரா நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிட படகுச் சவாரிகள் உள்ளன. மழை அங்கிகளுடன் உல்லாசப் படகுகளின் மேற்புறம் நின்றபடி சுற்றுலாப் பயணிகள் நீர் வீழ்ச்சிகளின் அழகை ரசிக்கின்றனர். இரவு நேரங்களில் நீர்வீழ்ச்சிகள் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன.

நயாகரா நீர்வீழ்ச்சி வெறும் சுற்றுலாத்தலம் மட்டுமல்ல. சுமார் நாற்பது லட்சம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய நீர்மின் திறன் கொண்டது அந்தப் பகுதியின் மின் தேவை முழுவதையும் பூர்த்தி செய்கிறது.

நிகோலாடெஸ்லா (1846 - 1914) அமெரிக்காவின் மிகப் புகழ் பெற்ற மின்பொறியாளர். அவர் மேல் இருக்கும் மதிப்பின் காரணமாகத்தான் இன்று டெஸ்லா எலெக்டிரிக் கார்களை உற்பத்தி செய்யும் கம்பெனி டெஸ்லா என்ற நாமத்தைச்சூட்டியுள்ளது.

முதலில் மின்சாரம் நேர்திசை சக்தியாக இருந்தது. எனவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்புவது ஒரு சவாலாக இருந்தது. பின்னர் மாறுதிசை மின்னோட்டம் அமுலுக்கு வந்தது. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் நிகோலா டெஸ்லா. 1896-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் நாள் நிகோலா மாறுதிசை மின்னோட்டத்தை நயாகராவிலிருந்து அருகில் இருந்த பஃபலோ என்ற இடத்துக்கு அதனை அனுப்பி நிரூபித்தார். எனவே அன்று முதல் உலகெங்கும் மாறுதிசைமின்னோட்டம் நடைமுறைக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments