FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மறுபடியும் மாமழை!?

பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. எல் நினோ' எனப்படும் காலநிலை மாறுதலால் தென்மேற்குப் பருவமழை குறைந்து, வடகிழக்குப் பருவமழை கூடுதலாக இருக்கும் என்று கணிக்கிறார்கள்.

19 செப்டம்பர் 2026, 7:29 pm IST
பகிர்:

பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. எல் நினோ' எனப்படும் காலநிலை மாறுதலால் தென்மேற்குப் பருவமழை குறைந்து, வடகிழக்குப் பருவமழை கூடுதலாக இருக்கும் என்று கணிக்கிறார்கள். வரும் அக்டோபர் மாதம் சென்னையில் 50 செ.மீ. மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். 1997, 2015-ஆம் ஆண்டுகளில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல நகரங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டதைப்போல, இப்போதும் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்துக்கும், குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட சென்னைக்கும் எல் நினோ' வால் ஏற்படும் ஆபத்தை எப்படித் தவிர்ப்பது?

மாநில பேரிடர் மேலாண்மைத் துறை, நீர்வளப் பாதுகாப்பு, நதிகள் மீட்புக் கழகம், பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்ட அரசு அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளை வகித்து, தமிழகத்தின் பல்வேறு இடர்ப்பாடுகளின்போது செயலாற்றியவர் கே.சத்தியகோபால் ஐ.ஏ.எஸ். (ஓய்வு). அவரை நாம் சந்தித்துப் பேசியதில் சில பகுதிகள்:

Advertisement

Advertisement

2015 -ஆம் ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழையில் சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இப்போது அதே அளவு மழை பெய்தால், சென்னை மற்றும் தமிழகம் மீண்டும் பாதிக்கப்படுமா?

பெருமழையால் சென்னை அப்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதற்கு செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமே காரணமல்ல. டிசம்பருக்கு முன்பே மழையால் சென்னை சுற்றுவட்டாரத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பி இருந்தன. கூடுதலாக கனமழை பொழிந்தது. 48 மணி நேரத்தில் 625 மி.மீ. மழை பெய்தது. காஞ்சிபுரம் பகுதியில் ஆண்டுக்கு 700 மி.மீ. மழை பெய்யும். ஆனால், 48 மணி நேரத்தில் 625 மி.மீ. மழை பெய்தது.

அந்த நேரத்தில் கடலின் நிலைமையும் மோசம். அலை உயர்ந்து எழுந்தது. ஆற்று நீரை கடல் உள்வாங்கவில்லை. நன்னீர் கடலுக்குச் செல்வது கடினமாகி நீர் பின்னோக்கி வந்த சூழ்நிலை. சென்னை நிலப்பரப்பு கடலில் இருந்து 6 மீட்டர் உயரம். பல இடங்கள் 2 மீட்டர் உயரம்தான். இப்படிப்பட்ட, இயற்கைக் காரணங்களோடு, மனிதத் தவறுகளும் ஏராளம். சென்னையைச் சுற்றி ஏராளமான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள். இவர்கள் தங்கள் வீடுகளைப் பாதுகாத்துக் கொள்ள இந்த நீர்நிலைகளின் கரைகளை உடைத்தார்கள். இப்படி இயற்கை, மனிதம் கலந்த காரணங்கள் சென்னையைப் பாதித்தன.

வெள்ளத்தை சென்னையை வைத்து மட்டுமே தனித்துப் பார்க்க முடியாது. சென்னையில் அடையாறு, கொசஸ்தலை ஆறு, கூவம், கோவளம் நான்கு முக்கிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளின் நீர் அனைத்தும் சென்னைக்கு வெளியிலிருந்து வருகிறது. தவிர ஆரணியாறு, நகரியாறு, நந்தியாறு போன்றவை பூண்டி நீர்த் தேக்கத்துடன் தொடர்புடையவை. மேலும் கீழ்ப்பாலாறு போன்றவைகளும் சென்னைக்கு தொடர்புடையவை.

இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுப்பைத் தடுக்க, அல்லது சமாளிக்க என்ன வழி?

நான்கு ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் வெள்ளச் சமவெளிகளை அடையாளம் கண்டு, பாதிப்பு அபாயத்தைக் குறைக்கும் வகையில் அப்பகுதிகளுக்குத் தனிப்பட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும். சாதாரண காலங்களில் மட்டுமல்லாமல், தீவிர வானிலை நிலவும் காலங்களிலும் நீர் தடையின்றி ஓடுவதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை (சி.ஆர்.ஆர்.டி.) என்ற அமைப்பு , இதுதொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தப் பணிகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும். அத்துடன் பக்கிங்ஹாம் கால்வாய் குறித்தும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சிஎம்டிஏ தனது விதிமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

எண்ணூர், கோவளம் கழிமுகங்களில் நீரோட்டம் தடைபடும் நிலை இல்லாமல் செய்ய வேண்டும்.

என்னென்ன செய்யப்பட வேண்டும் என 13 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டம் பட்டியலிடப்பட்டுள்ளது. கூவம் ஆறு சீர்திருத்தங்கள் குறித்தும் அரசு ஏற்கெனவே சி.ஆர்.ஆர்.டி. யுடன் பணியாற்றி வருகிறது.

ஆறுகளைத் தவிர மற்ற நீர்நிலைகள் அனைத்தும் சென்னை நகரின் மீது தாக்கத்தை ஏற்படுத்துபவை. சுற்று வட்டாரங்களில் பெய்யும் மழையினால், பெரிய வடிகால்கள் மூலமாகவும் நீர் வருகிறது. இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். திட்டமிடலில் சில குறைபாடுகள்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) இன்னும் வெள்ளச் சமவெளி பகுதிகள் என்று வரையறுத்து, அந்தப் பகுதிகளுக்குத் தனித்துவமான அணுகுமுறை விதிமுறைகளை உருவாக்கவில்லை. நீர் நிலைக் கரைகளைச் சேதப்படுத்தினால், சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை தேவை.

சென்னை மற்றும் பல இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அரசியல் காரணங்களால் முறைப்படுத்தப்பட்டுவிட்டன. இனி அங்கே என்ன செய்ய முடியும்?

சென்னையைச் சுற்றி முன்பு நெல் சாகுபடி செய்யும் விவசாய நிலங்களாக இருந்தன. இதற்கான நீர்நிலைகள் பாசனத்துக்காக இருந்தன. இப்போது சில ஏரிகள் மட்டுமே இருக்கின்றன. வேளாண் நிலங்கள் முறையான அனுமதியின்றி குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்பட்டன. பல குடியிருப்புகள் தன்னிச்சையாக உருவானவை; பின்னர் அவை முறைப்படுத்தப்பட்டன. மழை நீர் ஏரிகளை நோக்கி வருகின்றன. ஆனால், வீடுகள் தடுக்கின்றன. இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

தண்ணீர் போகும் இடங்களில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டதால், புதிதாக வேறு எந்தக் கால்வாயையும் உருவாக்க முடியாத சூழல். இதனால்தான் இந்த இடங்களில் தண்ணீர் வடிவதற்கு கட் அன்ட் கவர்' எனப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாலையை வெட்டி, சுமார் 30 முதல் 60 அடி அகலம், 5 முதல் 8 அடி ஆழம் கொண்ட ஒரு பெரிய சுரங்கப்பாதை மாதிரி தண்ணீர் செல்ல கால்வாய் அமைக்கப்படுகிறது.

பிறகு அதை மூடி, போக்குவரத்துக்கு ஏதுவாக மாற்றப்படுகிறது. மேலை சாலை, கீழே கால்வாய் இது தான் கட் அன்டு கவர் முறை. தாம்பரம் - முடிச்சூர் சாலை - பாபன் கால்வாய் சந்திப்புப் பகுதி, ஆதனூர், சிட்லப்பாக்கம், பள்ளிக்கரணை முதல் நாராயணபுரம் ஏரி; ஊரப்பாக்கம் - நந்திவரம் ஏரி உபரி நீர் போன்றவை கட் அன்ட் கவர்' முறை செயல்படுத்தப்பட்டு சாலைக்கு அடியில் தண்ணீர் செல்ல வழித்தடங்கள் உருவாக்கப்பட்டது. இந்த வெற்றிகரமான கட் அன்ட் கவர்' முறையை சென்னை நகருக்குள்ளேயும் பல பகுதிகளுக்கும் தேவை.

வெள்ளத்தைத் திருப்பிவிட என்ன செய்யலாம்?

நீர் வளப் பாதுகாப்பு மற்றும் நதி சீரமைப்புக் கழகத்தின்' தலைவராகவும் நான் இருந்தபோது அரசுக்கு ஒரு திட்ட முன்மொழிவைக் கொடுத்தேன்.

அதன் மூலம் சிக்கராயபுரம் பகுதியில் இருந்த 24 கல் குவாரிகள் ஏரிகளாக மாற்றப்பட்டன. இதற்கு வருவாய்த் துறை பேரிடர் நிவாரண நிதியின் கீழ் சென்னைக் குடிநீர் வாரியத்துக்கு (சி.எம்.டபிள்யு.எஸ்.எஸ்.பி.) நிதியும் வழங்கப்பட்டது. இதன்படி செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் வழித்தடத்திலிருந்து இந்தக் குவாரிகளுக்கு நீரை திருப்பினோம். இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது. இதன் மூலம் முழுமையான நீர் சேமிப்பும் சாத்தியமானது. இது ஒரு வெள்ள தணிப்பு நடவடிக்கையாகவும் வறட்சிக் காலத்தில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதாகும் அமைந்தது.

வேளச்சேரி, ஆதனூர், ஆரம்பாக்கம் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதி. வரத்தூர், ஆரம்பாக்கம் ஆகிய இடங்களில் இரண்டு சிறிய பாசனக் குளங்கள் இடையே அரசு நிலம் உள்ளது. இவைகளை ஒருங்கிணைத்து மிகப் பெரிய நீர்த் தேக்கத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் தண்ணீர் வெள்ளமாகப் போவதைத் தடுக்க முடியும்.

வேளச்சேரியில் வெள்ளம் அதிகமாக இருப்பதற்குக் காரணம் உண்டு. அந்தப் பகுதியிலுள்ள தண்ணீர் முன்பெல்லாம் அங்குள்ள ஏரிக்குள் சென்று, பின்னர் கடலுக்குச் சென்றது. கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்பு வறட்சிக்காலத்தில் தண்ணீர் இல்லாததைப் பயன்படுத்தி இந்த ஏரிப்பகுதியை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் குடிசை மாற்று வாரியமும் கையகப்படுத்தி வீடுகளைக் கட்டியது. சில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாவும் வழங்கப்பட்டது. இதனால் மழைத் தண்ணீர் வெளியே போகமுடியாமல் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து வருகிறது.

இதற்கு ஒரே தீர்வு, அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள ரேஸ்-கோர்ஸ் பகுதியை நீர் நிலையாக ஏரியாக மாற்ற வேண்டும். ஏற்கெனவே தேசியப் பசுமைத் தீர்ப்பாயமும் (என்.ஜி.டி.) உத்தரவிட்டுள்ளது. வேளச்சேரி பகுதி இந்த ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு மேல் மட்டத்தில் இருப்பதால், அங்குள்ள தண்ணீர் வர தடையாக இருக்காது. இதே போன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கத் தவறினால் சுற்றுப்பகுதி கடுமையான பாதிப்பை சந்திக்கும்.

நிகழாண்டின் எல் நினோ' தொடர்புடைய அச்சத்தில் நாம் செய்ய வேண்டியது; ஒருபுறம் தயார்நிலை நடவடிக்கைகள், மறுபுறம் பாதிப்புத் தணிப்பு நடவடிக்கைகள் - இவை இரண்டையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் இயற்கையின் ஒரு சிறிய அங்கம்; இயற்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நாம் அதைச் சரியாகக் கையாள முடியும்.

2018-ஆம் ஆண்டில் தமிழகப் பேரிடர் மேலாண்மைத் துறை வெள்ளம் பாதிப்பு தணிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை அடையாளம் கண்டு வகைப்படுத்தியது. அதாவது குறைந்த, மிதமான, அதிக பாதிப்பு அபாயம் கொண்ட பகுதிகள் என வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அடையாளம் காணப்பட்டது. கடந்த கால தாக்கங்கள் அடிப்படையில் இந்தப் பகுதிகள் பிரிக்கப்பட்டது. பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகக்

கூடிய பகுதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அப்போதுதான் அவர்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்போது சரியான முடிவுகளை எடுக்கமுடியும். அது தொழிற்சாலைக்காகவோ அல்லது குடியிருப்புக்காகவோ இருக்கலாம். அதேபோல, திட்டமிடல் அதிகாரிகளும் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

கே. சத்தியகோபால்

இப்போதைய அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

புயல் அல்லது மழைக்கான முன்னறிவிப்பு கிடைத்தவுடனே அந்தந்த இடங்களில் நிர்வாக இயந்திரம் முன்கூட்டியே தயார் நிலையில் இருக்க வேண்டும். நாட்டிலேயே ஒடிஸாவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் மாநில அளவிலான பேரிடர் மீட்புப் படை உள்ளது. முதற்கட்ட மீட்புப் பணியாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இதில் இணைக்க வேண்டும். இதற்கு ஆபத் மித்ரா' என்று பெயர்.

ஐ.நா. வுடன் பதிவு செய்யப்பட்ட பிராந்திய ஒருங்கிணைந்த பல்முனைப் பேரிடர் முன் எச்சரிக்கை அமைப்புடன் (ரைம்ஸ்) இணைந்து டிஎன்-ஸ்மார்ட்' என்கிற இணையச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து தரவுகளும் பொது வெளியில் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 4,399 பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன. சென்னை பெருநகரத்தில் 207 பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இந்தச் செயலி மூலம் சென்னையில் எந்தெந்த மண்டலங்களில் எந்தெந்தப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்போகிறது என்பதை அறியலாம். தற்போது பொதுவெளியில் இந்தத் தரவுகளை வெளியிடவேண்டாம் என்று செய்யப்பட்டுள்ளது. இது சரியான முடிவா என்பதை மறு

பரிசீலனை செய்யவேண்டும். இந்தச் செயலி அவசரக் கால செய்திகளை (சுனாமி, புயல் எச்சரிக்கை) செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

சென்னை வெள்ளத்துக்குத் தீர்வு காண மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இதை வெளியிட்டு தீர்வு காணவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments